பல மாதங்களாக ஹாங்காங்கில் நீடித்த மக்கள் போராட்டங்களுக்குக் காரணமான சர்ச்சைக்குரிய சட்ட மசோதாவை முழுமையாக விலக்கிக்கொள்வதாக ஹாங்காங் நிர்வாகத்தின் தலைவர் கேரி லேம் தெரிவித்துள்ளார்.
குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் நபர்களை சீனா மற்றும் தைவானுக்கு நாடுகடத்த இந்தச் சட்ட மசோதா வழிவகை செய்யும்.
1898 முதல் 99 ஆண்டுகள் பிரிட்டனால் குத்தகைக்கு எடுக்கப்பட்டிருந்த ஹாங்காங், 1997இல் சீனாவுடன் இணைந்தது. எனினும், 'ஒரு நாடு இரு அமைப்பு முறை' எனும் கொள்கையின்படி, சட்டம் இயற்றல், நிர்வாகம் உள்ளிட்டவற்றில் ஹாங்காங் தன்னாட்சி அதிகாரங்களைப் பெற்றிருந்தது.
குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களை சீனாவுக்கு நாடு கடத்தினால், அது ஹாங்காங்கின் தன்னாட்சி உரிமைகளை பாதிக்கும் என்றும் சீனாவின் தலையீட்டை அதிகரிக்கச் செய்யும் என்றும் அந்த மசோதா ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டபோது விமர்சனங்கள் எழுந்தன.
சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ள ஹாங்காங்கைச் சேர்ந்தவர்களை சட்ட ரீதியாக அச்சுறுத்தவும் அந்தச் சட்டம் பயன்படுத்தப்படலாம் என்றும் ஜனநாயகத்துக்கு ஆதரவானவர்கள் கண்டனங்களைத் தெரிவித்தனர்.
போராட்டங்களின்போது காவல் துறையினருடன் மோதலில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டனர். ஹாங்காங் பிராந்திய நாடாளுமன்ற வளாகமும் போராட்டங்களின்போது தாக்குதலுக்கு உள்ளானது.
மழை, வெயில் பாராமல் வணிகர்கள், வழக்கறிஞர்கள், மாணவர்கள், ஜனநாயகத்திற்கான செயற்பாட்டாளர்கள் மற்றும் மத குழுக்கள் என சமூகத்தின் அனைத்து பிரிவினரும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த சட்டம் நடைமுறைக்கு வரும்பட்சத்தில், கொலை, பாலியல் வல்லுறவு உள்ளிட்ட குற்றங்களில் ஈடுப்பட்டவர்கள் என்று சந்தேகிக்கும் நபர்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சீனா, தைவான் கோரினால் அவர்களிடம் அந்த நபர்களை ஒப்படைக்க இந்த சட்ட மசோதா அனுமதிக்கிறது.
எனினும் அரசியல் எதிர் கருத்து உடையவர்களுக்கு எதிரானது என கருதப்படும் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான மக்கள் ஹாங்காங்கில் பேரணி சென்றனர்.
பெரிய அளவில் நடந்த போராட்டங்களைத் தொடர்ந்து இந்தச் சட்ட மசோதாவை இடைநிறுத்தி வைப்பதாக அறிவித்த கேரி லேம், அதை அறிமுகம் செய்ததற்கு மன்னிப்பும் கோரினார். எனினும், முழுமையாக அதை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் 14வது வாரமாகப் போராட்டங்கள் தொடர்ந்தன.
கைதான போராட்டக்காரர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும், காவல் துறை தாக்குதல் மீது சுதந்திரமான விசராணை வேண்டும் ஆகிய கோரிக்கையையும் போராட்டக்காரர்கள் முன்னெடுத்தனர்.
திங்களன்று கேரி லேம் பேசும் குரல் பதிவு ஒன்றும் வெளியானது. அங்கு அரசியல் நெருக்கடியை தமது முடிவு உண்டாக்கியதாகவும், இவ்வளவு பெரிய சிக்கலை தாம் உண்டாக்கியது மன்னிக்க முடியாதது என்றும் அதில் கேரி லேம் தன்னைத் தானே விமர்சனம் செய்துகொண்டார்.
இதற்கு முன்னர் 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், சீனாவின் ஆதிக்கத்திற்கு எதிராக ஹாங்காங்கில் ''அம்பிரல்லா போராட்டம்'' நடந்தது.
அரசு தலைமையகங்களின் முன்னால் இருந்த வளாகங்களை சட்டபூர்வமற்ற முறையில் ஆக்கிரமித்த ஜோசுவா வாங், அலெக்ஸ் சொவ் மற்றும் நாதன் லா உள்ளிட்ட இளைஞர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இந்தப் போராட்டம், குடை (அம்பிரல்லா) இயக்கம் என்று கூறப்படும் ஜனநாயக போராட்டத்திற்கு இட்டுச் சென்றது. இதில் சீனாவால் ஆளப்பட்டுவரும் தங்களது நிலப்பரப்பில் ஜனநாயக மாற்றம் நிகழ வேண்டும் என்று பல்லாயிரக்கணக்கான ஹாங்காங் மக்கள் இணைத்து கொண்டனர்.