Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சீனாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியை செலுத்திக் கொள்ள நேபாளம் பறக்கும் இந்தியர்கள் - காரணம் என்ன?

சீனாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியை செலுத்திக் கொள்ள நேபாளம் பறக்கும் இந்தியர்கள் - காரணம் என்ன?
, ஞாயிறு, 18 ஏப்ரல் 2021 (13:45 IST)
சமீபத்தில் நேபாள நாட்டுக்கு இந்தியாவில் இருந்து கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசி டோஸ்களை அனுப்பி வைக்க கால தாமதமாவதால், அந்நாட்டுக்கு சீனா கொடுத்த வெரோ செல் தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தத் தொடங்கி இருப்பதாக கடந்த ஏப்ரல் 7-ம் தேதி ஏ என் ஐ செய்தி முகமை செய்தி வெளியிட்டது.

இந்த வாரம் புதன்கிழமை, நேபாளத்தில் தலை நகரில் இருக்கும் டாகு மருத்துவமனை ஊழியர்கள், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள பெரிய பைகளோடு சிலர் வந்ததைப் பார்த்து ஆச்சர்யப்பட்டுப் போனார்கள்.

அவர்களிடம் தங்கள் அடையாள அட்டைகளைக் காண்பிக்கும்படி கேட்டபோது, அவர்கள் இந்திய பாஸ்போர்ட்டை காட்டினார்கள் என அம்மருத்துவமனையின் ஊழியர்கள் கூறினார்கள்.

"கொரோனா தடுப்பு மருந்து இப்படியும் பயன்படுத்தப்படுகிறது என்பதை இவர்கள் மூலம் அறிந்து கொண்டோம். அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த முடியாது என நாங்கள் கூறினோம். அதற்கு அவர்கள் சண்டை போடத் தொடங்கிவிட்டார்கள். அவர்களுக்கு தடுப்பூசி செலுத்த பலரும் பலவிதத்தில் அழுத்தம் கொடுக்கத் தொடங்கிவிட்டார்கள்" என அம்மருத்துவமனை இயக்குநர் சாகர் ராஜ் பண்டாரி பிபிசி நேபாளி சேவையிடம் கூறினார்.

நேபாள நாட்டில் இருக்கும் சீன தூதரகத்தின் வலைதளத்தில், சீனாவில் தயாரான கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே சீனாவில் நுழைய விசா அனுமதி வழங்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

சீனாவில் நுழைவதற்கு விசா பெற, இந்திய வியாபாரிகள் நேபாளம் வந்து, சீனத் தடுப்பூசியை செலுத்திக் கொள்வதாக சந்தேகிக்கத் தொடங்கி இருக்கிறார்கள் நேபாள அதிகாரிகள்.

இந்தியாவில் கோவிஷீல்ட் மற்றும் கோவேக்சின் போன்ற கொரோனா தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதோடு ரஷ்யாவின் ஸ்புட்நிக் V தடுப்பூசியை பயன்படுத்தவும் அவசர கால அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மூன்று கொரோனா தடுப்பூசிகள் இந்தியாவில் கிடைக்கிற போதிலும், இந்தியாவில் உள்ள எல்லோருக்கும் கொரோனா தடுப்பூசி கிடைக்கவில்லை.

சில காலமாக நேபாளத்துக்கு நிறைய இந்தியர்கள் வருகிறார்கள் என காத்மண்டூவில் இருக்கும் திரிபுவன் சர்வதேச விமான நிலைய செய்தித் தொடர்பாளர் தேவ் சந்திர லால் கர்ணா கூறினார்.

"நேபாளத்திலிருந்து மற்ற நாடுகளுக்குச் செல்ல, இந்தியர்களுக்கு ஒரு வழி இருக்கிறது. அதைப் பயன்படுத்திக் கொள்ள, தடையில்லா சான்றிதழ் வேண்டும். இப்போது பல இந்தியர்களிடம் அச்சான்றிதழ் இருக்கிறது" என்கிறார் சந்திர லால்.

கடந்த சில நாட்களில், நேபாளத்தில் இருக்கும் இந்திய தூதரகத்தின் மூலம் பல தடையில்லா சான்றிதழ்கள் பதிவு செய்யப்பட்டன.

தற்போது இந்தியா - நேபாளம் இடையே ஒரே ஒரு விமான சேவை நிறுவனம் தான் இயங்கி வருகிறது. நேபாளம் - சீனா இடையில் விமான சேவைகள் செயல்பட்டு வருகின்றன.

நேபாளத்தில் தடுப்பூசி

கடந்த மார்ச் 31-ம் தேதி - ஏப்ரல் 19-ம் தேதி இடையே 40 முதல் 59 வயதுடையவர்களுக்கு கொரோனா தடுப்பூசி மருந்து செலுத்தப்பட்டு வருகிறது. இவர்களைத் தவிர, சீனாவுக்கு வேலை, வியாபார நிமித்தம் செல்பவர்கள், குடும்ப விவகாரம், மருத்துவ சிகிச்சைகள் சம்பந்தமாக செல்பவர்கள் ஆகியோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. சீனப் பல்கலைக்கழகங்களில் படிக்கும் நேபாள மாணவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

முதல் 10 நாட்களில் 50,000 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாகக் கூறுகிறது நேபாள அரசு.

"முதலில் அடையாள அட்டையைக் காண்பிக்குமாறு மக்களிடம் கூறினோம். தற்போது எழுத்துபூர்வமாக, கட்டாயமாக அடையாள அட்டைகளைச் சரி பார்க்குமாறு மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம்" என நேபாளத்தின் சுகாதாரத் துறை இணை செய்தித் தொடர்பாளர் மருத்துவர் சமிர் குமார் அதிகாரி கூறினார்.

நேபாளத்தில் வாழும் இந்தியர்களுக்கும், சிறு வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என நேபாள அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிகரித்து வரும் கொரோனா; தேர்தல் பிரச்சாரம் ரத்து! – ராகுல்காந்தி அறிவிப்பு!