Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கத்தார் சிறையில் இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் - இவர்களை விடுவிப்பது மோதி அரசுக்கு சவாலாக இருப்பது ஏன்?

prison
, வெள்ளி, 12 மே 2023 (22:27 IST)
கத்தார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்தியர்கள், கத்தார் கடற்படைக்காக பணிபுரியும் ஒரு நிறுவனத்தில் உயர் பதவிகளை வகித்தவர்கள்.
 
அது 2022 ஆகஸ்ட் 30 ஆம் தேதி இரவு. கத்தாரில் பணிபுரியும் 8 முன்னாள் இந்திய கடற்படையினர், உளவுத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். இந்த திடீர் நடவடிக்கைப் பிறகு அவர்கள் அனைவரும் தோஹாவில் உள்ள சிறையில் மற்ற கைதிகளிடமிருந்து தனியாக வைக்கப்பட்டனர்.
 
சிறையில் அடைக்கப்பட்ட இந்த இந்தியர்கள், கத்தார் கடற்படைக்காக வேலை செய்யும் ஒரு நிறுவனத்தில் உயர் பதவிகளை வகித்தவர்கள்.
 
இந்த இந்தியர்களில் மூன்று பேர் ஓய்வு பெற்ற கேப்டன்கள், நான்கு பேர் கமாண்டர்கள் மற்றும் ஒருவர் மாலுமி. இவர்கள் கடந்த ஒன்பது மாதங்களாக 'கடும் குற்றவாளிகள்' போல தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் என்று ஒரு முன்னாள் இந்திய தூதாண்மை அதிகாரி கூறுகிறார்.
 
அவர்களை காவலில் வைத்திருப்பதற்கான காரணத்தை கத்தார் அரசுஅதிகாரபூர்வமாக இன்னும் தெரிவிக்கவில்லை என்பது வியப்பாக உள்ளது.
 
ஆனால் கைது செய்யப்பட்ட இந்தியர்கள் தோஹாவில் பணிபுரிந்த போது நீர்மூழ்கிக் கப்பல் திட்டம் குறித்து முக்கியமான தகவல்களை
 
இஸ்ரேலுடன் பகிர்ந்து கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளனர் என்று உள்ளூர் மற்றும் சர்வதேச ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
 
கத்தாரில் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை விதிக்கப்படும் சட்டம் உள்ளது.
 
சிறையில் உள்ள இந்த இந்தியர்கள் தாஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் மற்றும் கன்சல்டிங் சர்வீசஸில் பணிபுரிந்து வந்தனர்.
 
இந்த நிறுவனம் கத்தார் கடற்படைக்காக நீர்மூழ்கிக் கப்பல் திட்டத்தில் பணியாற்றி வந்தது. ரேடாரைத் தவிர்க்கும் ஹைடெக் இத்தாலிய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் நீர்மூழ்கிக் கப்பல்களைப் பெறுவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
 
கடந்த வாரம் இந்த நிறுவனத்தை மூட கத்தார் உத்தரவிட்டது. அதன் ஊழியர்களில் சுமார் 70 பேர் மே மாத இறுதிக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் இந்திய கடற்படையின் முன்னாள் பணியாளர்கள்.
 
இந்தியக் குடிமக்கள் கைது செய்யப்பட்டிருப்பது இந்தியாவுக்கும் கத்தாருக்கும் இடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்தியது மட்டுமின்றி, அவர்களை பத்திரமாக நாட்டுக்கு திரும்ப அழைத்து வருவதும் மோதி அரசுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.
 
இந்தியர்களை மீட்டெடுப்பது எவ்வளவு பெரிய சவால்
இந்திய குடிமக்கள் கைது செய்யப்பட்டிருப்பது இந்தியாவுக்கும் கத்தாருக்கும் இடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்தியது மட்டுமின்றி, அவர்களைப் பத்திரமாக நாட்டுக்கு அழைத்து வருவது மோதி அரசுக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது.
 
இந்த விவகாரம் இந்திய அரசுக்கு பெரும் தலைவலியாகவும், பெரும் சவாலாகவும் மாறியுள்ளது என்று ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் மேற்காசிய ஆய்வுப் பேராசிரியர் ஏ.கே.பாஷா கூறினார்.
 
"இந்திய குடிமக்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெறுவதும், அவர்களை இந்தியாவுக்கு திருப்பி அழைத்து வருவதும் பெரிய பிரச்னையாக மாறியுள்ளது," என்பதை இத்தாலி மற்றும் ருமேனியாவுக்கான இந்திய தூதராக இருந்துள்ள ராஜீவ் டோக்ரா, ஒப்புக்கொள்கிறார்.
 
ராஜீவ் டோக்ரா 1980களின் பிற்பகுதியில் கத்தாரில் இந்திய தூதராகவும் இருந்தார். "கைது செய்யப்பட்ட இந்திய குடிமக்கள் முக்கியமானவர்கள். அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் இந்திய கடற்படையில் பணியாற்றியவர்கள். அவர்கள் பத்திரமாக நாடு திரும்புவார்கள் என்று அவர்களது குடும்பத்தினர் நம்புகிறார்கள்," என்று அவர் தெரிவித்தார்.
 
”இந்தியர்கள் விடுவிக்கப்படுவதை உறுதிசெய்து அவர்களை திரும்ப அழைத்து வருவது அரசின் முன்னுரிமையாக இருக்க வேண்டும்,” என்று ஜார்ஜியா மற்றும் ஆர்மீனியாவிற்கான முன்னாள் இந்திய தூதர் அச்சல் மல்ஹோத்ரா கூறுகிறார்.
 
அவர்கள் தூதரகத்திலிருந்து போதுமான சட்ட மற்றும் பிற உதவிகளைப் பெறுவதை உறுதிசெய்வது இந்திய அரசின் தார்மீக பொறுப்பு என்று அச்சல் மல்ஹோத்ரா குறிப்பிட்டார்.
 
ஆசிஃப் ஷுஜா சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் மத்திய கிழக்கு நாடுகளின் கிளைக் கல்வி நிலையத்தில் ஒரு மூத்த ஆராய்ச்சி உறுப்பினராக உள்ளார். இந்த விவகாரத்தை இந்திய அரசுக்கு முன் இருக்கும் சவாலாக அவர் கருதவில்லை.
 
சிறையில் இருக்கும் இந்தியர்களைப் பற்றி அவர் கவலைப்படவில்லை. ஏனென்றால் இவர்கள் கண்டிப்பாக விடுதலை செய்யப்படுவார்கள் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார்.
 
இந்த விவகாரத்தில் கத்தார் அரசு அமைதியாக இருக்கிறது. இந்திய அரசும் வெளிப்படையாக அதிகம் எதையும் கூறவில்லை. வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சியிடம் இது குறித்து சமீபத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.
 
"காவலில் வைக்கப்பட்டுள்ள இந்தியர்களுக்கு எல்லா உதவிகளையும் வழங்க முழு முயற்சி செய்கிறோம் என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன். மேலும் சட்ட நடவடிக்கைகளில் தூதரகத்திலிருந்து அளிக்கப்படும் பிற உதவிகளுடன் சட்ட உதவிகளையும் வழங்குகிறோம்,” என்று மட்டுமே அவர் பதில் அளித்தார்.
 
"நாங்கள் கத்தார் அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறோம், தோஹாவில் உள்ள எங்கள் தூதரகம் குடும்பங்களுடன் தொடர்பில் உள்ளது," என்று அவர் மேலும் கூறினார்.
 
கத்தார் அரசு குற்றச்சாட்டுகளை வெளியிடாததால், சிறையில் இருக்கும்இந்தியர்களின் நிலைமை மேலும் சிக்கலாகி வருகிறது.
 
இது அவர்களது குடும்பத்தினரின் கவலையை மேலும் அதிகரித்துள்ளது. மார்ச் மாத இறுதியில் நடந்த முதல் நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு மே 3 அன்று நடந்த இரண்டாவது விசாரணையில் அரசு தரப்பு, குற்றச்சாட்டுகளை பகிரங்கப்படுத்தியிருக்க வேண்டும்.
 
ஆனால் அது நடக்கவில்லை. குற்றச்சாட்டுகளின் ஆவணங்கள் மற்றும் விவரங்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு இந்திய தூதரகத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர், அரசுத் தரப்பிடம் கேட்டுக்கொண்டார். இந்த வழக்கு விசாரணைக்கு நீதிமன்றம் புதிய தேதி எதுவும் தெரிவிக்கவில்லை.
 
பயங்கரவாதம் மற்றும் உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில் குல்பூஷண், பாகிஸ்தானால் கைது செய்யப்பட்டார். 2017 ஆம் ஆண்டு பாகிஸ்தானின் ராணுவ நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது.
 
இதுபோன்ற சர்வதேச விவகாரங்களில் இதற்கு முன்பு என்ன நடந்தது?
குல்பூஷண் ஜாதவ் வழக்கு: பயங்கரவாதம் மற்றும் உளவு பார்த்ததாக பாகிஸ்தானால் கைது செய்யப்பட்ட குல்பூஷணுக்கு பாகிஸ்தானின் ராணுவ நீதிமன்றம் 2017-ம் ஆண்டு மரண தண்டனை விதித்தது.
 
குல்பூஷண் ஜாதவ் இந்தியாவுக்காக உளவு பார்த்தார் என்ற குற்றச்சாட்டை இந்தியா மறுத்தது. ஒரு பிஸினெஸ் பயணத்திற்காக சென்றிருந்த குல்பூஷண் ஜாதவ் இரானில் இருந்து கடத்திச் செல்லப்பட்டதாக பாகிஸ்தான் மீது இந்தியா குற்றம் சாட்டியது.
 
சர்வதேச நீதிமன்றத்தின் கதவைத் தட்டிய இந்தியா, பாகிஸ்தான் நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்தி வைக்க நீதிமன்றத்திடம் அனுமதி பெற்றது. குல்பூஷண் ஜாதவுக்கு தூதரக உதவி மற்றும் சந்திப்பு வாய்ப்புகளை வழங்குமாறு பாகிஸ்தானை சர்வதேச நீதிமன்றம் கேட்டுக் கொண்டது. இருப்பினும் இந்த விவகாரத்தில் பாகிஸ்தான்தான் அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
 
ஜாதவை பாகிஸ்தான் இந்நேரம் விடுதலை செய்திருக்க வேண்டும் என்கிறார் கராச்சியில் இந்திய தூதரக அதிகாரியாக இருந்த ராஜீவ் டோக்ரா.
 
"சர்வதேச நீதிமன்றத்தைப் பற்றி பாகிஸ்தான் கவலைப்படவில்லை. இல்லையெனில் இந்த தீர்ப்பு வந்த உடனேயே ஜாதவை அது விடுவித்திருக்கும்," என்று அவர் கூறினார்.
 
27 லட்சத்திற்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட நாடான கத்தார், இந்தியாவுடன் ஒப்பிடும்போது நிச்சயமாக ஒரு சிறிய நாடுதான். ஆனால் இது பலவீனமானவர்களுக்கும் வலிமையானவர்களுக்கும் இடையிலான போட்டி அல்ல.
 
”இராக்கில் இரண்டு இந்தியர்கள் கடத்தப்பட்டபோது, ​​கத்தாரில் உள்ள ஷரியா நீதிமன்றத்தின் தலைவர் தலையிட்டு இரு இந்தியர்களையும் விடுதலை செய்தார் என்பது எனக்கு நினைவிருக்கிறது” என்று அவர் கூறுகிறார்.
 
பிரிட்டனின் செவிலியர்கள் நாடு திரும்பிய விவகாரம்: 1997 ஆம் ஆண்டில், ஆஸ்திரேலிய செவிலியர் ஒருவரை கொலை செய்த குற்றத்திற்காக செளதி அரேபியாவில் இரண்டு பிரிட்டிஷ் செவிலியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
 
பின்னர் செளதி அரசு பிரிட்டிஷ் அரசின் அழுத்தத்திற்கு அடிபணிந்து செவிலியர்களை விடுவித்தது. அவர்கள் பிரிட்டனுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.
 
போரால் பாதிக்கப்பட்ட நாடுகளில் சிக்கித் தவிக்கும் குடிமக்கள் தாயகம் திரும்புதல்:
 
பிரச்சனைகளின் போது தனது குடிமக்களை நாட்டிற்கு திரும்ப அழைத்து வந்த இந்தியாவின் சாதனை பாராட்டுக்குரியது.
 
1990-91 இல் குவைத் மீதான இராக் படையெடுப்பின் போது அங்கு சிக்கித் தவித்த இந்தியர்களாக இருந்தாலும் சரி அல்லது யுக்ரேனில் சிக்கித் தவித்த மாணவர்களாக இருந்தாலும் சரி அல்லது சமீபத்தில் சூடானில் சிக்கியவர்களாக இருந்தாலும் சரி, இந்தியா அவர்களை வெற்றிகரமாக தாயகம் அழைத்து வந்துள்ளது.
 
நீதிமன்றத்தில் தாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிக்க சிறையில் இருக்கும் தனது குடிமக்களுக்கு நல்ல வழக்கறிஞர்களை இந்தியா வழங்குவது முக்கியம் என்று தூதாண்மை அதிகாரிகள் கூறுகிறார்கள்.
 
ஆனால் இதுமட்டும் போதாது. 27 லட்சத்திற்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட நாடான கத்தார், இந்தியாவுடன் ஒப்பிடும்போது நிச்சயமாக ஒரு சிறிய நாடுதான்.
 
ஆனால் இது பலவீனமானவர்களுக்கும் வலிமையானவர்களுக்கும் இடையிலான போட்டி அல்ல. செளதி அரேபியா போன்ற பெரிய மற்றும் சக்திவாய்ந்த அண்டை நாடுகளுடன் கத்தார் மோதியுள்ளது. செளதி அரேபியா அமெரிக்காவிற்கு மிக நெருக்கமாக இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இருந்தபோதிலும் கத்தார் தனது சக்திவாய்ந்த அண்டை நாட்டிடம் பயப்படவில்லை.
 
2001 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் படையெடுப்பின் போது, ​​அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், கத்தார் அரசின் ஆதரவு பெற்ற ஒரு கூட்டமைப்பினால் இயக்கப்படும் அரபு தொலைக்காட்சியான 'அல் ஜசீரா' குறித்து கத்தார் அமிரிடம் (கத்தார் தலைவர்) புகார் செய்தார்.
 
இதற்கு பதிலளித்த கத்தார் அமிர், 'அமெரிக்க அதிபர் சிஎன்என் ஊடகத்தின் நிர்வாகத்தில் தலையிட முடியாததைப் போல், 'அல் ஜசீரா' -வின் நிர்வாகத்தில் தானும் தலையிட முடியாது என கூறிவிட்டார்.
 
கத்தார் கடந்த ஆண்டு FIFA உலகக் கோப்பையை வெற்றிகரமாக நடத்திய பிறகு அதன் இமேஜ் மேலும் வலுவானது. இந்தியாவின் வளர்ந்து வரும் உலகளாவிய அந்தஸ்து குறித்து கத்தார் கவலைப்படவில்லை என்று தெரிகிறது. முன்னாள் பாஜக செய்தித் தொடர்பாளர் நூபுர் ஷர்மா முகமது நபிகள் குறித்து சமீபத்தில் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக இந்தியாவை விமர்சித்த கத்தார் அரசின் குரல், வலிமையாக ஒலித்த வளைகுடா நாடுகளின் குரல்களில் ஒன்றாகும். அந்தச் சம்பவத்திலிருந்து இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவில் ஏற்ற-இறக்கங்கள் காணப்படுவதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.
 
இது குறித்து பேசிய பேராசிரியர் ஏ.கே. பாஷா, "நூபுர் ஷர்மா விவகாரத்திற்குப்பிறகு இரு நாடுகளுக்கும் இடையே விரிசல்கள் தென்படத் தொடங்கியுள்ளன. அதன் பின் இரு நாடுகளுக்கும் இடையே உயர்மட்டப் பயணம் எதுவும் நடக்கவில்லை," என்கிறார்.
 
மேலும், "சமீபத்திய ஆண்டுகளில் வளைகுடா நாடுகளுடனான- குறிப்பாக கத்தாருடனான இந்தியாவின் உறவுகள் முன்பை விட சிறப்பாக உள்ளன.
 
முன்பு உறவுகள் இத்தனை ஆழமாக இருக்கவில்லை. ஆனால் கடந்த சிலமாத காலமாக ஏற்ற இறங்கங்கள் காணப்படுகின்றன. காஷ்மீர் மற்றும் இந்திய முஸ்லிம்கள் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் உள்ளது," என்றும் கூறுகிறார்.
 
2023 ஆம் ஆண்டு, இந்தியா மற்றும் கத்தாருக்கு இடையிலான இருதரப்பு உறவுகளின் 50 ஆண்டுகளை நிறைவு செய்யும் ஒரு கொண்டாட்ட ஆண்டாக இருந்திருக்க வேண்டும். ஆனால் தற்போது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் அசாதாரண அமைதியும் வெளிப்படையான பதற்றமும் நிலவுகிறது. இந்தியாவும் கத்தாரும் இப்போதும் நெருங்கிய நண்பர்கள்தான். கடந்த ஆண்டு அவற்றின் இருதரப்பு வர்த்தகம் 15 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமாக இருந்தது.
 
இந்தியா தனது எரிவாயு தேவையில் 40% ஐ கத்தாரில் இருந்து இறக்குமதி செய்கிறது.
 
பிரதமர் நரேந்திர மோதி கடந்த 2016ஆம் ஆண்டு கத்தாருக்கு அரசுமுறைப் பயணமாகச் சென்றார், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பலமுறை கத்தாருக்குச் சென்றுள்ளார்.
 
ஆனால் தற்போது உறவில் அத்தனை அரவணைப்பு காணப்படவில்லை.
 
இந்திய குடிமக்கள் கைது செய்யப்பட்டதையடுத்து, கடந்த ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதி உயர்மட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.
 
ஃபிஃபா உலகக் கோப்பைக்குப் பிறகு கத்தார் அமிர் ஷேக் தமீம் பின் ஹமத் அல்தானியை பிரதமர் மோதி அழைத்து பேசியபோது அது வெறும் வாழ்த்துப் பரிமாற்றமாக மட்டுமே இருந்தது.
 
இதைத்தொடர்ந்து இந்திய பிரதமருக்கு கத்தார் அமீர் தீபாவளி வாழ்த்துகளை அனுப்பியிருந்தார்.
 
அப்போது இரு தரப்பு உறவுகளின் 50வது ஆண்டை 2023ல் கூட்டாக கொண்டாட அவர் ஒப்புக்கொண்டார்.
 
 
இந்திய அரசு இரு முனை உத்தியை செயல்படுத்த வேண்டும். முதலாவது சட்டம். இரண்டாவது அரசியல். இரண்டையும் ஒன்றாக செயல்படுத்த வேண்டும் என்று முன்னாள் தூதரக அதிகாரி அச்சல் மல்ஹோத்ரா பரிந்துரைக்கிறார்.
 
"முதல் கட்டமாக சட்டம் சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். இந்த கட்டத்தில் சிறந்த சட்ட உதவியை வழங்கிஅவர்கள் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிக்க முயற்சிக்க வேண்டும்," என்றார் அவர்.
 
இதனுடன் ஏதாவது விஷயம் தொடர்பாக நாம் கத்தாருக்கு உதவ முடியுமா என்பதைக் கண்டறிய வேண்டும், எதற்காவது அவர்களுக்கு ஆதரவளிக்க முடியுமா? அப்படியானால், இந்த விருப்பவழியை நாம் கவனிக்க வேண்டும். ஏனென்றால் நாம் அதைச் செய்தால், அவர்கள் இந்தியர்களை விடுவிக்கக்கூடும்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
 
"வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவர்களின் விடுதலையைப் பெறுவதற்கு மாற்றாக அவர்களுக்கு ஏதாவது உதவி செய்ய முடியுமா என்பதைப் பார்க்க வேண்டும்."
 
கத்தார் தனது பெரிய அளவிலான வளர்ச்சியில் இந்தியாவின் பங்களிப்பைப் பாராட்ட வேண்டும் என்றும் சிறையில் உள்ள இந்தியர்களின் விஷயத்தில் அதிக நெகிழ்வுத்தன்மையைக் காட்ட வேண்டும் என்றும் முன்னாள் தூதரக அதிகாரி ராஜீவ் டோக்ரா விரும்புகிறார்.
 
"இந்தியா-கத்தார் உறவுகள், கத்தாரின் வெற்றிக்கு இந்தியர்களின் பங்களிப்பு ஆகியவற்றை முக்கியமாக பார்க்குமாறு கத்தார் தலைவர்களிடம் நான் பரிந்துரைக்கிறேன். கத்தார் இவற்றைப் புறக்கணிக்க முடியுமா, கத்தார் பிடிவாதமாக இருக்க முடியுமா?" என்று அவர் வினவினார்.
 
இந்த முழு அத்தியாயமும் இந்தியாவுக்கும் கத்தாருக்கும் இடையிலான வலுவான இருதரப்பு உறவுகளை கெடுக்கும் சதி என்று ராஜீவ் டோக்ரா சந்தேகிக்கிறார்.
 
"அந்த நாடு பிரபலமடையத்தொடங்கிய காலத்தில் நான் கத்தார் நாட்டில் இந்திய தூதரக அதிகாரியாக பணியாற்றினேன். இது 80 களின் பிற்பகுதியில் நடந்தது. ஷரியா நீதிமன்றத்தின் தலைவர் முதல் நாட்டின் தலைவர் (அமீர்) வரை அனைவரையும் என்னால் அணுக முடிந்தது.
 
அப்போது இரு நாடுகளுக்கிடையே வலுவான உறவுகள் இருந்தன. ஆனால் அந்த உறவுகள் இந்த அளவுக்கு பலவீனமடைந்தது எப்படி என்று நான் ஆச்சரியப்படுகிறேன். இந்தியாவுக்கு எதிராக கத்தார் அமீரிடம் யாராவது ஏதாவது சொல்லியிருப்பார்களோ,” என்று அவர் கேள்வி எழுப்பினார்.
 
"கத்தாரில் ஒரு முக்கியமான திட்டத்தில் இந்தியர்கள் வேலை செய்வதைவிரும்பாதவர்கள் உள்ளனர். இந்தியர்கள் சிக்க வைக்கப்பட்டுள்ளனர் என்பதை நீங்கள் மறுக்க முடியாது," என அவர் மேலும் பேசுகையில் தெரிவித்தார்.
 
சிறிய விஷயங்களை விட்டுவிட்டு முக்கிய விஷயங்களை பார்க்குமாறு ஆசிஃப் ஷுஜாவும் கத்தாரை அறிவுறுத்துகிறார். ”முக்கிய விஷயம் புவிசார் அரசியல். கத்தாரும் இரானும் நெருக்கமாக உள்ளன. இரானும் இஸ்ரேலும் பரஸ்பர எதிரிகள். இந்தியாவும் இஸ்ரேலும் நெருக்கமாக உள்ளன, ஆனால் இந்தியா இரானுடனும் நல்ல உறவைக் கொண்டுள்ளது. இரான் விஷயத்தில் இஸ்ரேல் இந்தியாவை முழுமையாக நம்பாது. இஸ்ரேல் ஏதாவது செய்தால் அதில் இந்தியாவுக்கு எந்தப்பங்கும் இருக்கமுடியாது," என்று அவர் கூறுகிறார்.
 
கத்தாரின் இந்த கடுமையான நிலைப்பாட்டின் அர்த்தத்தை பேராசிரியர் பாஷா விளக்குகிறார். "உளவு வேலையில் இந்தியாவின் பங்கு இருப்பதாக கத்தார் சந்தேகிக்கிறது," என்கிறார் அவர்.
 
"இந்த நீர்மூழ்கிக் கப்பல் திட்டத்தில் இஸ்ரேல் மிகவும் ஆர்வமாக உள்ளது, ஏனெனில் கத்தார் இரானின் நல்ல நண்பன் மற்றும் இரான் இந்த நீர்மூழ்கிக் கப்பலில் ஆர்வமாக இருப்பதாக இஸ்ரேல் சந்தேகிக்கிறது. இஸ்ரேல் நேரடியாக உளவு பார்க்க முடியாது என்பதால் இந்திய மாலுமிகளை இந்த வேலைக்கு பயன்படுத்தியதாக கத்தார் நம்புகிறது. இந்த அதிகாரிகள், முன்கூட்டிய ஓய்வுக்குப் பிறகு இந்த திட்டத்துடன் தொடர்பு கொண்டுள்ளனர். எனவே கத்தார் இந்திய அரசின் மீது சந்தேகம் கொண்டுள்ளது," என்றார் அவர்.
 
 
ஆனால் இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இந்த நிறுவனத்தை நடத்தி வரும் ஓமன் நாட்டு குடிமகன், எட்டு ஆண்டுகளுக்கு முன்பு கடற்படை அதிகாரிகளுக்கு வேலை கொடுத்துள்ளார்.
 
அந்த ஓமன் குடிமகனும் கைது செய்யப்பட்டார். ஓமன் நாட்டை சேர்ந்த இவர் நீர்மூழ்கி கப்பல் திட்டத்தை நடத்தி வந்தார். இருப்பினும், அவர் பின்னர் விடுவிக்கப்பட்டு ஓமனுக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.
 
இந்த விவகாரத்தில் இந்திய அரசுக்கு எந்தப்பங்கும் இல்லை என்பதில் உறுதியாக உள்ளதாக அச்சல் மல்ஹோத்ரா கூறுகிறார்.
 
கைது செய்யப்பட்ட இந்திய குடிமக்கள் இந்திய அரசின் ஊழியர்களோ அல்லது தோஹாவில் உள்ள இந்திய தூதரகத்துடன் இணைந்தவர்களோ அல்ல.
 
"அவர்கள் இந்திய குடிமக்கள் என்ற உறவைத் தவிர, இந்திய அரசுக்கும், அவர்களுக்கும் வேறு எந்த உறவும் இல்லை. எனவே அவர்களுக்கு வியன்னா ஒப்பந்தப்படி எல்லா வசதிகளையும் செய்து கொடுத்து அவர்களை இந்தியாவிற்கு அழைத்து வர முயற்சிப்பது நம் பொறுப்பு," என்றார் அவர்.
 
 
கத்தார் அமிர் ஷேக் தமீம் பின் ஹமத் அல்தானியுடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி. இந்த படம் 2015 மார்ச் மாதம் எடுக்கப்பட்டது.
 
 
மேலும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியின் நேரடித் தலையீடு வராது என்றும் அவர் கூறுகிறார். கத்தார் இந்தியாவின் பக்கம் இருந்த வரலாறு உண்டு என்று அவர் குறிப்பிடுகிறார்.
 
”2016ஆம் ஆண்டு நரேந்திர மோதி கத்தாருக்குச் சென்றபோது, ​​கத்தார் சிறையில் இருந்த 23 இந்தியர்களை நல்லெண்ணச் செயலாக விடுவித்ததை நாம் மறந்துவிடக் கூடாது. இது பற்றி பிரதமர் மோதியும் ட்வீட் செய்திருந்தார். நம்மிடம் இதற்கு உதாரணம் உள்ளது,” என்றார் அவர்.
 
முன்னாள் தூதரக அதிகாரி ராஜீவ் டோக்ராவும் பிரதமர் மோதி தலையிட இது சரியான நேரம் அல்ல என்று வாதிடுகிறார்.
 
“பிரதமர் தலையிடுவார் என்று நான் நினைக்கவில்லை, எல்லாவற்றிலும் பிரதமரை ஈடுபடுத்தக் கூடாது. தூதரக சேனல், அமைச்சர்களின் சேனல் பயன்படுத்தப்பட வேண்டும். பிரதமரிடம் செல்வதற்கு முன் எல்லா வழிகளையும் ஆராய வேண்டும். சில நேரங்களில் நீங்கள் ஒரு நாட்டிடம் உதவி கேட்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பீர்கள். ​​ஆனால் இது சரியான நேரம் அல்ல," என்று அவர் கூறினார்.
 
இந்த விஷயத்தில் பிரதமரின் தலையீட்டிற்கு அவசரம் காட்டக்கூடாது என்று அச்சல் மல்ஹோத்ரா கருதுகிறார். "அப்படிச் செய்வதற்கு அவசரப்படக்கூடாது. சட்டப்பூர்வ நடவடிக்கை இப்போதுதான் தொடங்கியுள்ளது. இப்போது அவசரம் இல்லை," என்கிறார் அவர்.
 
அதே நேரத்தில், பிரதமரின் உதவியை நாடுவது ஒரு நாசூக்கான விஷயமாக இருக்கலாம் என்று அவர் கருதுகிறார். "பிரதமர் கத்தாரிடம் உதவி கேட்பாரா என்பது ஒரு பெரிய கேள்வி. இது ஆபத்தானது. கத்தார் பதிலளிக்கவில்லை என்றால், அது அவரது உலகத்தலைவர் இமேஜை சேதப்படுத்தும்."
 
விசாரணையின் மெதுவான வேகம் என்பது சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்தியர்களின் உறவினர்களுக்கு நீண்ட காத்திருப்பு மற்றும் இந்திய அரசின் பொறுமைக்கு ஒரு சோதனையாகும். அவர்களை மீண்டும் நாட்டுக்கு கொண்டு வருவதில் மோதி அரசு வெற்றி பெற்றாலும் அதற்கு நீண்ட காலம் ஆகலாம்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஊழலில் சிக்கிய 1 லட்சத்து 10 ஆயிரம் அதிகாரிகளுக்கு தண்டனை!