Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

துப்புரவுப் பணியாளர் கிரிக்கெட் வீரரானது எப்படி? 5 பந்துகளில் 5 சிக்சர்களை நொறுக்கிய ரிங்கு சிங்கின் வெற்றிக் கதை

Rinku singh
, திங்கள், 10 ஏப்ரல் 2023 (16:28 IST)
குஜராத் டைட்டன்சுக்கு எதிரான ஆட்டத்தின் கடைசி ஓவரில் கடைசி 5 பந்துகளையும் சிக்சராக்கி கொல்கத்தா நைட்ரைடர்சுக்கு வெற்றி தேடித் தந்ததன் மூலம் ரிங்கு சிங் ஒரே இரவில் கிரிக்கெட் உலகம் முழுவதும் அறிந்த நபராகிவிட்டார். ஏனெனில், கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை யாரும் செய்திடாத சாதனை இது.

இன்று புகழ் ஏணியின் உச்சியில் இருக்கும் ரிங்கு சிங்கிற்கு அந்த உயரத்தை அடைவதற்கான பயணம் எளிதாக இருந்திடவில்லை. அன்றாட வாழ்க்கைக்கே போராடும் எளிமையான குடும்பத்தில் பிறந்து, துப்புரவுப் பணி செய்து, பின்னர் கிரிக்கெட்டே எதிர்காலம் என்று தீர்மானித்தாலும் அதனை அடையும் வழி தெரியாமல் திண்டாடி கொல்கத்தா நைட்ரைடர்ஸ் வாயிலாக உலகறிந்தவராகி இருக்கிறார் ரிங்கு சிங். அவரது வாழ்க்கைப் போராட்டத்தை அறிந்து கொள்வது முன்னேறத் துடிக்கும் அனைத்து இளைஞர்களுக்கும் நல்ல ஊக்கம் தருவதாக இருக்கும்.

கிரிக்கெட் விளையாடினாலே அடித்து உதைத்த தந்தை

உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் கேஸ் சிலிண்டர் வியாபாரியின் 5 குழந்தைகளில் ஒருவராக பிறந்தவர் ரிங்கு சிங். சிறு வயதில் பள்ளி முடித்து வீட்டிற்கு வந்ததும் தந்தைக்கு உதவியாக கேஸ் சிலிண்டர்களை வாடிக்கையாளர்களின் வீட்டிற்கே கொண்டு போய் டெலிவரி செய்யும் வேலையை அவர் செய்து வந்துள்ளார். கிரிக்கெட் விளையாடச் செல்லும் போதெல்லாம் அவரை வீட்டில் தந்தை அடித்து உதைப்பது வழக்கமான ஒன்றாகிவிட்டிருந்தது.

"வேலையில்லாத நேரத்தில் மட்டுமே நான் கிரிக்கெட் விளையாடச் செல்ல வேண்டும் என்பது என் தந்தையின் விருப்பம். அதனால், நான் கிரிக்கெட் விளையாடச் செல்வது, அதற்காக வீட்டில் திட்டு வாங்கி, உதைபடுவதும் வாடிக்கையான ஒன்றாகிவிட்டது. வீட்டிற்கு வந்ததும் என்னை அடித்து உதைக்க வேண்டும் என்றுதான் அவரும் எண்ணுவார். ஆனால் என் சகோதரர்கள் எனக்கு ஆதரவாக வருவார்கள். கிரிக்கெட் மீதான ஆர்வத்தை கைவிடாமல் அதனைத் தொடரச் செய்தது அவர்கள்தான். கிரிக்கெட் பந்து வாங்கக் கூட என்னிடம் பணம் இல்லை. சில நல்ல உள்ளங்கள் எனக்கு உதவி செய்தார்கள்" ரிங்கு சிங் தனது சிறு வயது அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

கிரிக்கெட்டில் கிடைத்த மோட்டார் சைக்கிளை தந்தைக்கு பரிசளித்த ரிங்கு

அலிகாரில் பல வணிகர்கள், தொழிலதிபர்களின் வீடுகளுக்கு சிலிண்டர்களை நேரில் டெலிவரி செய்து வந்த போதிலும் ஒரு இருசக்கர வாகனத்தை வாங்க முடியாத நிலையிலேயே ரிங்கு சிங் இருந்து வந்துள்ளார். உள்ளூரில் ஒரு கிரிக்கெட் தொடரின் போது சிறப்பாக விளையாடியதற்காக மோட்டார் சைக்கிள் ஒன்று பரிசாகக் கிடைத்துள்ளது. அதனை தன்னுடைய தந்தைக்கு அவர் பரிசளித்துள்ளார்.
webdunia

கிரிக்கெட் மீதான அவரது ஆர்வத்தையும், கிரிக்கெட்டில் சாதிப்பதற்கு அவருக்கிருந்த வாய்ப்புகளையும் புரிந்து கொண்ட குடும்பம் அதன் பிறகு அவருக்கு ஆதரவாக இருந்துள்ளது. ஆனாலும் ஒட்டுமொத்த குடும்பமும் பொருளாதாரச் சிக்கலில் உழன்று கொண்டே இருந்ததால் அவரது கனவை நனவாக்க பெரிய அளவில் அவர்களால் உதவ முடியவில்லை.

கோச்சிங் சென்டரில் துப்புரவுப் பணியாளர் வேலை

ஒரு கட்டத்தில், குடும்பத் தேவைகளுக்காக ஒரு வேலையில் சேர வேண்டிய நிர்பந்தம் ரிங்குசிங்கிற்கு ஏற்பட்டுள்ளது. வேலைக்கான தேடல், ஒரு கோச்சிங் சென்டரில் துப்புரவுப் பணியில் போய் முடிந்துள்ளது.

"பயிற்சி நிறுவனம் ஒன்றில் தளத்தை சுத்தம் செய்யும் துப்புரவாளர் பணி கிடைத்தது. தினமும் அங்கு காலையில் சென்று தரையை சுத்தம் செய்ய வேண்டியது என் வேலை. என் சகோதரன் மூலமாக எனக்கு அந்த வேலை கிடைத்தது. அந்த வேலையில் தொடர எனக்கு விருப்பம் இல்லை என்பதால் வேலையை விட்டுவிட்டேன்.

அது சரியான முடிவு என்று நான் நினைக்கவில்லை. ஏனெனில், படிப்பில் நான் மிகவும் சுமார் ரகம். அதனால், கிரிக்கெட்டில் கவனம் செலுத்த தீர்மானித்தேன். ஏனெனில், என் வாழ்க்கையில் முன்னோக்கிச் செல்ல கிரிக்கெட்டில் தேர்வதே முக்கியம் என்று நினைத்தேன்." என்கிறார் ரிங்குசிங்.

ரிங்கு சிங்கிற்கு உதவி புரிந்தது யார்?

கிரிக்கெட் வீரராக வேண்டும் என்ற வேட்கை இருந்தாலும் அதற்கான வழி என்னவென்று ரிங்கு சிங் தெரிந்திருக்கவில்லை. 16 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் அணியில் தேர்வாக என்ன செய்ய வேண்டும் என்பது அவருக்கு தெரியவில்லை. இதனால், முதல் சுற்றிலேயே 2 முறை நிராகரிக்கப்பட்டிருக்கிறார். அப்போதுதான், அலிகாரைச் சேர்ந்த முகமது ஜீஷன் அவருக்கு உதவி செய்ய முன்வந்திருக்கிறார்.
webdunia

அலிகாரைச் சேர்ந்த மசூத் அமின் என்பவர்தான் ரிங்குவை சிறு வயது முதலே வழிநடத்தி வந்துள்ளார். அவர்தான் இப்போதும் ரிங்கு சிங்கை வழிநடத்துகிறார். முகமது ஜீஷன் தனக்குச் செய்த உதவியை ரிங்கு இன்றும் மறக்காமல் இருக்கிறார்.

2018-ல் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மூலம் விடியல்

2018-ம் ஆண்டு கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 80 லட்ச ரூபாய்க்கு இவரை வாங்கிய பிறகே வெளியுலகிற்கு ரிங்கு சிங்கின் பெயர் முதன் முறையாக தெரியவந்தது. அதுவரையிலும் உத்தரபிரதேசத்தில் உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக ஆடி வந்தாலும் கிரிக்கெட் ரசிகர்கள் அவரை அறிந்திருக்கவில்லை.

"அலிகாரில் இருந்து ஐ.பி.எல். லீக்கில் விளையாடிய முதல் நபர் நான் தான்" என்கிறார் ரிங்கு சிங். ஐ.பி.எல்.லில் விளையாடத் தேர்வான அவருக்கு வீட்டில் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது. ஏனெனில், அவ்வளவு பணத்தை அவரது வீட்டில் இதற்கு முன்பு யாரும் பார்த்திருக்கவில்லை. அத்துடன் அவர்களது பொருளாதார பிரச்னைகள் அனைத்தும் தீர்ந்துவிட்டன. கடன்களை திருப்பிச் செலுத்திவிட்டு, வீடு கட்டி, நிலபுலன்களையும் அவர்கள் குடும்பம் வாங்கியுள்ளது.

ரிங்கு சிங் விரும்பிய உண்மையான அற்புதம் எது?

ஆனால், ரிங்கு சிங் விரும்பிய உண்மையான அற்புதம் இன்னும் நிகழவில்லை. அது, ஐ.பி.எல். தொடரின் வாயிலாக கிரிக்கெட் ரசிகர்களின் இதயத்தை வெல்வது. அந்த முயற்சியிலேயே ஒவ்வொரு தொடரும் கடந்து கொண்டிருந்தது. கிடைத்த வாய்ப்புகளில் அவரால் நினைத்த அளவுக்கு பிரகாசிக்க முடியாமல் போய்விட்டது.
webdunia

இடது கை பேட்ஸ்மேன் மற்றும் சுழற்பந்துவீச்சாளரான ரிங்கு சிங், நேற்றைப் போலவே கடந்த ஆண்டும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்சுக்கு எதிராக அற்புதமான ஒரு இன்னிங்சை ஆடியிருந்தார். கடைசி ஓவரில் 21 ரன் தேவை என்ற நிலையில் முதல் நான்கு பந்துகளில் முறையே 4, 6, 6, 2 என்று ரன்களை குவித்த ரிங்கு சிங் ஐந்தாவது பந்தில் ஆட்டமிழந்ததால், அந்தப் போட்டியில் 2 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி தோற்றுப் போய்விட்டது. அதனால், அந்த ஆட்டம் ரசிகர்களின் மனதில் தங்காமல் போய்விட்டதால், ரிங்கு சிங்கின் பெயரும் உச்சரிக்கப்படாமலேயே போய்விட்டது.

கனவைத் துரத்தி நனவாக்கிய தருணம்

ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கும் தனது கனவை விடாமல் துரத்திய ரிங்கு சிங், நடப்புத் தொடரில் அதனை நனவாக்கியுள்ளார். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி வெற்றி பெற கடைசி ஓவரில் 29 ரன்கள் தேவைப்பட, முதல் பந்தை சந்தித்த உமேஷ் யாதவ் ஒரு ரன் எடுத்து ரிங்கு சிங்கை பேட்டிங் முனைக்கு அனுப்பினார். பின்னர் நடந்தது வரலாறு. அடுத்த 5 பந்துகளையும் வரிசையாக சிக்சருக்கு அனுப்பி கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு அவர் அசாத்திய வெற்றியைப் பெற்றுக் கொடுத்தார்.

கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ஓவரில் 5 சிக்சர்கள் என்பது ஒன்றும் புதிதல்ல. யுவராஜ், கேரி சோபர்ஸ், ரவி சாஸ்திரி ஆகியோரது 6 பந்தில் 6 சிக்சர் என்ற சாதனையையும் தாண்டி ஒரே ஓவரில் 7 சிக்சர்கள் கூட அடிக்கப்பட்டிருக்கின்றன. அந்த சாதனைக்கு சொந்தக்காரரான சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ருதுராஜ் கெய்க்வாட், தனக்கு கிடைத்த நோபாலையும் சிக்சருக்கு அனுப்பி சாதித்திருந்தார். ஆனால், இவை அனைத்துமே ஒரு இன்னிங்சின் நடுவே கிடைத்த ஓவர்களில் அடிக்கப்பட்டவை.

ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் ரிங்கு சிங் ஜூரம்

சேஸிங்கின் போது, கடைசி ஓவரில் கடைசி 5 பந்துகளை தொடர்ச்சியாக சிக்சராக்கிய வகையில்தான் ரிங்கு சிங் தனித்து நிற்கிறார். இதன் மூலம் ஐ.பி.எல். கண்ட நட்சத்திங்களில் ஒருவராக அவரும் இன்று ஒளிர்கிறார். ஒரே ஆட்டத்தில் ஆந்த்ரே ரஸ்ஸல், ரஷித் கான் போன்ற அசகாய சூரர்களை எல்லாம் தாண்டி கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரது இதயத்திலும் இடம் பிடித்துள்ளார்.

ரிங்கு சிங் கனவு கண்டது போலவே இன்று கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரது உதடுகளும் அவரது பெயரை உச்சரித்துக் கொண்டிருக்கின்றன. பிரமாண்ட சிக்சர்களை விளாசி கொல்கத்தா நைட்ரைடர்சுக்கு வெற்றித் தேடித் தந்த ரிங்கு சிங்கின் சிறப்பான ஆட்டமே ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டா உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பேசுபடு பொருளாக இருக்கிறது.

சச்சின், சேவாக் உள்ளிட்ட ஜாம்பவான்கள் புகழாரம்

கிரிக்கெட் கடவுள் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் சச்சின் டெண்டுல்கர் மற்றும் வீரேந்திர சேவாக், பிரெண்டன் மெக்கல்லம் போன்ற ஜாம்பவான்களும், ரோகித், தினேஷ் கார்த்திக் போன்ற இந்நாள் கிரிக்கெட் வீரர்களும் ரிங்கு சிங்கை வெகுவாக பாராட்டியுள்ளனர்.

கொல்கத்தா அணி உரிமையாளர் ஷாரூக் கானுக்கு ரிங்கு சிங் நன்றி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளரான இந்தி நடிகர் ஷாரூக் கான், தனது நடிப்பில் அண்மையில் வெளியான பதான் பட போஸ்டரில் தனது இடத்தில் ரிங்கு சிங்கை பொருத்திய மீம்சை பகிர்ந்து அவரை பாராட்டியுள்ளார். தனக்கு தொடர்ந்து ஆதரவு தந்து வருவதற்காக, இந்த ட்வீட்டை பகிர்ந்து ஷாரூக்கானுக்கு ரிங்கு சிங் நன்றி கூறியுள்ளார்.

மன உறுதியும், கடின உழைப்பும், விடா முயற்சியும் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு ரிங்கு சிங் நம் கண் முன்னே இருக்கும் சிறந்த உதாரணம். அவரது வாழ்க்கைப் போராட்டம் அதனைப் படிக்கும் அவரைப் போன்ற ஒவ்வொருவரின் மனதிலும் நம்பிக்கையை துளிர்விடச் செய்யும்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குழந்தைகளை கிணற்றில் வீசிக் கொன்ற செவிலியர்...