கிழக்கு ஆப்பிரிக்க நாடான யுகாண்டாவின் தலைநகர் கம்பாலாவில் உள்ள நாடாளுமன்ற கட்டடத்துக்கு அருகே, நவம்பர் 16ம் தேதி செவ்வாய்கிழமை தற்கொலை குண்டுதாரிகளால் தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் குறைந்தபட்சம் மூன்று பேர் கொல்லப்பட்டதாகவும், 30 பேருக்கு மேல் காயமடைந்துள்ளதாகவும் காவல்துறை கூறியுள்ளது.
குண்டுகளை கட்டிக்கொண்டு வந்க மூன்று தற்கொலை குண்டுதாரிகள் நாளுமன்ற கட்டடத்துக்கு அருகில் உள்ள நகர காவல்துறை தலைமையகம் பகுதிக்கு சில அடி தூரத்தில் மூன்று நிமிடங்களுக்குள் அடுத்தடுத்து குண்டுகளை வெடிக்கச் செய்தனர்.
இந்த சம்பவத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும், நடந்த தாக்குதலுக்கு இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் குழு பொறுப்பேற்றிருப்பதாகவும் அமாக் முகமையின் செய்திகள் கூறியுள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடையாக சந்தேகிக்கப்படும் நான்காவது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் உடலில் பொருத்தி இருந்த வெடிபொருள் ஆடையை வெடிக்க வைப்பதற்கு முன் அவரை பிடித்ததாக காவல்துறை கூறுகிறது.