இலங்கையின் வட பகுதியிலுள்ள மன்னார் மற்றும் பூநகரி ஆகிய பகுதிகளில் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை முன்னெடுப்பதற்கு இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு அனுமதி வழங்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்திற்கு இந்த அனுமதி தற்காலிகமாக வழங்கப்பட்டுள்ளதாக மின்வலு, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
மன்னார் பிரதேசத்தில் 286 மெகா வாட் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் மற்றும் பூநகரி பிரதேசத்தில் 234 மெகா வாட் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் ஆகியவற்றை அமைக்க அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது.
இந்த திட்டத்திற்காக அதானி நிறுவனம் 500 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்யப்பவுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிக்கின்றார்.
வடக்கில் சீனாவிற்கு வழங்கப்பட்ட மூன்று தீவுகள்?
வடக்கிலுள்ள மூன்று தீவுகளில் மின்சக்தி திட்டத்தை முன்னெடுப்பதற்கு சீன நிறுவனத்திற்கு அனுமதி வழங்க கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் திட்டமிட்டிருந்தது.
யாழ்ப்பாணத்திற்கு சொந்தமான நெடுந்தீவு, நயினாதீவு மற்றும் அனலைதீவு ஆகிய தீவுகளை சீனாவிற்கு வழங்க இலங்கை முன்னர் தீர்மானித்திருந்தது.
எனினும், இந்த தீவுகளை சீனாவிற்கு வழங்க இந்தியா, தொடர்ச்சியாக எதிர்ப்பு வெளியிட்டு வந்திருந்தது.
இவ்வாறான நிலையில், குறித்த மின்சக்தி திட்டத்தை கைவிட தீர்மானித்ததாக சீனா அப்போது அறிவித்த நிலையில், அதானி நிறுவனத்திற்கு வடக்கின் காற்றாலை மற்றும் சூரிய சக்தி திட்டங்களை வழங்க யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டது.
''மூன்றாவது தரப்பிலிருந்து முன்வைக்கப்பட்ட பாதுகாப்பு தொடர்பிலான பிரச்சினை" காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கொழும்பிலுள்ள சீன தூதரகத்தின் டுவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அப்போதைய நிதி அமைச்சர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதலாம் தேதி இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டார்.
இந்தப் பயணத்தின்போதே, கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் இந்த அறிவிப்பை வெளியிட்டது.
இந்த உத்தேச மின்சக்தி திட்டம் கைவிடப்படும் சந்தர்ப்பத்திலேயே, மாலைத்தீவில் 12 சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையங்களை அமைக்க அந்த நாட்டு அரசாங்கத்துடன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 29ம் தேதி ஒப்பந்தம் கைச்சாத்திட்டதாக தூரகம் அறிவித்துள்ளது.
''சினோ சோ ஹைப்ரிட் டெக்னாலஜி"" என்ற சீன நிறுவனத்துடனேயே இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
இலங்கையின் வட பகுதி, தென்னிந்தியாவை அண்மித்துள்ளமையினால், குறித்த மூன்று தீவுகளையும் சீனாவிற்கு வழங்குவதற்கு இந்தியா தொடர்ந்து எதிர்ப்புக்களை வெளியிட்டது.
மன்னார் முதல் பூநகரி வரையான பிரதேசத்தில் 500 மெகாவாட் காற்றாலை மற்றும் சூரிய சக்தி திட்டத்தை அதானி நிறுவனத்திற்கு வழங்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அப்போதைய மின்சார சபையின் தலைவர், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 25ம் தேதி, நிதி அமைச்சின் செயலாளருக்கு கடிதமொன்றின் ஊடாக அறிவித்துள்ளார்.
இலங்கைக்கு தேவைக்கு ஏற்ற மின்சாரத்தை வழங்கும் வல்லமை, மன்னார் முதல் பூநகரி வரையான பகுதியில் காற்றாலை மற்றும் சூரிய சக்தி திட்டத்தின் மூலம் கிடைக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
அதானி நிறுவன தலைவரின் மன்னார் பயணம்
இலங்கைக்கு கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 25ம் தேதி இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்த அதானி நிறுவனத்தின் தலைவரும், இந்தியாவின் முன்னணி செல்வந்தருமான கௌதம் அதானி, தனது குடும்ப உறுப்பினர்களுடன் மன்னார் பகுதிக்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.
இந்த சந்தர்ப்பத்தில், கொழும்பு துறைமுகத்தின் மேற்கு பகுதியின் அபிவிருத்தி மற்றும் மின்சக்தி திட்டங்கள் தொடர்பில் இலங்கை அதிகாரிகள், கௌதம் அதானியுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.
இந்திய பிரதமரின் அழுத்தம், காற்றாலை திட்டம் வழங்க காரணமா?
மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு கையளிக்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழுத்தமே காரணம் என இலங்கை மின்சார சபையின் முன்னாள் தலைவர் எம்.எம்.சீ.பெர்டினான்டோ கடந்த ஜுன் மாதம் பொது முயற்சியாண்மைக்கான நாடாளுமன்ற தெரிவுக் குழு (கோப் குழு) முன்னிலையில் தெரிவித்திருந்தார்.
''ஜனாதிபதியினால் இது தொடர்பிலான அறிவிப்பு அமைச்சரவைக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் பின்னர் ஜனாதிபதி என்னை அழைத்திருந்தார். கடந்த நவம்பர் 24ம் தேதி என நினைக்கின்றேன். இதை அதானி நிறுவனத்திற்கு வழங்குங்கள் என கூறினார். இதை வழங்குமாறு இந்திய பிரதமர் மோதி எனக்கு அழுத்தங்களை விடுக்கிறார் என அவர் என்னிடம் கூறினார். இது எனக்கும், இலங்கை மின்சார சபைக்கும் இடையில் உள்ள பிரச்சினை இல்லை. இது முதலீட்டு சபைக்குரிய பிரச்சினை என நான் கூறினேன். ஜனாதிபதி எனக்கு உத்தரவு பிறப்பிக்கிறார், அதனால், நிதி அமைச்சு இதனை செய்துக்கொள்ளுமாறு நான் கடிதமொன்றை எழுதினேன்" என இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சீ.பெர்டினான்டோ தெரிவித்தார்.
கோட்டாபய ராஜபக்ஷ மறுப்பு
மன்னார் காற்றாலை திட்டம் தொடர்பில் இலங்கை மின்சார சபையின் தலைவர் வெளியிட்ட கருத்தை தான் நிராகரிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ டுவிட்டர் பதிவொன்றின் ஊடாக தெரிவித்துள்ளார்.
எந்தவொரு நபருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ அதனை வழங்குவதற்கான அங்கீகாரத்தை தான் வழங்கவில்லை என ஜனாதிபதி கூறியுள்ளார்.
மின்சார சபைத் தலைவர் வாபஸ்
கோப் குழுவின் முன்னிலையில் தான் தெரிவித்த கருத்தை வாபஸ் பெற்றுக்கொள்வதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சீ.பெர்டினான்டோ தெரிவித்துள்ளார்.
மின்சார சபை சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், அதன் வேலைப்பளு காரணமாக, உணவு உட் கொள்ளாமல் செயற்பட்டமையினால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் தன்னால் அவ்வாறான கருத்து வெளியிடப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த கருத்தை வாபஸ் பெறும் தமது நிலைப்பாட்டிற்கு ஜனாதிபதி, விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் அல்லது இந்திய தூதரகத்தினால் அழுத்தம் விடுக்கப்படவில்லை என இலங்கை மின்சார சபையின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு இந்தியாவிற்கு வழங்க சீன கப்பல் காரணமா?
இலங்கையின் வடப் பகுதியில் மின்சக்தி திட்டங்களை இந்தியாவிற்கு வழங்க தற்போது இலங்கை தீர்மானித்துள்ளது.
இந்தியாவின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், சீன விண்வெளி ஆய்வு கப்பலான யுவான் வாங் 5 கப்பல், தற்போது ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளது.
சீன கப்பலை அனுமதிக்கக்கூடாது என முன்னர் இந்தியா கூறி வந்த நிலையில், பின்னரான காலப் பகுதியில் இலங்கைக்குள் சீன கப்பலை அனுமதிக்க தாம் எதிர்ப்பு கிடையாது என இந்தியா அறிவித்தது.
இலங்கை அரசாங்கம் இந்தியாவுடன் ஏற்படுத்திக் கொண்ட சில இணக்கப்பாடுகள், இந்த கப்பலை அனுமதிக்க காரணமாக இருக்கலாம் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த இணக்கப்பாடுகளின் பிரகாரமே, மன்னார் மற்றும் பூநகரி மின்சார திட்டம் இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்க தீர்மானிக்கப்பட்டிருக்கலாம் என அரசியல் ஆய்வாளர் அ.நிக்சன் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.
''இந்தியாவை இலங்கை சமாளிப்பதற்கு முயற்சிக்கும். இந்தியாவிற்கு வடக்கு மற்றும் கிழக்கில் இடங்களை கொடுத்து, கொழும்பிலும் இடங்களை கொடுத்து, சமாளிப்பதற்கு பார்க்கின்றது. இந்தியாவை சமாளிக்கும் திட்டம் இது. இல்லையென்றால், இந்தியா விடாது குழப்பத்தை ஏற்படுத்தும். அதற்காகவே இந்த திட்டம் அதானிக்கு கொடுக்கப்படுகிறது. அதானிக்கு மாத்திரம் அல்ல, பல இடங்களை இந்தியாவிற்கு கொடுக்க போகின்றார்கள். சர்வதேச நாணய நிதியம் பல அரச நிறுவனங்களை விற்பனை செய்யுமாறு கூறுகிறது. இவ்வாறு விற்கப்படும் பல அரச நிறுவனங்களை இந்தியா வாங்கப் போகிறது" என அரசியல் ஆய்வாளர் அ.நிக்சன் பிபிசி தமிழிடம் கருத்து கூறினார்.