ஐக்கிய நாடுகள் சபையின் வரலாற்றில் பருவநிலை குறித்து மாட்ரிட்டில் நடந்த மிக நீண்ட பேச்சுவார்த்தை, இறுதியில் ஒரு சமரச ஒப்பந்தத்துடன் முடிவடைந்தது.
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் உலகின் பல்வேறு சிறிய தீவு நாடுகளினாலும் முன்வைக்கப்படும் மேலதிக பருவநிலை மாற்ற தடுப்புத் திட்டங்களுக்கு அமெரிக்கா, பிரேசில், இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தன.
கார்பனைக் கட்டுப்படுத்துவதற்கான உலகளாவிய செயல்பாட்டை அதிகரிப்பதற்கான முக்கிய கேள்விக்கு மாநாட்டின் இறுதிக்கட்டத்தில் உடன்பாடு எட்டப்பட்டது.
இதன்படி, 2020ஆம் ஆண்டு டிசம்பரில் பிரிட்டனின் கிளாஸ்கோவில் நடைபெறும் அடுத்த மாநாட்டின்போது, அனைத்து நாடுகளும் புதிய பருவநிலை உறுதிமொழிகளை முன்வைப்பதற்கு உலக நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன.
கார்பன் உமிழ்வு வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் தொடர்பாக கடைசிவரை உடன்பாடு எட்டப்படாததால், அதுகுறித்த இறுதி முடிவுகள் குறித்து அடுத்த ஆண்டு கிளாஸ்கோவில் நடைபெறவுள்ள கூட்டத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
என்னென்ன விடயங்கள் இறுதியாயின?
திட்டமிட்டதை விட இரண்டு நாட்கள் கூடுதலாக நடைபெற்ற இந்த மாநாட்டில், அடுத்த ஆண்டு கிளாஸ்கோவில் நடைபெறவுள்ள மாநாட்டில் உலகின் அனைத்து நாடுகளும் கார்பன் வெளியேற்றத்தை கட்டுப்படுத்தும் மேம்படுத்தப்பட்ட புதிய திட்டங்களை முன்வைப்பதற்கு ஒப்புக்கொண்டுள்ளன.
அனைத்து தரப்பினரும், ஆபத்தான பருவநிலை மாற்றத்தை தவிர்ப்பதற்கு அறிவியல் எடுத்துரைக்கும் விடயங்களையும், தற்போதைய சூழ்நிலையையும் கருத்திற்கொண்டு முடிவெடுக்க வேண்டும் என்று மாட்ரிட்டில் நடந்து முடிந்த மாநாட்டின்போது வலியுறுத்தப்பட்டது.
எவ்வாறாயினும், வளர்ந்த நாடுகள் 2020க்கு முந்தைய ஆண்டுகளில் பருவநிலை மாற்றம் குறித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதைக் காட்ட வேண்டும் என்ற கருத்தில் இறுதியில் உடன்பாடு எட்டப்பட்டது.