தமிழக திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிப்பதற்கு எதிரான வழக்கு நாளை விசாரணைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் இன்னமும் முடிவுக்கு வராத நிலையில் திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் இந்த அனுமதியை திரைப்பட ரசிகர்கள் ஒரு பக்கம் கொண்டாடி வந்தாலும், இதனால் தொற்று பரவு அபாயம் அதிகரிக்கும் என மருத்துவர்கள், நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்நிலையில் தமிழக அரசின் 100 சதவீத பார்வையாளர்கள் அனுமதியை ரத்து செய்ய கோரி வழக்கறிஞர்கள் சார்பில் மதுரை கிளை நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டுள்ளது. மனுவை ஏற்றுக் கொண்டுள்ள மதுரை கிளை நீதிமன்றம் நாளை இந்த வழக்கை விசாரிப்பதாக தெரிவித்துள்ளது. இதனால் தமிழக அரசின் அனுமதிக்கு தடை விதிக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.