Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பசுமாடுகள் குறித்து ஆன்லைன் தேர்வு நடத்துகிறது மத்திய அரசு - பரிசுகளும் வழங்க திட்டம்

பசுமாடுகள் குறித்து ஆன்லைன் தேர்வு நடத்துகிறது மத்திய அரசு - பரிசுகளும் வழங்க திட்டம்
, புதன், 6 ஜனவரி 2021 (13:15 IST)
முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

நாட்டு பசுக்களின் நலன் சார்ந்த அறிவியல் தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தேசிய அளவிலான ஆன்லைன் தேர்வு வரும் பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி நடத்தப்படும் என்று மத்திய அரசின் கீழ் செயல்படும் தேசிய காமதேனு ஆயோக் அமைப்பின் தலைவர் வல்லபாய் கதிரியா அறிவித்துள்ளதாக தி இந்து (ஆங்கிலம்) நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

மத்திய மீன்வள, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகத்தின் கீழ் கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தேசிய காமதேனு ஆயோக் அமைப்பு, "பசுக்களின் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டை" பேணிகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த நிலையில், பள்ளி மாணவர்கள் மற்றும் பொது மக்களிடையே நாட்டு பசுக்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் அதுசார்ந்த தொழில் வாய்ப்புகள் குறித்த புரிதலை ஏற்படுவதை நோக்கமாக கொண்ட இந்த தேர்வு முதல் முறையாக அடுத்த மாதம் 25ஆம் தேதி நடத்தப்படவுள்ளது.

மேலும், இலவசமாக நடத்தப்படும் இந்த தேர்வில் பங்கேற்று சிறப்பிடம் பெறுபவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனவரி 13ஆம் தேதி முதல் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி

ஜனவரி 13-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் துவங்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.
webdunia

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்கு எதிராக பல்வேறு நாடுகளும் தடுப்பூசி கண்டறிந்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளன.

குறிப்பாக இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்துடன், இந்தியாவின் புணே நகரில் அமைந்துள்ள சீரம் இன்ஸ்டிட்யூட் இணைந்து உருவாக்கியுள்ள 'கோவிஷீல்ட்' மற்றும் ஹைதராபாத்தின் பாரத் பயோடெக் நிறுவனத்தின் 'கோவேக்சின்' ஆகிய இரண்டு தடுப்பூசிகளுக்கு நேற்று முன்தினம் தேசிய மருந்துக் கட்டுபாட்டு நிறுவனம் அவசர நிலை பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில் ஜனவரி 13-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் துவங்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய அரசு செவ்வாயன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனவரி 13-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்றும், முதல் கட்டமாக ஜூலை மாதத்திற்குள் கொரோனா முன்களப் பணியாளர்கள், 60 வயதிற்கும் மேற்பட்டவர்கள் என முதன்மைத் தேர்வுக் குழுவைச் சேர்ந்த 30 கோடி பேருக்கு தடுப்பூசியினை செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும்' தெரிவிக்கப்பட்டுள்ளது" என்று அந்த செய்தி கூறுகிறது.

சென்னையில் 105 ஆண்டுகளுக்கு பிறகு ஜனவரியில் பெய்த அதிக மழை

சென்னையில் 105 ஆண்டுகளுக்கு பிறகு ஜனவரியில் கன மழையால் தாழ்வான பகுதிகள், சாலைகளில் தண்ணீர் தேங்கியதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.
webdunia

"சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று (ஜனவரி 5) திடீரென மழை வெளுத்து வாங்கியது. பல இடங்களில் கனமழையும் கொட்டியது. வடகிழக்கு பருவமழை காலம் நிறைவு பெற்று இருந்தாலும், பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. அந்தவகையில் ஜனவரி மாதம் 12ஆம் தேதி வரை மழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் இதுவரை ஜனவரி மாதத்தில் பெய்த மழை அளவில் நேற்று பெய்த மழைதான் அதிகம் என்று கூறப்படுகிறது. கடந்த 1915ஆம் ஆண்டுக்கு பிறகு, ஜனவரி மாதத்தில் இன்று நேற்று அதிகளவு மழை பெய்து இருக்கிறது என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அதன்படி, 105 ஆண்டுகளுக்கு பின் சென்னையில் அதிக அளவு மழை பதிவாகி உள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடைவிடாமல் திடீரென்று மழை பெய்ததற்கான காரணம் குறித்து ஆய்வு மைய அதிகாரிகளிடம் கேட்டபோது, சென்னைக்கு கிழக்கே வங்கக்கடலில் மிகப்பெரிய மேகத்திரள் கூட்டங்கள் ஒன்று கூடியதன் விளைவாகவும், கிழக்கில் இருந்து கீழ்நிலை காற்றும், மேற்கில் இருந்து மேல்நிலை காற்றும் ஒருசேர வீசியதன் விளைவாகவும் இடைவிடாமல் மழை வெளுத்து வாங்கியது. இதுபோன்ற நிகழ்வுகள் குறிப்பிட்ட சில சந்தர்ப்பங்களில் தான் நிகழும். அந்தவகையில் இந்த நிகழ்வு ஏற்கனவே கணிக்கப்பட்ட ஒன்றுதான். ஆனால் எந்த பகுதிகளில் மழை இருக்கும் என்பது தெரியாமல் இருந்தது. அது தற்போது சென்னையில் கொட்டி தீர்த்து இருக்கிறது" என்று கூறியதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லீக் ஆன Redmi Note 9T 5G ரகசியங்கள்... அப்படி என்ன ரகசியமா இருக்கும்?