Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தேர்தல் வெற்றிகளை AI தொழில்நுட்பம் தீர்மானிக்கும் காலம் வந்து விட்டதா?

தேர்தல் வெற்றிகளை AI தொழில்நுட்பம் தீர்மானிக்கும் காலம் வந்து விட்டதா?
, திங்கள், 8 மே 2023 (22:18 IST)
மார்ச் 31, 2023 மிக முக்கியமான நாள். அன்றுதான் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. அதேநேரத்தில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், துணை அதிபர் கமலா ஹாரிசும் வெள்ளை மாளிகையில் கொண்டாடியது போன்ற வீடியோ ஒன்று வைரலானது.
 
அந்த வீடியோவை கூர்ந்து நோக்கினால், அதில் கமலா ஹாரிசுக்கு 6 விரல்கள் இருந்தன. கையின் மேல் பாகம் தென்படவில்லை.
 
உண்மையில், அதிபரும், துணை அதிபரும் அன்றைய தினம் வெள்ளை மாளிகையில் இல்லை. ஆனால், இந்த போலி வீடியோக்கள் லட்சக்கணக்கானோரை சென்றடைந்துவிட்டன.
 
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்டு உருவாக்கப்பட்ட அந்த வீடியோக்கள் பரப்புரை ஆதாரமாகவே பயன்படுத்தப்பட்டன. அதுபோன்ற புகைப்படங்கள், வீடியோக்கள், கட்டுரைகளை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் உருவாக்கி அடுத்த அதிபர் தேர்தலில் லட்சக்கணக்கானோரை வெகு விரைவாக சென்றடையச் செய்ய முடியும்.
 
 
வாக்காளர்களின் சுயவிவரங்களை சேகரித்து, சிறுசிறு குழுக்களாக பகுத்துக் கொண்டு அவர்களின் தேவையறிந்து போலி செய்திகளை உருவாக்கி அவர்களுக்கு பரப்பிவிட முடியும்.
 
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் இயங்கும் சாட்-ஜிபிடி கடந்த ஆண்டு நவம்பரில் தொடங்கப்பட்டது. அது பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தற்போது கிடைக்கிறது.
 
இந்த சாட்-ஜிபிடியால் இணையத்தில் உள்ள தரவுகளை சேகரித்து கட்டுரைகள், பிளாக் போன்றவற்றை எழுத முடியும். கவிதைகள், பாடல்களைக் கூட எழுத முடியும்.
 
அதுபோன்ற தருணங்களில், வாக்காளர்களால் தங்களுக்குக் கிடைக்கும் தகவல்கள் உண்மையா அல்லது போலியா என்பதை அறிவது கடினமான ஒன்றாகிவிடும்.
 
அமெரிக்காவின் அடுத்த அதிபரை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் தீர்மானிக்க முடியுமா?
 
டிஜிட்டல் அரசியல்
தேர்தல் அரசியலில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப பயன்பாட்டை அறிந்து கொள்ள ஹையர் கிரவுண்ட்ஸ் லேப் இணை நிறுவனரான பெட்ஸி ஹூவரை சந்தித்தோம்.
 
தேர்தல் பரப்புரைக்கான தொழில்நுட்ப மேம்பாட்டிற்காக இந்த நிறுவனம் பெருமளவு முதலீடு செய்துள்ளது. அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமாவின் தேர்தல் பிரசார ஒருங்கிணைப்பாளராக 2007-ம் ஆண்டு பெட்ஸி ஹூவர் பணியாற்றினார்.
 
"தேர்தல் பிரசாரத்தில் மக்களை தொடர்பு கொள்ளவும், அவர்களை ஒருங்கிணைக்கவும் அந்த நேரத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்திய முதல் வேட்பாளர் ஒபாமாதான். அந்த நேரத்தில் எங்களிடம் ஆட்கள் மற்றும் பணப் பற்றாக்குறை இருந்தது. அந்த தடங்கலை சரி செய்ய டிஜிட்டல் தொழில்நுட்பமே எங்களிடம் இருந்த தீர்வாக அமைந்தது. அதற்காக முதலில் மாகாண அளவிலும் பின்னர் தேசிய அளவிலும் வியூகங்களை நாங்கள் வகுத்தோம்." என்று பெட்ஸி ஹூவர் கூறினார்.
 
பணத்தை சேமிப்பது மட்டும் அல்ல, மக்களை திறமையாக சென்றவடைதுமே எங்கள் நோக்கமாக இருந்தது.
 
வீட்டிலோ, அலுவலகத்திலோ அல்லது வேறு எங்கோ இருந்தாலும் மக்களின் செல்போன் எப்போதும் ஸ்விட்ச் ஆன் செய்யப்பட்டே இருக்கும். அதனால்தான், டிஜிட்டல் வழியே மக்களை தொடர்பு கொள்வது சிறப்பானதாக இருந்தது. ஆனால், இந்த வழிமுறையில் மக்களுடன் நேரடி தொடர்பு கொள்ள முடியவில்லை என்ற அச்சம் இல்லையா?
 
அதனை ஒப்புக் கொண்ட பெட்ஸி ஹூவர், "அப்போதே இதுகுறித்து ஏராளமான விவாதங்கள் எழுந்தன. இப்போதும் கூடத்தான். எங்களது தேர்தல் செய்திகளை மக்களுக்கு குறுந்தகவல், இ-மெயில் மற்றும் பேஸ்புக் வாயிலாக நாங்கள் தொடர்ந்து அனுப்பிக் கொண்டிருந்தோம். நேரடியாக தொடர்பு கொள்வது அல்லது கொள்ளாமல் இருப்பதைக் காட்டிலும் இந்த வழிமுறை சிறந்தது என்று நாங்கள் எண்ணிக் கொண்டிருந்தோம். இந்த வழிமுறையால் ஒரே நேரத்தில் ஏராளமான மக்களை எங்களால் தொடர்பு கொள்ள முடிந்தது என்பது உண்மையே.
 
2012-ம் ஆண்டு அமெரிக்க அதிபராக ஒபாமா மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். ஆனால், அடுத்து வந்த 10 ஆண்டுகளில் தேர்தல் பரப்புரைகளில் தொழில்நுட்பத்தின் பங்கு வெகுவாக மாறிவிட்டது.
 
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியால், வாக்காளர்களின் சுயவிவரக் குறிப்புகள், தேவைகளை அறிந்து கொண்டு வேட்பாளர்கள் அவர்களது செய்திகள், பரப்புரைகளை அதற்கேற்ப மாற்றிக் கொள்ள முடியும்.
 
2024-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பெரிய அளவில் தாக்கம் செலுத்தும் என்று நம்பப்படுகிறது.
 
வாக்காளர்களின் சுயவிவரக் குறிப்புகள் மற்றும் எண்ணங்கள் அடிப்படையில் வெகுஜன மக்களுக்கான உள்ளடக்கங்களை இந்த தொழில்நுட்பத்தால் உருவாக்க முடியும். அதன் மூலம் வேட்பாளர்கள் தங்களது செய்திகளை மக்களுக்கு சிறுசிறு குழுக்களாக அளித்துவிட முடியும்.
 
”வேறுபட்ட வாக்காளர்களுக்கு ஏற்ப இ-மெயில், பரப்புரை பதிவுகளை எழுதி அனுப்ப வசதியாக ஏராளமான உள்ளீட்டு ஆசிரியர்கள், வியூக வகுப்பாளர்களை வேட்பாளர்கள் வேலைக்கு எடுப்பார்கள். உத்தியில் அதிக அளவில் மாற்றங்களைச் செய்ய அதிக பணமும், நேரமும் தேவைப்படும். ஆனால், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் மிக வேகமாகவும், குறைந்த செலவிலும் அதனை செய்துவிட முடியும்.” என்று பெட்ஸி ஹூவர் கூறுகிறார்.
 
பிரசார பொருளடக்கத்தை எளிதாகவும், குறைந்த செலவிலும் செயற்கை நுண்ணறிவு கொண்டு உருவாக்கிட முடியும் என்றாலும் அதில் சில சவால்களும் உள்ளன. இதே தொழில்நுட்பத்தை, வேட்பாளருக்கு எதிராகவும் தவறான நபர்கள் பயன்படுத்தி அவரது இமேஜை காலி செய்ய முனையும் ஆபத்தும் உண்டு.
 
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்
பெர்க்லேயில் உள்ள கலிபோர்னியா பல்கலைக் கழக பேராசிரியர் ஹனி ஃபரித்திடம் பிபிசி இதுதொடர்பாக பேசியது. குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தும் சாத்தியங்கள் குறித்து கேட்ட கேள்விக்கு, தகுந்த உதாரணங்களுடன் அவர் விளக்கம் அளித்தார்.
 
"ஒரு பெண்ணுக்கு அவரது மகளிடம் இருந்து போன் வந்த செய்தியை நீங்கள் பார்த்தீர்களா. தன்னை சிலர் கடத்திவிட்டதாக மகள் கூறுகிறாள். அந்த பெண் உடனே கணவருக்கு போன் செய்து, மகள் கடத்தப்பட்ட தகவலை தெரியப்படுத்துகிறாள். ஆனால், அந்த குழந்தையோ வீட்டில் விளையாடிக் கொண்டிருக்கிறாள். இந்த குழப்பம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் விளைந்தது. மகளின் குரலை நகலெடுத்து யாரோ அவரது தாய்க்கு குறுந்தகவல் அனுப்பியுள்ளனர். அதாவது, யாரோ அவர்களிடம் இருந்து பணம் பறிக்க முயன்றுள்ளனர்" என்று அவர் கூறினார்.
 
இந்த உதாரணங்கள் விதிவிலக்குகளாக தோன்றலாம். ஆனால், செயற்கை நுண்ணறிவு மென்பொருட்கள் எந்த அளவுக்கு வளர்ச்சியடைந்துள்ளன என்பதை இவை காட்டுகின்றன. இவற்றால் யாருடைய குரலையும் அப்படியே பிரதியெடுக்க முடியும். அதனை பிரித்தறிவது மிகவும் கடினமான விஷயம்.
 
கடந்த 20 ஆண்டுகளில் கணினிகளையும், மென்பொருட்களையும் உருவாக்கும் நமது திறன் வெகுவேகமாக அதிகரித்துள்ளது. செயற்கை நுண்ணறிவு மென்பொருள் பெருமளவு முன்னேறிவிட்டது. அதேநேரத்தில், மக்களும் அவர்களது தனிப்பட்ட விவரங்களை இணையத்தில் அதிக அளவில் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். இந்த அடிப்படையில் பார்த்தோமானால், அவர்களைக் குறிவைப்பது ஒன்றும் அவ்வளவு கஷ்டமான காரியம் அல்ல.
 
"கடந்த 20 ஆண்டுகளில் நமது புகைப்படங்கள், வீடியோக்கள், குரல் பதிவுகளை நம் விருப்பம் போல் சமூக ஊடகங்களில் நாம் பதிவு செய்து வருகிறோம். நீங்கள் எப்போதெல்லாம் ஒரு இணையதளத்திற்குள் நுழைகிறீர்களோ அப்பொதெல்லாம் அவர்கள் உங்களைப் பற்றிய விவரங்களை சேகரித்துக் கொள்கிறார்கள். இது லாபம் தரக்கூடிய நல்ல வணிகம். இப்போது, கணினிகளால் உங்களது முகத்தையும், உங்கள் குரலையும் அடையாளம் காண முடியும். உங்களது குடும்ப உறுப்பினர்களின் விவரங்களும் அவற்றிடம் உள்ளன. சமூக ஊடகங்களிலும், மற்ற இணையதளங்களிலும் கொட்டிக் கிடக்கும் தனிப்பட்ட விவரங்கள் உங்களை எளிதான இலக்காகவும், தவறான வழிநடத்த இலகுவான நபராகவும் மாற்றி விடுகின்றன." என்று ஹனி ஃபரித் கூறுகிறார்.
 
சாட்-ஜிபிடியால் எழுத்து வடிவில் பொருளடக்கங்களை உருவாக்கி விட முடியும். வீடியோ, ஆடியோ பதிவுகளை உருவாக்கும் மென்பொருட்களும் உள்ளன.
 
அவற்றின் வாயிலாக போலியான செய்திகளை உருவாக்கி அடுத்த ஆண்டு அதிபர் தேர்தலில் பயன்படுத்தும் வாய்ப்புள்ளதாக ஹனி ஃபரித் கூறுகிறார்.
 
தேர்தல் பிரசாரத்தில் போலி செய்திகளை பரப்புவது வாக்காளர்களை தவறாக வழிநடத்துவது மட்டுமின்றி, ஜனநாயக நடைமுறைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும். தேர்தலில் தவறாக பயன்படுத்தும் ஆபத்துள்ள அதே நேரத்தில், இதனால் சில பலன்களும் இருக்கவே செய்கின்றன.
 
 
தேர்தலில் வெற்றி பெற பிரசாரங்களை ஒருங்கிணைப்பது மிகவும் முக்கியம் என்பது நமக்குத் தெரியும். இதற்கு பணம் மிகவும் முக்கியமான ஒன்று.
 
ஸ்டெர்லிங் டேட்டா கம்பெனியின் தலைமை செயல் அதிகாரி மார்ட்டின் குரூஸிடம் இதுகுறித்துப் பேசினோம். அமெரிக்காவில் வேட்பாளர்கள் தேர்தல் பிரசார நிதியை திரட்ட இந்த நிறுவனம் உதவி செய்கிறது.
 
பல நாடுகளில் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான செலவு மக்கள் பணத்தில் இருந்தே செய்யப்படுகிறது. ஆனால், அமெரிக்காவிலோ வேட்பாளர்கள் தங்களது ஆதரவாளர்களிடம் இருந்தோ, நிறுவனங்களிடம் இருந்தோ தான் நிதியைத் திரட்ட வேண்டும்.
 
"உதாரணமாக, ஜனநாயகக் கட்சி வேட்பாளர்கள் அவர்களது பிரசாரத்திற்காக கட்சி ஆதரவாளர்களிடம் நிதி திரட்டுகிறார்கள். சுமார் 17 லட்சம் ஆதரவளார்கள் கட்சிக்கு நிதியளிக்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள். அவர்களின் இருப்பிடத்தை அறிய வேட்பாளர்கள் எங்களது உதவியை நாடுகின்றனர். சாத்தியமான மிகக் குறுகிய கால அவகாசத்தில் நன்கொடையாளர்கள் பட்டியலை தருமாறு அவர்கள் கேட்கிறார்கள். அதற்காக நாங்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறோம். அந்த மென்பொருள் அந்தக் கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் எங்கிருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்கும். அவர்களின் சுயவிவரம் மற்றும் தகவல்களுடன் ஒரு பட்டியலை அது உருவாக்கும்" என்று அவர் கூறுகிறார்.
 
முந்தைய நாட்களில், இந்த பட்டியலை உருவாக்க கணினி பொறியாளர்கள் பல நாட்கள் தொடர்ந்து பணியாற்ற வேண்டியிருந்தது. ஆனால், அந்த பணி தற்போது மிகவும் எளிதாகிவிட்டது.
 
"அனைத்து மக்களின் சுயவிவரங்கள் அடங்கிய தரவுகளை நாங்கள் இந்த மென்பொருளில் இடுகிறோம். செயற்கை நுண்ணறிவு அந்த வேலையை சில நிமிடங்களில் செய்து விடுகிறது. இணையதளம் குறித்த ஆழமான புரிதலை தற்போது பல தளங்கள் வழங்குகின்றன. தரவுகளைக் கையாள அவற்றை மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்" என்று அவர் கூறுகிறார்.
 
இது ஒருபுறம், வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளை கணிசமாக குறைக்கிறது. மறுபுறம், வேட்பாளர் பெறும் பட்டியலில் உள்ள மக்களும் அது பயனுள்ளதாக அமைகிறது.
 
"வரும் நாட்களில் தேர்தல் செலவு இன்னும் குறையும் என்பதால் மேலும் பலர் தேர்தலில் போட்டியிட முன்வரக் கூடும். தேர்தலில் சமத்துவத்தையும், தேர்தல் நடைமுறைகளை மேலும் ஜனநாயகப்படுத்தவும் வல்லது இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்." என்று மார்ட்டின் குருஸ் கூறுகிறார்.
 
ஆகவே, அமெரிக்காவின் அடுத்த அதிபர் தேர்தலில் இவையெல்லாம் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
2024 அமெரிக்க அதிபர் தேர்தல்
செயற்கை நுண்ணறிவு குறித்த பிரபல புத்தகமான DeepFex-ஐ எழுதிய நிபுணர் நினா ஷிக் கூறுகையில், அடுத்த தேர்தலில் இதன் பயன்பாடு பிரமாண்ட அளவில் இருக்கும். அதனைப் பயன்படுத்தாமல் தேர்தல் பிரசாரம் செய்வதே கடினமான ஒன்றாக இருக்கும்.
 
"தேர்தல் பிரசார நடைமுறை மட்டுமல்ல, மக்களுக்குச் சென்றடையும் தகவலும் கூட மாறும். ஒவ்வொரு வாக்காளருக்கும் தனிப்பட்ட வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம்தகவல்களை உருவாக்கி, அனுப்பி வைக்க முடியும். பொதுமக்களை அரசியல்வாதிகள் இன்னும் திறனுள்ள வகையில் தொடர்பு கொள்ள இது வழிவகுக்கும். தேர்தல் பிரசாரத்தின் போது, ஒரு குறிப்பிட்ட விஷயம் அல்லது பிரச்னை மீது தாங்கள் விரும்பும் பொது கருத்தை உருவாக்க இதனை பயன்படுத்திக் கொள்ளலாம்" என்று அவர் கூறினார்.
 
இந்த தொழில்நுட்பத்தை பலரும் தவறாக பயன்படுத்தலாம் என்று அவர் நம்புகிறார். சாட்-ஜிபிடி வருகைக்கு முன்பே அது பல முறை நிரூபணமாகியிருக்கிறது.
 
"கடந்த தேர்தலின் போது பல போலி தகவல்களை பார்க்க முடிந்தது. டிரம்ப் மற்றும் பைடனின் போலி வீடியோக்களை சமூக ஊடகங்களில் காண முடிந்தது. இதுபோன்ற வீடியோக்கள் எதிர் முகாமில் இருந்துதான் வரவேண்டும் என்றில்லை. மற்றவர்களும் கூட அதனை உருவாக்கி பரப்பலாம். எது உண்மை எது போலி என்பதை பொதுமக்கள் வேறுபடுத்திப் பார்ப்பது மிகவும் கடினம். ஒரு வேட்பாளர் லஞ்சம் வாங்கி பிடிபட்டால் கூட, அந்த வீடியோ போலியானது என்று வாதிட முடியும்." என்று அவர் கூறினார்.
 
2016-ம் ஆண்டில் இருந்தே, அமெரிக்க அதிபர் தேர்தல்களில் ரஷ்ய தலையீடு இருந்து வருவதாக குற்றச்சாட்டுகள் உண்டு. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வருகைக்குப் பின்னர் அந்நியத் தலையீடுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதா?
 
நினா ஷிக்கைப் பொருத்தவரை, "போலி தகவல்களை பரப்பும் சாத்தியங்களை அந்நிய சக்திகளும் பயன்படுத்தக் கூடும் என்பதில் சந்தேகம் இல்லை. கடந்த தேர்தலுக்குப் பிறகு உலகம் முழுவதும் மேலும் மேலும் பல அந்நிய சக்திகள் அதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன" என்கிறார்.
 
இவை ஜனநாயக நடைமுறைகளுக்கு பெரும் சவாலாக இருக்கும் என்று அவர் கருதுகிறார்.
 
இங்கே அடிப்படைக் கேள்வி, அடுத்த அமெரிக்க அதிபரை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் தீர்மானிக்க முடியுமா? என்பதுதான்.
 
ஜனநாயக நடைமுறைகளுக்கு சில நன்மைகளை அளிக்கும் அதேநேரத்தில், அதற்கு சேதாரம் விளைவிக்கும் திறனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கு உண்டு என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
 
ஆனால் இது நாம் விதைத்த பயிர், நாம்தான் அறுவடை செய்ய வேண்டும். அதனால்தான் நமக்கு எந்த மாதிரியான சமுதாயம் வேண்டும் என்பதை நாம் தீர்மானிப்பது முக்கியம்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நீண்ட ஆண்டுகளுக்கு பின்னர் ஜப்பான் பிரதமர் தென்கொரியாவுக்கு பயணம்