Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வேகமெடுக்கும் கொரோனா பாதிப்பு: இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்தில் மீண்டும் பொது முடக்கம்

Advertiesment
வேகமெடுக்கும் கொரோனா பாதிப்பு: இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்தில் மீண்டும் பொது முடக்கம்
, செவ்வாய், 5 ஜனவரி 2021 (15:14 IST)
இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்தில் மீண்டும் பொது முடக்க கட்டுப்பாடுகள் தொடங்குவதால், பெரும்பாலான மக்கள் அனுமதிக்கப்பட்ட சில காரணங்களைத் தவிர வீட்டிலேயே இருக்க வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இங்கிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸில் உள்ள பெரும்பாலான பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அதே நேரத்தில் வடக்கு அயர்லாந்தில் இணையவழி கற்றல் தொடர்ந்து அமலில் இருக்கும்.

இங்கிலாந்தில் இந்த பொது முடக்க கட்டுப்பாடுகள் பிப்ரவரி இரண்டாம் வாரம் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்காட்லாந்தை பொறுத்தவரை, இந்த விதிகள் ஜனவரி இறுதியில் மறுபரிசீலனை செய்யப்படும்.

"வரவிருக்கும் வாரங்கள் இன்னும் கடினமானவை" என பிரிட்டனின் பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரித்துள்ளார்.

திங்களன்று பிரிட்டனில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 58,784-ஆகப் பதிவானது. அதன் பிறகுதான் இந்தக் கட்டுப்பாடுகள் வந்திருக்கின்றன. மேலும், கடந்த 28 நாட்களுக்குள் 407 இறப்புகள் பதிவாகியுள்ளன.

முன்னதாக, பிரிட்டனில் பொது முடக்க கட்டுப்பாடுகளை அறிவித்த பிரதமர் ஜான்சன், "தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து இதுவரை இல்லாத அளவுக்கு மருத்துவமனைகள் கொரோனா வைரஸ் நோயாளிகளால் அதிக அழுத்தத்திற்கு உள்ளாகிக் கொண்டிருக்கின்றன" என்றார்.

அத்தியாவசிய மருத்துவத் தேவைகள், உணவுப் பொருட்களை வாங்குவது, உடற்பயிற்சி போன்ற வீட்டில் இருந்தே செய்ய முடியாத, வரையறுக்கப்பட்ட விதிவிலக்குகளைத் தவிர்த்து, வீட்டுக்குள்ளேயே மக்கள் இருக்குமாறு அவர் உத்தரவிட்டிருக்கிறார். மேலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உடனடியாக பெரும்பான்மையான மாணவர்களுக்கு இணையவழி கற்பித்தலை தொடங்க வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.

பராமரிப்பு இல்லங்களில் இருப்பவர்கள் மற்றும் அவர்களின் பராமரிப்பாளர்கள், 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள், அனைத்து முன்கள சுகாதாரப் பணியாளர்கள், சமூக பராமரிப்புப் பணியாளர்கள் மற்றும் கொரோனாவால் எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்கள் உள்ளிட்டோருக்கு பிப்ரவரி மாதத்திற்குள் ஒரு டோஸ் தடுப்பூசி வழங்கப்படும் என்று போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.

"புதன்கிழமை அதிகாலையில் இருந்துதான் இந்த விதிகள் சட்டமாகும், இருப்பினும் மக்கள் இப்போதிலிருந்தே அவற்றைப் பின்பற்றத் தொடங்க வேண்டும்."

இந்த நிலையில், ஸ்காட்லாந்துக்கான பொது முடக்க கட்டுப்பாடுகளும் திங்களன்று அறிவிக்கப்பட்டன. அங்கு இந்த விதிகள் ஜனவரி இறுதி வரை நீடிக்கும். இதன்படி, ஸ்காட்லாந்தில் பள்ளிகள் வழிபாட்டுத் தளங்கள் மூடப்பட்டிருக்கும். குழு உடற்பயிற்சிக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

"கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து, எந்த கால கட்டத்திலும் இருந்ததை விட இப்போது நாம் எதிர்கொள்ளும் நிலைமை குறித்து நான் அதிகம் கவலை கொண்டுள்ளேன் என்று சொன்னால் அது மிகையாகாது" என ஸ்காட்லாந்தை அமைச்சர் ஸ்டர்ஜன் கூறினார்.

டிசம்பர் 20 முதல் தேசிய அளவிலான பொது முடக்க கட்டுப்பாட்டுகளில் உள்ள வேல்ஸில், ஜனவரி 18 வரை பள்ளிகளும் கல்லூரிகளும் மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொத்த கட்டுப்பாடுகள் வடக்கு அயர்லாந்திலும் அமல்படுத்தப்பட்டுள்ளன.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பறவைக் காய்ச்சல் பீதி: கோழி, வாத்துக்கள் அழிப்பு!!