Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திரையரங்க தளர்வு உத்தரவை ரத்து செய்ய தமிழக அரசுக்கு இந்திய உள்துறை ஆணை

Webdunia
வியாழன், 7 ஜனவரி 2021 (14:01 IST)
திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்க தமிழக அரசு கடந்த 4ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை உடனே ரத்து செய்யும்படி அம்மாநில அரசுக்கு இந்திய உள்துறை உத்தரவிட்டிருக்கிறது.

இந்த விவகாரத்தில், கொரோனா பரவல் தடுப்பு தொடர்பான உள்துறை அமைச்சகத்தின் 2020ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதியிட்ட வழிகாட்டுதலுக்கு உட்பட்டு செயல்படுமாறும் இந்திய உள்துறை கேட்டுக் கொண்டிருக்கிறது.

இது தொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர் கே. சண்முகத்துக்கு இந்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா ஜனவரி 5ஆம் தேதியிட்டு எழுதிய கடிதத்தில், இந்திய உள்துறை கடைசியாக கடந்த டிசம்பர் 28ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில் திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது என்று சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இந்த நிலையில், கடந்த வாரம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை திரைப்பட நடிகர் விஜய்யும் அவர் நடித்து வரும் மாஸ்டர் திரைப்பட குழுவினரும் சந்தித்துப் பேசினர். அப்போது திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்குமாறு அவர்கள் கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியானது.

இதை உறுதிப்படுத்தும் வகையில் அடுத்த சில தினங்களில் தமிழக அரசு ஜனவரி 4ஆம் தேதியிட்டு பிறப்பித்த உத்தரவில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையை கடைப்பிடிக்கும் அதே சமயம், திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அரசின் நடவடிக்கை பரவலான விமர்சனங்களுக்கு வழிவகுத்தது.

இந்தியாவிலும் பரவிய புதிய கொரோனா திரிபு


பிரிட்டனில் உருமாறிய புதிய கொரோனா திரிபு தீவிரமாகி வருவதால், அங்கு முழு பொது முடக்கத்தை அந்த நாட்டு அரசு சமீபத்தில் அமல்படுத்தியது. இந்த தீவிரத்தை உணர்ந்து, அந்த நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன், டெல்லியில் வரும் 26ஆம் தேதி நடைபெறவுள்ள குடியரசு தின விழாவில் தலைமை விருந்தினராக கலந்து கொள்ள இயலாத நிலையை இந்திய பிரதமர் மோதியிடம் ஜனவரி 5ஆம் தேதி தொலைபேசி வாயிலாக விளக்கினார்.

இதற்கிடையே, பிரிட்டனில் இருந்து இந்தியாவுக்கு வந்த சுமார் 20 பேருக்கு புதிய வகை கொரோனா திரிபுவின் தாக்கம் இருப்பது தெரிய வந்ததால், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர மருத்துவ கண்காணிப்பு மற்றும் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். இதில், தமிழகத்துக்கு வந்த ஒருவருக்கும் புதிய திரிபுவின் தாக்கம் இருப்பது தெரிய வந்ததால, அவரும் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார்.

இத்தகைய சூழலில், கொரோனா பரவலுக்கு வாய்ப்பு கொடுக்கும் வகையில் திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களை தமிழக அரசு அனுமதித்திருப்பதாக, பலத்த சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

அரசின் இந்த அனுமதி, திரைத்துறையினரைச் சேர்ந்தவர்களாலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. மருத்துவத் துறையினர், அரசியல் கட்சிகள் என பலரும் அரசின் நடவடிக்கையை விமர்சிக்கும் வேளையில், இது நடிகர் விஜய்யின் அழுத்தம் காரணமாக முதல்வர் எடுத்த முடிவு என்று ஒரு பிரிவினரும், இது தமிழக முதல்வரின் ஏகோபித்த முடிவு என்றும் அவரே இதற்கு ஆகும் விளைவுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் விமர்சனங்கள் வலுத்து வருகின்றன.

விவாதத்தை தூண்டிய நடவடிக்கை

இந்த விவகாரம் கடந்த இரண்டு தினங்களாக சர்ச்சையையும் விவாதத்தையும் தூண்டியது. ஆனால், அரசு தரப்பிடம் இருந்து எந்த பதிலும் வெளிவராத நிலையில், தமிழக அரசுக்கு இந்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா கடிதம் எழுதியிருக்கிறார்.

கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் மத்திய உள்துறை பிறப்பித்த உத்தரவு மட்டுமின்றி இது தொடர்பாக கடந்த ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதி, உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்த வழக்கில், முக கவசங்கள், சமூக இடைவெளி போன்ற நடவடிக்கைகள், மாநிலங்களுக்கு உள்ளும் மாநிலங்களுக்கு இடையேயும் உள்ள நடமாட்டங்கள் தொடர்பான வழிகாட்டுதல்களை கடுமையாக பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்டதையும் உள்துறைச் செயலாளர் அஜய் பல்லா தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இவற்றை கருத்தில் கொண்டு, டிசம்பர் 28ஆம் தேதி இந்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட வழிகாட்டுதல்களின்படி கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று அஜய் பல்லா தமிழக தலைமைச் செயலாளரை கேட்டுக்கொண்டிருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments