இம்ரான் கான்: "காஷ்மீர் விவகாரத்தில் மோதி வரலாற்றுப் பிழை செய்துவிட்டார்"

திங்கள், 26 ஆகஸ்ட் 2019 (20:55 IST)
ஆர்.எஸ்.எஸ். கொள்கையை அடிப்படையாக கொண்டதால்தான் மோதி அரசு காஷ்மீர் விவகாரத்தில் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் மக்களுக்கு அவர் இன்று ஆற்றிய உரையில் இதனை தெரிவித்துள்ளார்.
 
மேலும் தன்னை காஷ்மீருக்கான தூதுவராக நியமித்துக் கொண்டதாகவும், இறுதிவரை காஷ்மீரின் சுதந்திரத்திற்காக தாம் போராடப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
இம்ரான்கான் மேலும் பேசியது:
 
இந்த பிரச்சனை போரை நோக்கி சென்றால், இருநாடுகளிடமும் அணுஆயுதங்கள் உள்ளன என்பதை நினைவில் கொள்ளவேண்டும். அது சர்வதேச அளவில் பின்விளைவுகளை ஏற்படுத்தும். உலகின் சக்தி வாய்ந்த நாடுகளுக்கு பெரும் பொறுப்பு உள்ளது. அவை பாகிஸ்தானை ஆதரித்தாலும், இல்லையென்றாலும் பாகிஸ்தான் அனைத்து எல்லைகளுக்கும் செல்லும்.
 
இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் பலமுறை முயற்சி செய்தோம். ஆனால், இந்தியாவில் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருந்ததால் அது முடியும் வரை நாங்கள் காத்திருந்தோம். ஆனால் அதற்கு இடையில் புல்வாமா விவகாரம் நடந்துவிட்டது. எனவே உடனே இந்தியா எங்களை நோக்கி கைகாட்டியது.
 
நிதி நடவடிக்கை அமைப்பில் எங்களை கருப்புப் பட்டியலில் சேர்க்க இந்தியா முயற்சி செய்தது. அதன்மூலம் பாகிஸ்தானை நோக்கிய இந்தியாவின் கொள்கை தெரிகிறது.
 
இந்திய அரசு காஷ்மீரை தங்களுடன் இணைத்துக் கொண்டது. இந்தியாவின் ஒருதலை பட்சமான முடிவு, காஷ்மீர் தொடர்பான ஐ.நா தீர்மானத்திற்கு மட்டுமின்றி இந்திய அரசமைப்பிற்கே எதிரானது; நேரு மற்றும் காந்தியின் உறுதிமொழிக்கு எதிரானது.
 
ஆகஸ்டு 5ஆம் தேதி காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்புரிமையை ரத்து செய்தன் மூலம் இந்தியா இந்துகளுக்கு மட்டுமான நாடு என்பது தெரிகிறது.
 
1920ஆம் ஆண்டில் ஆர்.எஸ்.எஸ். தொடங்கப்பட்டது. பாஜக அதன் அரசியல் அமைப்பாக உருவெடுத்தது. மோதி அரசு எங்களுடன் அமைதி பேச்சுவார்த்தையை ஏன் நடத்தவில்லை என்பதை புரிந்துகொள்ள நாம் வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கொள்கையை அடிப்படையாகக் கொண்டதுதான் அவர்களின் கொள்கை. ஆர்.எஸ்.எஸ்-இன் கொள்கையின்படி, இந்தியா இந்துகளுக்கு மட்டுமே ஆன நாடு.
 
ஐ.நா. பொது சபையில் செப்டம்பர் 27ஆம் தேதி உலக நாடுகளுக்கு மத்தியில் காஷ்மீர் குறித்து உரையாடுவேன்.
 
காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச கவனத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியில் நாங்கள் வெற்றியடைந்துவிட்டோம். 1965ஆம் ஆண்டுக்கு பிறகு ஐ.நா முதன்முறையாக காஷ்மீர் கூட்டம் ஒன்றை நடத்தியது. அதை சர்வதேச ஊடகங்களும் ஒளிப்பரப்பின என்று தெரிவித்தார் இம்ரான்கான்.
 
முன்னதாக ஜி7 மாநாட்டில் டிரம்புடன் பேசிய இந்திய பிரதமர் நரேந்திர மோதி "இந்தியா மற்றும் பாகிஸ்தான் தொடர்பான அனைத்து விஷயங்களும் இருநாடுகள் சார்ந்தது. அதனால்தான் பிற நாடுகளுக்கு நாங்கள் தொந்தரவு கொடுக்க விரும்பவில்லை" என்று தெரிவித்தார்.
 
"1947ஆம் ஆண்டுக்கு முன் இந்தியாவும், பாகிஸ்தானும் ஒன்றாக இருந்தன. எனவே எங்களின் பிரச்சனைகளை நாங்களே விவாதித்து, தீர்த்துக்கொள்வோம் என நான் நம்புகிறேன்" என மோதி மேலும் தெரிவித்திருந்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில் ரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணித்தவர்களால்... ரூ. 1,377 கோடி அபராதம் வசூல்