Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இலங்கையில் அதிகரிக்கும் வறுமை; உணவு கிடைக்காத குழந்தைகள்; ஊட்டச்சத்து குறைந்த தலைமுறை உருவாகிறதா?

srilanka
, சனி, 20 ஆகஸ்ட் 2022 (22:40 IST)
பவாஸ் ஓர் அரச உத்தியோகத்தராக பணியாற்றுகின்ற போதும், மாதாந்த வருமானத்தைக் கொண்டு - அவரின் குடும்பத்துக்கான வாழ்க்கைச் செலவை சமாளிக்க முடியாமல் தடுமாறுகிறார். மாதாந்தம் 22,500 ரூபாயை அவர் சம்பளமாகப் பெறுகிறார். ஆனாலும் 5 பேர் கொண்ட அவருடைய குடும்பத்தின் செலவுகளை இந்தத் தொகைக்குள் ஈடுகட்ட முடியவில்லை என்பது அவரின் பிரச்சினையாக உள்ளது.

 
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான விலைகள் அதிகளவில் உயர்ந்துள்ளன. உதாரணமாக 80 ரூபாய்க்குள் கிடைத்த ஒரு கிலோகிராம் அரிசியின் தற்போதை விலை 220 ரூபாய். ஒரு கிலோகிராம் பால்மா பெட்டியின் முந்தைய விலை 950 ரூபாய், தற்போதைய விலை 2895 ரூபாய்.

 
கோழிமுட்டையொன்று தற்போது 65 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சில காலங்களுக்கு முன்னர் 10 ரூபாய்க்கு ஒரு முட்டை கிடைத்தது. 50 ரூபாய்க்குக் கிடைத்த ஆப்பிள் ஒன்று 250 ரூபாய்க்கும் மேல் விற்கப்படுகிறது. இதனால் மக்களின் வாழ்க்கைச் செலவு பல மடங்காக அதிகரித்துள்ளது.

 
ஆரோக்கியத்தை இழக்கும் குழந்தைகள்
 
இதன் காரணமாக, குறைந்தபட்ச நுகர்வுத் தேவைகளைக் கூட, நிறைவு செய்ய முடியாதவர்களின் எண்ணிக்கை நாட்டில் அதிகரித்துள்ளது. இதனால் வறுமைக் கோட்டின் கீழ் உள்ளோரின் தொகையும் கூடியுள்ளது.
 
 
"இலங்கை போரில் காணாமல் போன பலர் பாலியல் தொழிலாளர்கள் ஆக்கப்பட்டுள்ளனர்" - உறவினர்கள் புகார்
 
இலங்கை பொருளாதாரம் : அடுத்த 6 மாதங்களில் இந்த பிரச்னைகள் வரும்
 
நரேந்திர மோதி செஸ் ஒலிம்பியாட் நிகழ்வுக்கு வரும்போது சென்னையில் பலூன் பறக்கத் தடை
 
இலங்கையில் தனிநபர் ஒருவரின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வதற்காக செலவுசெய்ய வேண்டிய பணத்தொகைப் பெறுமதி திடீரென அதிகரித்துள்ளது. தொகை மதிப்பு மற்றும் புள்ளி விபரத் திணைக்களம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையொன்றில், ஆளொருவரின் அடிப்படைத் தேவைகளை நிறைவுசெய்வதற்காக குறைந்தபட்சம் 12,444 ரூபாயை கடந்த ஜுன் மாதத்தில் செலவு செய்ய வேண்டியிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 
இதனை நிறைவேற்ற முடியாதவர்கள் வறுமைக் கோட்டின் கீழ் உள்ளவர்களாகக் கணிக்கப்படுகின்றனர்.
 
 
ஆனால், கடந்த ஜனவரி மாதத்தில் இந்தத் தொகை 8,923 ரூபாயாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
 
அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த பவாஸ் தனது மனைவி, குழந்தை, தாய் மற்றும் தந்தையுடன் வாழ்கின்றார். புள்ளி விபரத் திணைக்கள தரவின்படி கணக்கிட்டால், 05 பேரைக் கொண்ட இவரின் குடும்பத்தின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக குறைந்தபட்சம் 62,220 ரூபாய் தேவைப்படுகிறது.
 
 
எடை குறைந்த குழந்தை
 
இந்த சூழ்நிலையில், ஒரு வயதுடைய தனது குழந்தைக்கான தேவைகளைக் கூட, உரிய வகையில் தன்னால் பூர்த்தி செய்ய முடியாதுள்ளதாக பவாஸ் கவலைப்படுகிறார்.

 
"பிள்ளைக்கான பால்மா மற்றும் பிஸ்கட் வகைகளின் விலைகள் அச்சுறுத்தும் வகையில் அதிகரித்துள்ளன. அதனால் அவற்றினை போதுமான அளவு குழந்தைக்கு வழங்க முடியவில்லை. முன்னர் பழங்களை தொடர்ச்சியாகக் குழந்தைக்குக் கொடுத்து வந்தோம். இப்போது முடியவில்லை. இதன் காரணமாக குழந்தையின் எடை குறைந்து விட்டது" என்கிறார்.
 
 
பவாஸுக்கு அரச தொழில் கிடைத்து இப்போதுதான் ஒரு வருடம் 10 மாதங்கள் ஆகின்றன. இதற்கு முன்னர் அவர் உணவகமொன்றில் பணியாற்றி வந்தார். "அப்போது நாளொன்றுக்கு 1500 ரூபாய்க்குக் குறையாமல் உழைக்க முடிந்தது. அதாவது மாதமொன்றுக்கு குறைந்தது 45 ஆயிரம் ரூபாய் கிடைத்தது. இப்போது 22,500 ரூபாதான் சம்பளமாகக் கிடைக்கிறது. அரச தொழில் - எனது வருமானத்தையும் வாழ்க்கைத் தரத்தையும் குறைத்து விட்டது. தொழிலை விட்டுவிடுவோமா என்றும் யோசிக்கிறேன்" என்கிறார்.

 
"நிலையான வருமானம், சமூக மதிப்பு ஆகியவற்றை மனதில் வைத்துக் கொண்டு, அரச தொழிலைப் பெறுமாறு குடும்பத்தினர் வலியுறுத்தினர். ஆனால், இப்போது இந்தச் சம்பளத்தை வைத்துக் கொண்டு வாழ்க்கையை கொண்டு செல்ல முடியவில்லை" என அவர் கூறுகின்றார்.
 
 
வாழ்க்கைச் செலவு அதிகரித்தமையின் காரணமாக, பிரதான உணவைப் பெறுவதிலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக பவாஸ் கூறுகிறார். "இறைச்சி, மீன் ஆகியவற்றை வாங்குவது குறைந்து விட்டது. ஆங்கில மரக்கறிகளுக்கு (காரட், பீன்ஸ்) அதிக விலை என்பதால் கீரை வகைகள் மற்றும் உள்நாட்டு மரக்கறிகளைத்தான் கொள்வனவு செய்யும் நிலை உருவாகியிருக்கிறது. இதன் காரணமாக எனது மனைவியின் உடல் எடையிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அவர் குழந்தைக்கு பாலூட்டுபவர் என்பதால் அவருடைய ஆரோக்கியத்திலும் சிக்கல் ஏற்படலாம் என அச்சப்படுகிறேன்" என்கிறார்.
 
 
முன்னர் மோட்டார் பைக்கில் பயணித்த பவாஸ், பெட்ரோல் விலை அதிகரிப்பு காரணமாக சைக்க்கிளில் பயணம் செய்யத் தொடங்கியுள்ளார்.
 
 
இந்த நிலைமையினைக் கவனத்தில் கொண்டு, தன்னைப் போன்ற ஊழியர்களின் சம்பளத்தை - அரசு உடனடியாக அதிகரிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுக்கின்றார்.
 
 
பல்நோக்கு அபிவிருத்தி படையணி ஊழியராக பவாஸ் பணியாற்றி வருகின்றார். 1 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தின் கீழ், கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகிய பின்னர் இந்தத் தொழில் வழங்கப்பட்டது.
 
 
மறுபுறமாக இவரின் பணி இன்னும் நிரந்தரமாக்கப்படவில்லை. தொழில் வழங்கப்பட்டு 6 மாதங்களின் பின்னர் நிரந்தரமாக்கப்படும் என நியமனக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள போதும், இதுவரை அது நடக்கவில்லை.
 
 
குறைந்த சம்பளம் பெறும் அரசு ஊழியர்களின் நிலை இப்படியென்றால், நாளாந்தம் வாழ்வாதாரத்துக்கான வருமானத்தைத் தேடிக் கொள்பவர்களில் கணிசமானோரின் நிலை, சிலவேளைகளில் இதனை விடவும் கவலைக்குரியதாக உள்ளது.
 
 
சோற்றுக்குப் பதிலாக மரவள்ளி
 
திராய்க்கேணி கிராமத்தில் வாழும் கண்ணகி, தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார். சில நாட்களில் பகலுணவுக்கு - சோறு சமைப்பதற்கான வசதி இல்லாததால், மரவள்ளிக் கிழங்கை அவித்து, அதனை குடும்பத்துடன் சாப்பிடும் நிலை தனக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றார்.
 
 
தன்னுடைய வீட்டிலிருந்து சற்று தூரத்திலுள்ள பிரதான வீதியோரத்தில், உள்ளுர் மரக்கறிகளை விற்று, அதில் வரும் வருமானத்தில் வாழ்கிறார் 68 வயதுடைய கண்ணகி. கணவர் மற்றும் இரண்டு பேரப்பிள்ளைகளுடன் இவர் வாழ்கிறார். மரக்கறி வியாபாரத்தில் கண்ணகிக்கு அவரது கணவர் உதவுகின்றார்.
 
 
 
"நெல் வயல்களில் களைபிடுங்கச் செல்வேன். அதில் கிடைக்கும் கூலியில் சில நாட்கள் ஓடும். அந்தத் தொழில் இல்லாத போது தோட்டங்களில் மரக்கறிகளை வாங்கி, வீதியோரத்தில் வைத்து விற்பேன். மாதத்தில் ஆகக்கூடியது 20 நாட்கள் இந்தத் தொழிலில் ஈடுபடுவேன். ஆயிரம் ரூபாய்க்கு உட்பட்ட தொகை இதில் நாளாந்தம் லாபமாகக் கிடைக்கும். அதனை வைத்துத்ததான் குடும்பத்தை நடத்த வேண்டியிருக்கிறது" என்கிறார்.

 
கண்ணகியின் குடும்பத்துக்கு நாளாந்த உணவுக்காக ஒன்றரைக் கிலோ அரிசி தேவைப்படுவதாகக் கூறுகிறார். அதற்கு மட்டுமே 330 ரூபாய் செலவிட வேண்டியுள்ளது. "பால் நேநீர் அருந்தி பல மாதங்கள் ஆகின்றன" என்கிறார்.

 
அரச உதவித் தொகையாக மாதாந்தம் 2,300 ரூபாய் தனது குடும்பத்துக்குக் கிடைப்பதாகக் கூறும் அவர், குறைந்தது தற்போதுள்ள விலைவாசியில் வாழ்க்கையை நடத்துவதற்கு அவரின் குடும்பத்துக்கு 60 ஆயிரம் ரூபாய் தேவையாக உள்ளது என்கிறார்.
 
 
இது இவ்வாறிருக்க, "வறுமையின் முக்கிய அடையாளங்களில் ஒன்று மகிழ்ச்சி குறைவடைதல்" என்கிறார் தென்கிழக்குப் பல்கலைக்கழக பொருளியல்துறை தலைமைப் பேராசிரியர் ஏ.எல் அப்துல் ரஊப்.

 
நாட்டில் வறுமை அதிகரிக்க அதிகரிக்க - நபர்களிடையே மகிழ்ச்சி குறைவடையும் ஆபத்து உள்ளமையினை அவர் பிபிசி தமிழிடம் பேசும்போது சுட்டிக்காட்டினார்.
 
 

 
வறுமை நான்கு வகைப்படும் எனக் கூறிய அவர்; அவைபற்றி விளக்கினார். "முழுமையான வறுமை, ஒப்பீட்டு ரீதியான வறுமை, சந்தர்ப்ப சூழ்நிலை வறுமை மற்றும் பரம்பரை ரீதியான வறுமை என்பவையே அவையாகும்" என்கிறார். அந்தவகையில் தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ளது 'சந்தர்ப்ப சூழ்நிலை வறுமை' எனவும் அவர் குறிப்பிட்டார்.
 
 
"வறுமையான குடும்பங்களில் நோய்கள் மற்றும் தொற்றுநோய்கள் ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம் இருக்கும்" என்றும், "தன்னம்பிக்கையை இழக்கும் நிலை காணப்படும்" எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
 
 
தற்போது நாட்டில் வறுமை அதிகரித்துள்ள நிலையில், போஷாக்கு குறைபாடான சமுகமொன்று உருவாகும் அபாயம் உள்ளதாக கூறிய பேராசிரியர் ரஊப்; அதனைத் தவிர்க்கும் பொருட்டு உடனடியாக பாடசாலைகளில் உணவுத் திட்டத்தை ஆரம்பிக்க வேண்டும் என்றார்.
 
 
"பால்தேநீர் குடித்து வந்த பல பிள்ளைகளுக்கு அது இப்போது கிடைப்பதில்லை. ஆரோக்கியமான காலை உணவும் இப்போது இல்லாமல் போய்விட்டது. எனவே, இவற்றினை பிள்ளைகளுக்கு வழங்கும் பொறுப்பை அரசு ஏற்க வேண்டும்" என்கிறார்.
 
 
மேலும், மக்களுக்கு பணம் மற்றும் உணவுப் பொருட்களை நிவாரணமாக அரசு வழங்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார்.
 
 
"பொருளாதார நெருக்கடியும் வறுமையும் நாட்டில் மிக மோசமாக ஏற்பட்டுள்ள தற்போதைய காலகட்டத்தில் - மக்களுக்கு உள நெருக்கீடு, மன அழுத்தம் அதிகமாக ஏற்படும். அதனால் குடும்பத்தில் பிரச்சினைகளும் சண்டைகளும் உருவாகலாம். மறுபுறம் திருட்டு மற்றும் குற்றச் செயல்கள் போன்றவை அதிகரிப்பதற்கான சந்தர்ப்பங்களும் அதிமாகும். எனவே, மக்களுக்கு உளவள ஆலோசனைகள் வழங்கும் திட்டங்களை அரசு நடைமுறைப்படுத்துவதோடு, மேற் சொன்ன பாதக விளைவுகளிலிருந்து தப்பிப்பதற்கான விழிப்புணர்வுகளை வழங்குதலும் அவசியமாகும்" எனவும் அவர் குறிப்பிட்டார்.
 
 
'60 சதவிகித குடும்பங்களின் உணவு வேளைகள் குறைந்துள்ளன'
 
இதேவேளை, நாட்டில் ஏற்பட்டுள்ள மிக மோசமான பொருளாதார நெருக்கடி மற்றும் பொருட்களின் விலையேற்றம் காரணமாக சுமார் 60 வீதமான குடும்பங்களின் உணவு வேளைகள் குறைவடைந்துள்ளதாக சிறுவர் நோய் நிபுணத்துவ நிலையத்தின் தலைவர் பேராசிரியர் புவனி லியனகே தெரிவித்துள்ளார்.
 
 
அண்மையில் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய போதே - அவர் இதனைக் கூறினார்.
 
 
தற்போதைய நெருக்கடி நிலைமை காரணமாக போஷாக்கின்மை அதிகரிக்கும் என தாம் அனுமானிப்பதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

 
"குடும்பமொன்று ஒருவேளை சாப்பாட்டுக்காக உட்கொள்ளும் உணவின் அளவு குறைந்துள்ளது. உணவு வேளைகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளன. மூன்று வேளை உணவுக்காக - இரண்டு வேளை உணவினையே அவர்கள் பெற்றுக் கொள்கின்றனர். இந்த வகையில் சுமார் 60 வீதமான குடும்பங்களின் உணவு வேளை குறைந்துள்ளன" எனவும் அவர் குறிப்பிட்டார்.
 
 
இதேவேளை உணவு வகைகளில் போஷாக்கின் அளவு குறைந்துள்ளதாகவும் உணவுகளிலுள்ள புரதத்தின் அளவு வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் பேராசிரியர் புவனி லியனகே சுட்டிக்காட்டினார்.

 
இவற்றுக்குத் தீர்வு காணத் தவறினால், எதிர்கால சந்ததியினர் பாரதூரமான ஆபத்தை எதிர்கொள்ளும் நிலை ஏற்படும் எனவும் அவர் எச்சரித்தார்.
 
 
'வறுமை விகிதம் - அரசு சொல்வதை விடவும் அதிகம்'
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள தரப்பினரில் அரச ஊழியர்கள் குறிப்பிடத்தக்கவர்கள் என்கிறார் அம்பாறை மாவட்ட அபிவிருத்தி உத்தியோகதர்தர்களின் தொழிற்சங்கத் தலைவராகப் பணியாற்றும் கே.எம். கபீர். ஆனால், அரச பணியாளர்களை வறுமைக் கோட்டின் கீழ் உள்ளவர்களாக அரசு ஒருபோதும் கணித்ததில்லை எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
 
 
"நாட்டில் 15 லட்சம் அரச ஊழியர்கள் உள்ளனர். இவர்களில் சுமார் 10 லட்சம் பேர் வரையிலானவர்கள் சாதாரண மாதச் சம்பளம் பெறுவோர் என்பது குறிப்பிடத்தக்கது. சாதாரண சம்பளம் என்பது 40 ஆயிரம் தொடக்கம் 50 ஆயிரம் வரையிலான தொகையாகக் கொள்ள முடியும்".
 
"இவர்கள் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறான அரச ஊழியர் ஒருவரின் சம்பளத்தைக் கொண்டு அவர்களின் குடும்பச் செலவுகளை ஈடுசெய்வது மிகவும் சிரமாகும்" எனவும் கபீர் குறிப்பிடுகின்றார்.
 
"இலங்கையின் வறுமை வீதம் 11.7 என கடந்த ஜுன் மாதம் கணிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி நாட்டில் சுமார் 23 லட்சம் பேர் வறுமைக் கோட்டின் கீழ் உள்ளனர். ஒரு காலத்தில் வறுமை வீதம் 6 அல்லது 7 வீதமாகவே இருந்தது. வருமானத்தை விடவும் செலவுகள் அதிகரித்துள்ளமையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது" எனவும் அவர் கூறினார்.
 
இதேவேளை குறைந்த சம்பளம் பெறும் அரச ஊழியர்களையும் வறுமைக் கோட்டின் கீழ் கொண்டு வரும் போது, நாட்டின் வறுமை வீதம் மேலும் அதிகரிக்கும் என்கிறார் கபீர்.
 
பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை உயர்வுக்கு ஏற்ப, அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படவில்லை எனக் கூறும் அவர்; உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு 250 சதவீதமாக உயர்வடைந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றார்.
 
"தற்போதைய நிலையில் மக்களுக்கு ஆறுதலளிப்பதென்றால் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளை அரசு குறைக்க வேண்டும். ஆனால் அதற்கான சாத்தியங்கள் குறைவாகவே உள்ளன. எனவே, அரசு ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும்".
 
இதற்காக பணத்தை அச்சிடுவதை தவிர்த்து, வேறுவழிகளில் வருமானங்களைப் பெற வேண்டும் என்றும், அதன் மூலம் அரசு ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு வழங்கப்பட வேண்டுமெனவும் கபீர் வலியுறுத்துகின்றார்.
 
அரசாங்கத்துடன் கள்ள உறவுகளைப் பேணிக் கொண்டு, வரி ஏய்ப்புச் செய்துவரும் வர்த்தகர்களிடமிருந்து வரிகளை அறவிடுதல், அரசியல்வாதிகளின் சொத்துக்களை கணக்காய்வு செய்து, அவற்றிலிருந்து வருமானங்களை அரசு பெற்றுக் கொள்வதல், அரச ஊழியர்களை தொழில்வாய்ப்பின் நிமித்தம் வெளிநாடுகளுக்கு அனுப்புதல் போன்ற வழிகளின் மூலமும் வருமானங்களை அரசு பெற்றுக் கொள்ள முடியும் என அவர் கூறுகின்றார்.
 
அரச ஊழியர்கள் - வேலைவாய்ப்பின் நிமித்தம் வெளிநாடு செல்ல முடியும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், அதிலுள்ள தடைகள் முற்றாக நீக்கப்படவில்லை என்றும், இதற்கான ஊக்குவிப்பு நடவடிக்கைகள் அரசினால் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் கபீர் தெரிவிக்கின்றார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் த.பிரபுசங்கர் தலைமையில் நல்லிணக்க நாள் உறுதிமொழி !!