Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அறிகுறியே இல்லாமல் பரவும் பால்வினை நோய்களை கண்டறிவது எப்படி?

அறிகுறியே இல்லாமல் பரவும் பால்வினை நோய்களை கண்டறிவது எப்படி?
, வியாழன், 6 ஜனவரி 2022 (09:15 IST)
(பாலியல் நலம் தொடர்பாக பிபிசி தமிழ் வெளியிட்டுவரும் தொடரின் ஐந்தாவது கட்டுரை இது.)
 
நன்கு படித்த தம்பதி அவர்கள். அன்பான வாழ்க்கை. குழந்தை பெறுவதற்கான முயற்சியில் முதல் முறை கருகலைந்துவிட்டது. 2வது முறையும் அதே நிலை. காரணம் புரியாமல் மருத்துவரிடம் சிகிச்சைக்காக வந்திருந்தார்கள். பெண்ணிற்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் பெரிதாக எந்த பிரச்னையும் இல்லை.
 
சிகிச்சை கொடுத்த 3 மாதங்களில் அந்த பெண் கருவுற்றார். 5 ஆவது மாத ஸ்கேனில் குழந்தை ஆரோக்கியமாக இருந்தது. ஆனால் 7 வது மாத ஸ்கேன் எடுக்கும் போது குழந்தையின் வளர்ச்சி குறைவாகவும், தாயின் வயிற்றில் நீர் குறைவாகவும் இருந்தது. உடனடியாக தாயை பரிசோதனைக்கு அனுப்பிப் பார்த்தால், அனைத்தும் சரியாகவே இருந்தது
webdunia
அடுத்த 2 வாரங்களில் எந்த பரிசோதனை எடுத்தாலும் அனைத்தும் "நார்மலாகவே" இருந்தன. ஆனால் குழந்தையின் வளர்ச்சி மேலும் பாதிக்கப்பட, இறுதியாக டார்ச் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.
 
அதிலும் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் அதற்குள் 32 வாரங்கள் ஆகிவிட்டன. குழந்தைக்கு தாயிடம் போக வேண்டிய ரத்த ஓட்டமும் மிகக் குறைந்து போய், ஒரே வாரத்தில் குழந்தை இறக்கும் நிலை உருவானது.
 
உடனடியாக சிசேரியன் செய்து குழந்தையை வெளியில் எடுக்க மருத்துவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த குழந்தை congenital syphilis தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. பிறகு தாயின் ரத்த பரிசேதனை முடிவுகளை அனுப்பி பார்த்த போது அவர் பால்வினை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தார்கள்.
 
இதற்கு முன் செய்த அனைத்து பரிசோதனைகளிலும் முடிவுகள் நெகடிவ் வாக இருக்க அறிகுறியே இல்லாமல் அவருக்கு பால்வினை நோய் தாக்கி இருக்கிறது. ஒருவேளை கணவரிடம் இருந்து தாக்கி இருக்கலாம் என மருத்துவர்கள் கருதுகிறார்கள். ஆனால் இறுதியாக குழந்தை இறந்துவிட்டது. மகிழ்வான துவக்கத்தை எதிர்பார்த்திருந்த அந்த குடும்பத்தின் கனவு அறிகுறியே இல்லாத பால்வினை நோயால் சிதைந்துவிட்டது.
 
இப்படிப்பட்ட பால்வினை நோய்கள் எப்படி ஏற்படுகின்றன, கண்டுபிடிப்பது எப்படி என்பன போன்ற பல்வேறு கேள்விகளுக்கு பிபிசி தமிழுக்காக ஹேமா ராகேஷிடம் மருத்துவர் ஜெயராணி காமராஜ் அளித்த பதில்களை பார்க்கலாம்
 
பால்வினை நோய்கள் என்றால் என்ன?
 
முறையற்ற பாலியல் உறவுகள் மூலம் பரவும் நோய்கள் பால்வினை நோய்கள் என்று அழைக்கப்படும். உலகம் முழுவதும் நாள் ஒன்றுக்கு 1 மில்லியன் மக்களும் வருடம் ஒன்றிற்கு 374 மில்லியன் மக்களும் பால்வினை நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். கோனரியா, டிரக்கோமா, சிபிலிஸ், எச்ஐவி என்ற 4 விதமான நோய்கள் முறையற்ற பாலியல் உறவுகள் மூலம் வருகின்றன.
 
பால்வினை நோய் எப்படி பரவுகிறது?
 
கணவன் மனைவியை தாண்டிய உறவுகள், முறை தவறிய உறவுகள், ஒன்றுக்கும் மேற்பட்டவர்களுடன் உடல் ரீதியிலான உறவுகள் மூலமாக பால்வினை நோய்கள் பரவுகிறது. மக்களிடம் எச்ஐவி குறித்த விழிப்புணர்வு மட்டுமே இருக்கிறது. அதை தாண்டியும் பால்வினை நோய்கள் உள்ளன என்பதும் அதற்கு சிகிச்சையின் மூலம் தீர்வு காணலாம் என்பது பற்றியும் மக்களிடத்தில் போதுமான விழப்புணர்வு இல்லை. பால்வினை நோய்கள் குறித்து பேசுவதற்கு மக்களிடத்தில் இன்னமும் தயக்கம் இருக்கிறது.
 
ஆண்களுக்கு பால்வினை நோய் அறிகுறிகள் எப்படி இருக்கும்?
 
பால்வினை நோய்க்கான அறிகுறிகள் பலருக்கு இருப்பதே தெரியாது என்பது குறிப்பிடத்தக்க விஷயம். சில பேருக்கு நோய் தாக்கம் முற்றிய பிறகு தான் அறிகுறிகள் தெரியவரும். ஆண்களை பொறுத்தவரை ஆண் குறியில் புண்கள், கொப்புளங்கள், சிறுநீர் கழிக்கும் போது வெள்ளை படுதல், எரிச்சல், தோல் வெடிப்புகள், கால்களுக்கு இடையே நெறி கட்டுதல், அடி வயிறு வலி, இடுப்பு வலி போன்றவை சாதாரண அறிகுறிகள். பாலியல் உறவுக்கு பிறகு மேற்சொன்னவற்றில் ஒன்றுக்கும் மேற்பட்ட அறிகுறிகள் தென்பட்டால் பால்வினை நோய் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கும் வாய்ப்புகள் அதிகம்.
 
பெண்களுக்கு பால்வினை நோய் அறிகுறிகள் எப்படி இருக்கும்?
 
பெண்களுக்கு பொதுவாகவே மாதவிடாய்க்கு முன்னும் பின்னும் சில நாட்கள் வெள்ளைப்படுதல் அதிகம் இருக்கும். ஆனால் பாலியல் உறவுக்கு பிறகான சில நாட்களில் பச்சை நிறமாகவோ, மஞ்சள் நிறமாகவோ, துர்நாற்றத்துடனோ வெள்ளைப்படுதல், அதிக அளவு வெள்ளைப்படுதல், பிறப்புறுப்பில் எரிச்சல், அடிவயிறு வலியுடன் காய்ச்சல், இடுப்பு வலி, பெண் உறுப்பில் கொப்புளங்கள், உள் பக்கங்களில் வலி, தொடை பக்கங்களில் வலி போன்றவை அறிகுறிகளாக இருக்கும்.
 
பால்வினை நோய் இருப்பது தெரியாமல் தங்களுக்கு ஏற்படும் அறிகுறிகளுக்காக கடைகளில் மாத்திரை வாங்கி சாப்பிடலாமா?
 
கண்டிப்பாக கூடாது. பால்வினை நோய் ஆரம்ப காலகட்டத்தில் இருந்தால் கண்டிப்பாக சிகிச்சையின் மூலம் முழுமையாக குணப்படுத்த முடியும். கொனேரியா என்கிற பால்வினை நோய் தாக்கினால் வஜைனா, கர்ப்பப்பை வாய், மற்றும் கர்ப்பப்பையை பாதித்து கர்ப்பப்பைக்கு வெளிப்புறம் பெல்விசில் பரவி Pelvic inflamatory Disease என்று சொல்லக்கூடிய PID தொற்றை உண்டாக்கும்.
 
அடிக்கடி அதிக வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி, காய்ச்சல், இடுப்பு வலி , சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் தொடரும். கர்ப்பப்பையில் ஏற்படும் புண்களால் அவ்வப்போது ரத்தப்போக்கும் ஏற்படலாம். இதற்கு அடுத்த கருக்குழாயில் பரவி குழந்தையின்மையை ஏற்படுத்தலாம். மருத்துவர் கண்காணிப்பில் ஆரம்ப நிலையிலேயே இருந்து சிகிச்சை பெற்றால் முழுமையாக பால்வினை நோய்களை குணப்படுத்தலாம்
 
பால்வினை நோய் முறையற்ற உடலுறவால் மட்டுமே பரவுகிறதா? அல்லது பாதித்தவர்கள் பயன்படுத்தும் கழிவறைகளை பயன்படுத்தும் போது பரவுமா?
 
பால்வினை நோய்கள் உடலுறவால் மட்டுமே பரவும். பால்வினை நோய் பாதித்தவர்கள் பயன்படுத்திய கழிவறையை பயன்படுத்தினால் பரவாது. காரணம் இந்த நோய்க்கு காரணமான கிருமி வெளியில் வந்து சில மணி நேரங்களில் இறந்துவிடும். பொதுவாகவே பால்வினை நோய்கள் முறையற்ற பாலுறவால் மட்டுமே பரவும்.
 
அதே போல் Oral Sex மற்றும் Anal Sex மூலமாகவும் பால்வினை நோய்கள் பரவும்
 
குணப்படுத்தவே முடியாத பால்வினை நோய்கள் இருக்கிறதா?
 
பால்வினை நோய்களில் குணப்படுத்த முடியாத 3 நோய்கள் இருக்கிறது. Hepatitis, HIV, Human papilloma Virus இவை மூன்றும் குணப்படுத்த முடியாத பால்வினை நோய்கள். ஆனால் இதற்கு முறையான சிகிச்சையை அளித்து நோயின் தீவிரத்தை குறைக்க முடியும். Gonoria, sipilis, clemidia trechamatis இந்த 3 நோய்க்கும் முறையான சிகிச்சை எடுத்தால் முழுமையாக குணப்படுத்த முடியும்.
 
பால்வினை நோய்களுக்கு குறைந்தபட்ச சிகிச்சை கால அளவு என்ன?
 
பால்வினை நோயை ஆரம்ப நிலையில் கண்டறிந்து மருத்துவரிடம் சிகிச்சையை தொடங்கி 1 வாரம் முழுமையான ஆன்டிபாயாடிக் சிகிச்சை எடுத்துக் கொண்டால் குணமாகிவிடும். Sipilis நோய்க்கு ஆரம்ப காலத்திலேயே மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டால் முழுமையாக குணப்படுத்தலாம். ஆனால் 2 ஆம் கட்டமாக நோய் தாக்கத்தை கண்டறிந்தால் நீண்ட காலம் சிகிச்சை எடுக்க வேண்டி இருக்கும்.
 
பால்வினை நோய் குறித்து மக்களிடத்தில் உள்ள மூட நம்பிக்கை?
 
முதலில் மக்கள் மத்தியில் பால்வினை நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். கடந்த காலங்களில் எச்ஐவிக்கு கொடுத்த முக்கியத்துவம் மற்றும் விழிப்புணர்வை அனைத்து பால்வினை நோய்களுக்கும் ஏற்படுத்த வேண்டும். பால்வினை நோய்களை பொறுத்தவரை பெரும்பாலான அரசு மற்றும் தனியார் மருத்துமனைகளில் மருந்துகள் இருக்கின்றன. மிகக் குறைந்த விலையில் சிகிச்சை மற்றும் மருந்துகள் இருக்கின்றன.
 
அதே போல் கணவன் மனைவி உறவுக்கு இடையில் யாரேனும் ஒருவர் திருமணம் தாண்டிய உறவில் இருந்தால் அவர்களுடைய துணைக்கும் பரிசோதனை மேற்கொள்வது அவசியம்.
 
Hot Tub Sex பால்வினை நோய் பரவுவதை தடுக்குமா?
 
நிச்சயமா இல்லை. அப்படிதான் பெரும்பாலானவர்கள் நினைக்கிறார்கள். அறிகுறியே இல்லாமல் பால்வினை நோய் பரவும் வாய்ப்புகள் அதிகம் என்பதால், எந்த ஒரு முறையற்ற உறவும் பால்வினை நோய் பரவுதலின் தொடக்கமாக இருக்கும்.
 
அதே போல் பால்வினை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதை முழுமையாக சரி செய்யாவிட்டால் அவர்கள் யாருடன் உறவு கொண்டாலும் நிச்சயம் அது மற்றவர்களுக்கு பரவும்.
 
பால்வினை நோய்களை எப்படி தடுப்பது?
 
சிறந்த தற்காப்பு முறை முறையான ஆணுறைகளை பயன்படுத்துவது தான். அதே போல் Comprehensive Sexual education மூலம் 11 வயது ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு பாலியல் கல்வி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவது அவசியம். பால்வினை நோய்கள், கர்ப்பம் தரித்தல் போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினால் தேவையற்ற கர்ப்பங்களையும், பால்வினை நோய்கள் பரவுவதையும் தடுக்க முடியும்.
 
15 வயது முதல் 49 வயது வரையிலான ஆண் பெண் இருபாலரும் பால்வினை நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள். முறையான பாலியல் கல்வி மூலம் பால்வினை நோய்கள் பரவுவதை நிச்சயம் தடுக்க முடியும்.
 
இன்றும் உலக அளவில் பெண்களை அதிகம் பாதிக்க கூடியது கர்ப்ப வாய் புற்றுநோய். இந்த நோயினால் வருடத்திற்கு 3 லட்சம் பெண்கள் இறக்கிறார்கள். 5 லட்சம் பேர் புதிதாக பாதிக்கப்படுகிறார்கள். வளரும் நாடுகளில் இது மிகப் பெரிய பிரச்னையாக இருக்கிறது. இதனால்11 வயது முதல் 15 வயது பெண் குழந்தைகளுக்கு human papillomavirus தடுப்பூசியை நிச்சயம் போட வேண்டும். இதனால் நோய் தாக்கத்தை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய முடியும்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராஜேந்திர பாலாஜிக்கு சிறை தண்டனை..! – நீதிமன்றம் உத்தரவு!