Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஹசன் நஸ்ரல்லா: இஸ்ரேல், சௌதி சவால்களை தாண்டி லெபனானை ஆட்டுவிக்கும் ஹெஸ்புலா தலைவர்

Hassan Nasrallah
, புதன், 8 நவம்பர் 2023 (21:05 IST)
லெபனான் மற்றும் பிற அரபு நாடுகளில் பிரபலமான ஹசன் நஸ்ரல்லா, ஹெஸ்புலாவின் மையப்புள்ளியாகக் கருதப்படுகிறார்
 
ஹசன் நஸ்ரல்லா ஒரு ஷியா ஆலிம் (மத அறிஞர்). லெபனானில் உள்ள ஹெஸ்புலா குழுவிற்கு தலைமை தாங்குகிறார். இந்த குழு தற்போது லெபனானில் உள்ள மிக முக்கியமான அரசியல் கட்சிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்தக் குழுவுக்கு தனியாக ஒரு ஆயுதப் பிரிவும் இருக்கிறது.
 
லெபனான் மற்றும் பிற அரபு நாடுகளில் பிரபலமான ஹசன் நஸ்ரல்லா, ஹெஸ்புலாவின் மையப்புள்ளியாகக் கருதப்படுகிறார். இந்த குழுவின் வரலாற்றில் அவர் ஒரு மிக முக்கிய பங்கைக் கொண்டிருக்கிறார்.
 
அவர் இரான் நாட்டு அதி உயர் தலைவரான அலி கமேனியுடன் மிகவும் நெருக்கமான, சிறப்பு வாய்ந்த உறவுகளைக் கொண்டுள்ளார். அமெரிக்காவால் ஹெஸ்புலா பயங்கரவாத அமைப்பாக பட்டியலிடப்பட்ட போதிலும், இரானின் தலைவர்களோ அல்லது நஸ்ரல்லாவோ தங்கள் நெருங்கிய உறவுகளை ஒருபோதும் மறைக்கவில்லை.
 
ஹசன் நஸ்ரல்லாவுக்கு எதிரிகள் உள்ளதைப் போலவே ஆர்வம் மிக்க ஆதரவாளர்களும் இருக்கின்றனர். இதனாலேயே, இஸ்ரேலால் கொலை செய்யப்படும் அச்சம் காரணமாக அவர் பல ஆண்டுகளாக பொதுவெளியில் காணப்படுவதில்லை. ஆனால் இந்த காரணத்தினால் அவரது ஆதரவாளர்கள் அவரது பேச்சுகளை அதிகமாகக் கேட்க முடியாத நிலையில் இருக்கிறார்கள்.
 
ஹெஸ்புலாவின் நோக்கங்களில் ஒன்று இஸ்ரேலை அழிப்பதாகும். அந்த குழுவை ஹமாஸை விட பலம் வாய்ந்த எதிரியாக இஸ்ரேல் பார்க்கிறது.பட மூலாதாரம்,GETTY IMAGES
இத்தகைய பேச்சுகள் உண்மையில் அதிகாரத்தைப் பயன்படுத்துவதில் நஸ்ரல்லாவின் முக்கியமான ஆயுதமாகும். இந்த வழியில் அவர் லெபனான் மற்றும் உலகில் உள்ள பல்வேறு பிரச்னைகளைப் பற்றி கருத்துரைத்து தனது போட்டியாளர்களுக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிக்கிறார்.
 
லெபனானில் உள்ள பலர் 2006 இல் இஸ்ரேலுக்கு எதிரான ஹெஸ்புலாவின் பேரழிவுகரமான ஒரு மாத காலப் போரை இன்னும் நினைவில் வைத்திருக்கிறார்கள். மேலும், இக்குழு நாட்டை மற்றொரு போருக்குத் தள்ளக்கூடும் என்று அஞ்சுகின்றனர்.
 
ஹெஸ்புலாவின் நோக்கங்களில் ஒன்று இஸ்ரேலை அழிப்பதாகும். அந்த குழுவை ஹமாஸை விட பலம் வாய்ந்த எதிரியாக இஸ்ரேல் பார்க்கிறது. இஸ்ரேலியப் பகுதிகளை நீண்ட தூரத்தில் தாக்கக்கூடிய ஏவுகணைகள் உட்பட ஏராளமான ஆயுதங்கள் ஹெஸ்புலாவிடம் உள்ளன. பயிற்சி பெற்ற ஆயிரக்கணக்கான போர் வீரர்களையும் கொண்டுள்ளது.
 
இந்த சர்ச்சையில் ஹெஸ்புலா இரண்டாவது தாக்குதலைத் தொடங்கியது. அதற்கு 'கற்பனை செய்ய முடியாத' பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.
 
 
ஒரு முழு அளவிலான போர் லெபனானுக்கு பேரழிவை ஏற்படுத்தும் என்பதால் அதற்கு பொதுமக்களின் ஆதரவு குறைவாக உள்ளது. லெபனான் பல ஆண்டுகளாக பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளது என்பதுடன் அரசியல் முட்டுக்கட்டை காரணமாக ஒழுங்காக செயல்படும் அரசாங்கமும் அங்கு இல்லை.
 
இந்தக் குழுக்களின் மீது இரானுக்கு எந்தளவு நேரடிச் செல்வாக்கு உள்ளது என்பது தெளிவாகத் தெரியவில்லை.
 
கடந்த ஞாயிற்றுக்கிழமை, இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, இஸ்ரேலின் குற்றங்கள் எல்லை மீறிவிட்டதாக கூறியிருந்தார். எதையும் செய்ய வேண்டாம் என்று வாஷிங்டன் சொல்கிறது. ஆனால் அது பெரிய அளவில் இஸ்ரேலை ஆதரித்து வருகிறது என்று அவர் கூறியிருந்தார்.
 
ஹெஸ்புலாவுக்கு நெருக்கமான ஒருவர், கடந்த வாரம் பெயர் தெரியாத வகையில் பேசிய போது, இஸ்ரேலுக்கு எதிரான மற்றும் அமெரிக்க எதிர்ப்பு பேச்சுகளுக்கு பெயர் பெற்ற ஹசன் நஸ்ரல்லா, நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், அவர் பகிரங்கமாக மௌனமாக இருந்த போதிலும், குழுவிற்கு நெருக்கமாக இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், லெபனான் ராணுவத் தலைமையுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளது என்றும் கூறினார்.
 
காஸாவில் மனிதாபிமான போர் இடைநிறுத்தமா? அதற்கும் போர் நிறுத்தத்திற்கும் என்ன வேறுபாடு?
.
 
அவர் பெய்ரூட்டின் கிழக்கு பகுதியில் ஏழைகள் வசிக்கும் பகுதியில் பிறந்தார். அவரது தந்தை ஒரு சிறிய கடையின் உரிமையாளராக இருந்தார். அவருடைய ஒன்பது குழந்தைகளில் ஹசன் நஸ்ரல்லா மூத்தவர்.
 
லெபனானில் உள்நாட்டுப் போர் தொடங்கியபோது, ​​அவருக்கு ஐந்து வயதாக இருந்தது. லெபனான் குடிமக்கள் மதம் மற்றும் இனம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒருவருக்கொருவர் சண்டையிட்டபோது, ​​பதினைந்து ஆண்டுகளாக அந்த சிறிய மத்திய தரைக்கடல் நாட்டில் பேரழிவை ஏற்படுத்திய நாசகரமான போர் அது.
 
அந்த நேரத்தில், கிறிஸ்தவம் மற்றும் சன்னி இஸ்லாமியப் போராளிக் குழுக்கள் வெளிநாடுகளில் இருந்து உதவி பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது.
 
போர் தொடங்கியதன் காரணமாக, ஹசன் நஸ்ரல்லாவின் தந்தை பெய்ரூட்டை விட்டு வெளியேறி, ஷியா இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசித்து வந்த தெற்கு லெபனானில் உள்ள தனது சொந்த கிராமத்திற்குத் திரும்ப முடிவு செய்தார்.
 
பதினைந்து வயதில், ஹசன் நஸ்ரல்லா அக்காலத்தின் மிக முக்கியமான லெபனான் ஷியா அரசியல்-ராணுவக் குழுவான அமல் இயக்கத்தில் உறுப்பினரானார். இது ஒரு வேகமான மற்றும் சுறுசுறுப்பான குழுவாக அப்போது இருந்தது. அக்குழுவுக்கான அடித்தளத்தை இரான் நாட்டைச் சேர்ந்த மூசா சதர் வலுவாக அமைத்தார்.
 
அந்த நேரத்தில், நஸ்ரல்லா தனது மார்க்கக் கல்வியையும் தொடங்கினார். நஸ்ரல்லாவின் ஆசிரியர்களில் ஒருவர், அவர் ஷேக் ஆவதற்கான பாதையைத் தேர்ந்தெடுத்து நஜாப் நகருக்குச் செல்லுமாறு பரிந்துரைத்தார். ஹசன் நஸ்ரல்லா இக்கருத்தை ஏற்று பதினாறாவது வயதில் இராக் நகரான நஜாப்பை அடைந்தார்.
 
நஜாப்பில் தங்கியிருந்தபோது அப்பாஸ் மௌசவியுடன் (வலது) ஹசன் நஸ்ரல்லா (நடுவில் இருப்பவர்).
 
நஜாப்பில் ஹசன் நஸ்ரல்லா இருந்தபோது, ​​இராக் ஒரு நிலையற்ற நாடாக இருந்தது. இருபது ஆண்டுகளாக தொடர்ச்சியான புரட்சி, ரத்தக்களரியுடன் கூடிய கிளர்ச்சி மற்றும் அரசியல் படுகொலைகளால் ஆளப்பட்டு வந்தது. அந்த காலகட்டத்தில், அப்போதைய இராக்கில் துணை அதிபர் சதாம் ஹுசைன் கணிசமான அதிகாரத்தைப் பெற்றிருந்தார்.
 
ஹசன் நஸ்ரல்லா நஜாப்பில் வசிக்கத் தொடங்கி இரண்டு ஆண்டுகள் கழித்து, பாத் கட்சித் தலைவர்கள், குறிப்பாக சதாம் ஹுசைனின் முடிவுகளில் ஒன்று, இராக் மதரஸாக்களில் இருந்து அனைத்து லெபனான் ஷியா மாணவர்களையும் வெளியேற்றுவது ஆகும்.
 
ஹசன் நஸ்ரல்லா நஜாப்பில் இரண்டு வருடங்கள் மட்டுமே படித்தார். ஆனால் நஜாப்பில் இருந்தது இந்த இளம் லெபனானியரின் வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. நஜாப்பில் அப்பாஸ் மூசாவி என்ற மற்றொரு அறிஞரையும் அவர் சந்தித்தார்.
 
ஒரு காலத்தில் மௌசவி லெபனானில் இருந்த மூசா சதரின் சீடர்களில் ஒருவராகக் கணக்கிடப்பட்டார். இரானின் புரட்சிகர தலைவர் அயதுல்லா கொமேனியின் அரசியல் பார்வையால் அவர் பெரிதும் ஈர்க்கப்பட்டிருந்தார். அவர் நஸ்ரல்லாவை விட எட்டு வயது மூத்தவர் என்பதுடன் ஒரு கடுமையான மற்றும் திறமையான தலைவர் என்ற இடத்தை விரைவில் அடைந்தார்.
 
லெபனானுக்குத் திரும்பிய பிறகு, அவர்கள் இருவரும் உள்ளூரில் நடந்த உள்நாட்டுப் போரில் பங்கேற்றனர். ஆனால் இந்த முறை நஸ்ரல்லா அப்பாஸ் மௌசவியின் சொந்த ஊருக்குச் சென்றார். அங்கு பெரும்பாலான மக்கள் ஷியா இஸ்லாமியர்களாக இருந்தனர்.
 
அந்த காலகட்டத்தில், நஸ்ரல்லா அமல் இயக்கத்தில் உறுப்பினரானார். மேலும் அப்பாஸ் மௌசவி கட்டிய மதரஸாவில் கல்வியைத் தொடர்ந்தார்.
 
 
ஹசன் நஸ்ரல்லா லெபனானுக்குத் திரும்பி ஒரு வருடம் கழித்து, இரானில் ஒரு புரட்சி ஏற்பட்டது என்பதுடன் ருஹோல்லா கொமேனி ஆட்சியைப் பிடித்தார். அங்கிருந்து, இரானுடனான லெபனானின் ஷியா சமூகத்தின் உறவுகள் முற்றிலும் மாறியது மட்டுமல்லாமல், அவர்களின் அரசியல் வாழ்க்கை மற்றும் ஆயுதப் போராட்டமும் இரானில் நடைபெறும் நிகழ்வுகள் மற்றும் அணுகுமுறைகளால் பெரிதும் பாதிக்கப்பட்டன.
 
ஹசன் நஸ்ரல்லா பின்னர் இரானின் அப்போதைய தலைவர்களை தெஹ்ரானில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்குப் பின் கொமேனி அவரை லெபனானில் தனது பிரதிநிதியாக மாற்றினார்.
 
இங்கிருந்துதான் ஹசன் நஸ்ரல்லாவின் இரானுக்கான சுற்றுப்பயணங்கள் தொடங்கின. மேலும், இரானிய அரசாங்கத்தில் தீர்க்கமான மற்றும் சக்திவாய்ந்த மையங்களுடன் அவரது உறவுகள் வலுவடைந்தன.
 
லெபனானின் ஷியா இஸ்லாமிய சமூகத்துடனான உறவுகளுக்கு இரான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. மத்திய கிழக்கில் இஸ்ரேல் இருப்பதால், புரட்சிகர இரானின் வெளியுறவுக் கொள்கையின் முக்கிய முன்னுரிமைகளில் பாலத்தீன இயக்கமும் இருந்து வருகிறது.
 
இந்த காலகட்டத்தில், உள்நாட்டுப் போரில் மூழ்கிய லெபனான், பாலஸ்தீன போராளிகளுக்கு ஒரு முக்கிய தலமாக மாறியது. மேலும், இயற்கையாகவே பெய்ரூட்டைத் தவிர தெற்கு லெபனானில் அவர்கள் வலுவான நிலையில் இருந்துவருகின்றனர்.
 
காஸா: நேரலையில் இருந்த போது சக செய்தியாளர் மரணத்தை அறிந்த செய்தியாளர் கண்ணீர்
 
லெபனானில் அதிகரித்து வரும் உறுதியற்ற தன்மைக்கு மத்தியில், இஸ்ரேல் லெபனானைத் தாக்கி, அந்த நாட்டின் முக்கியமான பகுதிகளை விரைவாகக் கைப்பற்றியது. பாலத்தீனத் தாக்குதலை எதிர்கொள்ள லெபனான் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் கூறியது.
 
இஸ்ரேலிய தாக்குதலுக்குப் பிறகு, ஈரானில் உள்ள பாஸ்தரன்-இ-இன்க்லாப்-இ-இஸ்லாமியின் (இஸ்லாமியப் புரட்சியின் பாதுகாவலர்கள்) ராணுவத் தளபதிகள் லெபனானில் இரானுடன் தொடர்புடைய ராணுவக் குழுவை நிறுவ முடிவு செய்தனர். இந்த இயக்கம் தான் ஹெஸ்பொலா அமைப்பு. ஹசன் நஸ்ரல்லாஹ் மற்றும் அப்பாஸ் மௌசவி ஆகியோர் உள்பட ஏராளமானோர் அமல் இயக்கத்தின் வேறு சில உறுப்பினர்களுடன் புதிதாக உருவாக்கப்பட்ட இந்த அமைப்பில் இணைந்தனர்.
 
இந்த குழு லெபனானில் அமெரிக்க ராணுவத்துக்கு எதிராக ஆயுதமேந்திய தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் அப்பகுதி அரசியலில் விரைவாக ஒரு முக்கியமான அமைப்பாக மாறியது.
 
ஹஸன் நஸ்ரல்லா ஹெஸ்புலா அமைப்பில் சேர்ந்த போது, ​​அவருக்கு 22 வயதுதான் ஆகியிருந்தது. அப்போது அவர் புதியவராகக் கருதப்பட்டார்.
 
இரானுடனான ஹசன் நஸ்ரல்லாவின் உறவுகள் நாளுக்கு நாள் மிகவும் நெருக்கமடைந்தன. அவர் தனது மதக் கல்வியைத் தொடர இரானில் உள்ள கும் நகருக்குச் செல்ல முடிவு செய்தார். நஸ்ரல்லா இரண்டு ஆண்டுகள் கும்மில் படித்தார், இந்த காலகட்டத்தில் பாரசீக மொழியைக் கற்றுக்கொண்டார், மேலும் இரானிய மக்களிடையே நெருங்கிய நண்பர்களை உருவாக்கினார்.
 
அவர் லெபனானுக்கு திரும்பியதும் அவருக்கும் அப்பாஸ் மௌசவிக்கும் இடையே ஒரு பெரிய தகராறு ஏற்பட்டது. அப்போது மௌசவி சிரியாவின் அதிபர் ஹபீஸ் ஆசாத்தின் ஆதரவாளராக இருந்தார். ஆனால் ஹெஸ்பொலா அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய ராணுவத்தினரைத் தாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று நஸ்ரல்லா வலியுறுத்தினார்.
 
ஹெஸ்புலாவில் நஸ்ரல்லாவின் ஆதரவாளர்களின் எண்ணிக்கை குறைந்ததால், சில காலத்திற்குப் பிறகு அவர் இரானில் ஹெஸ்பொலாவின் பிரதிநிதி ஆக்கப்பட்டார். அதனால் அவர் மீண்டும் இரானுக்குத் திரும்பினார். ஆனால் ஹெஸ்புலாவிடம் இருந்து விலகிக் கொண்டார்.
 
அப்போது ஹெஸ்புலா மீது இரானின் செல்வாக்கு நாளுக்கு நாள் குறைந்து வருவது போல் தோன்றியது. ஹெஸ்புலாவின் தலைவர் பதவி நீக்கம் செய்யப்பட்டு அவருக்குப் பதிலாக சிரியாவை ஆதரித்த அப்பாஸ் மௌசவி புதிய தலைவராக நியமிக்கப்பட்டார்.
 
பொதுச்செயலாளர் டோஃபைலி அகற்றப்பட்ட பிறகு, ஹசன் நஸ்ரல்லா திரும்பி வந்து நடைமுறையில் ஹெஸ்பொலாவின் துணைத் தலைவரானார்.
 
ஹெஸ்புலாவின் தலைவராக அப்பாஸ் மௌசவி தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு வருடத்திற்குள், அவர் இஸ்ரேலிய ஏஜென்டுகளால் படுகொலை செய்யப்பட்டார். அதே ஆண்டில், 1992 இல், அக்குழுவின் தலைவராக ஹசன் நஸ்ரல்லா பொறுப்பேற்றுக்கொண்டார்.
 
அப்போது அவரது வயது 32. அந்த நேரத்தில், லெபனானில் உள்நாட்டுப் போர் முடிவடைந்து ஒரு வருடம் ஆகியிருந்தது. மேலும் ஹெஸ்புலாவின் அரசியல் பிரிவை அதன் ராணுவப் பிரிவுடன் இணைந்து நாட்டில் தீவிர ஆயுதக் குழுவாக மாற்ற நஸ்ரல்லா முடிவு செய்தார்.
 
இந்த உத்தியை பின்பற்றி லெபனான் பாராளுமன்றத்தில் 8 இடங்களை ஹெஸ்புலா அமைப்பு கைப்பற்றியது.
 
லெபனான் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வந்த தைஃப் உடன்படிக்கையின் கீழ், ஹெஸ்பொலா தனது ஆயுதங்களை வைத்திருக்க அனுமதிக்கப்பட்டது. அந்த நேரத்தில் இஸ்ரேல் தெற்கு லெபனானை ஆக்கிரமித்திருந்தது என்பதுடன் ஹெஸ்பொலா ஒரு ஆயுத இயக்கத்தை நடத்தி வந்தது.
 
லெபனானின் ஹெஸ்புலா குழு இரானிடம் இருந்து நிதி உதவியைப் பெற்று வந்தது. இதனால் ஹசன் நஸ்ரல்லா நாடு முழுவதும் பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் நிவாரண மையங்களை உருவாக்கினார். இந்த பொதுநல அம்சம் லெபனானில் ஹெஸ்புலாவின் அரசியல் இயக்க அடையாளத்தின் முக்கிய நடவடிக்கையாக மாறியது.
 
 
2000 ஆம் ஆண்டில், இஸ்ரேல் லெபனானில் இருந்து முற்றிலும் வெளியேறுவதாகவும், அந்த நாட்டின் தெற்குப் பகுதியின் ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவருவதாகவும் அறிவித்தது. ஹெஸ்பொலா ஆயுதக் குழு இந்த நிகழ்வை மாபெரும் வெற்றியாகக் கொண்டாடியதுடன், இந்த வெற்றியை ஹசன் நஸ்ரல்லா பெற்றுக் கொண்டார்.
 
சமாதான உடன்படிக்கையின்றி இஸ்ரேல் ஒருதலைப்பட்சமாக ஒரு அரபு நாட்டின் பிரதேசத்தை விட்டு வெளியேறியது இதுவே முதல் முறையாகும். மேலும் இது அப்பகுதியில் பல அரபு குடிமக்களின் பார்வையில் குறிப்பிடத்தக்க வெற்றியாக அறிவிக்கப்பட்டது.
 
 
காஸாவில் போர் நிறுத்தம் அறிவிக்க இந்தியா உதவ வேண்டும் என இரான் அதிபர் கோரிக்கை வைத்தார்.
 
ஆனால் அப்போதிருந்து, லெபனானின் ஆயுதப் பிரச்சனை, லெபனானின் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பு உள்ளிட்டவை முக்கியமான கேள்வியாக மாறியுள்ளது. லெபனானில் இருந்து இஸ்ரேல் வெளியேறியதன் காரணமாக, ஹெஸ்புலா குழு ஆயுதம் ஏந்துவதற்கான சட்டப்பூர்வ திறனை இழந்தது. மேலும், வெளிநாட்டு சக்திகள் ஹெஸ்பொலாவை ஆயுதங்களை ஒப்படைக்குமாறு வலியுறுத்தின. ஆனால் ஹசன் நஸ்ரல்லா இதற்கு ஒருபோதும் உடன்படவில்லை.
 
2002 ஆம் ஆண்டில், ஹசன் நஸ்ரல்லா இஸ்ரேலுடன் கைதிகள் பரிமாற்றம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது 400-க்கும் மேற்பட்ட பாலத்தீன, லெபனான் கைதிகளும், பிற அரபு நாடுகளின் கைதிகளும் விடுவிக்கப்பட்டனர்.
 
அந்த நேரத்தில், நஸ்ரல்லா முன்னெப்போதையும் விட மிகவும் சக்திவாய்ந்தவராகவும் செல்வாக்கு மிக்கவராகவும் கருதப்பட்டார். மேலும் லெபனான் அரசியலில் அவரது போட்டியாளர்களுக்கு அவரை எதிர்கொள்வதும் அவரது ஆதிக்கத்தையும் அவரது சக்தியையும் குறைப்பதும் ஒரு பெரிய சவாலாக மாறியது.
 
 
1983 இல் அப்போதைய லெபனான் பிரதமர் ரபிக் ஹரிரி படுகொலை செய்யப்பட்ட பின்னர் நாடு முழுவதும் அரசியல் தொடர்பான பொதுவான கருத்து மாறியது. ரபீக் ஹரிரி, ஹெஸ்பொலாவைத் தடுக்க முயன்ற சௌதி அரேபியாவிற்கு நெருக்கமான தலைவர்களில் ஒருவராக எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டார்.
 
ஹரிரியின் படுகொலைக்குப் பிறகு, ஹெஸ்பொலா மற்றும் சிரியா மீது சாமானிய மக்களின் கோபம் வேகமாக அதிகரித்தது. ஹரிரி கொலையில் ஹெஸ்பொலாவுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. பெய்ரூட்டில் பெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடந்த பிறகு, சிரியாவும் லெபனானில் இருந்து தனது படைகளை திரும்பப் பெறுவதாக அறிவித்தது.
 
ஆனால் அதே வருடத்தில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்ற போது ஹெஸ்பொலாவின் வாக்குகள் அதிகரித்தது மட்டுமன்றி இரண்டு அமைச்சர் பதவிகளையும் அந்தக் குழு கைப்பற்றியது.
 
இங்கிருந்து ஹசன் நஸ்ரல்லா ஹெஸ்புலாவை லெபனான் தேசியவாதக் குழுவாக உருமாற்றினார். அது மற்ற சக்திகளுக்கு முன்னால் தலைவணங்குவதில்லை என்ற அளவுக்கு தனது நிலைப்பாட்டைக் கொண்டிருந்தது.
 
2005 கோடையில், ஹெஸ்புலா போராளிகள் இஸ்ரேலுக்குள் நுழைந்து ஒரு ராணுவ வீரரைக் கொன்றதுடன் மேலும் இருவரைப் பிடித்துக்கொண்டனர். பதிலுக்கு, இஸ்ரேல் மிகப்பெரிய தாக்குதலை நடத்தியது. அத்தாக்குதல் 33-34 நாட்கள் தொடர்ந்தது. இந்த காலகட்டத்தில் சுமார் 1200 லெபனான் நாட்டவர்கள் கொல்லப்பட்டனர்.
 
இந்தப் போருக்குப் பிறகு, அரபு நாடுகளில் இஸ்ரேலுக்கு எதிராகப் போராடிய கடைசி நபராகத் திகழ்ந்த ஹசன் நஸ்ரல்லாவின் புகழ் மேலும் அதிகரித்தது.
 
ஹெஸ்பொலாவின் அதிகாரம் அதிகரித்ததன் காரணமாக, போட்டிக் குழுக்கள், குறிப்பாக லெபனான் அரசியல்வாதிகள், ஹெஸ்புலாவுக்கு எதிரான முயற்சிகளை தீவிரப்படுத்தினர்.
 
2007 ஆம் ஆண்டில், பல மாத அரசியல் குழப்பங்களுக்குப் பிறகு, லெபனான் அரசு ஹெஸ்பொலாவின் கட்டுப்பாட்டில் இருந்த தொலைத்தொடர்பு அமைப்பை அகற்றவும், தொலைத்தொடர்புகளை அரசின் ஒரே கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரவும் முடிவு செய்தது. ஹசன் நஸ்ரல்லா இந்த முடிவை ஏற்கவில்லை என்பது மட்டுமல்லாமல், சிறிது காலத்திற்குள் அவரது ஆயுதக் குழு பெய்ரூட்டின் முழு கட்டுப்பாட்டையும் கைப்பற்றியது.
 
ஹசன் நஸ்ரல்லாவின் இந்த நடவடிக்கை மேற்கத்திய நாடுகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ஆனால் அரசியல் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு அவர் லெபனான் அமைச்சரவையில் தனது குழுவின் அதிகாரத்தை அதிகரிப்பதிலும், அமைச்சரவை முடிவுகளில் வீட்டோ உரிமையைப் பெறுவதிலும் வெற்றி பெற்றார்.
 
2008 இல், லெபனான் பாராளுமன்றத்தில் ஹெஸ்புலாவின் இருக்கைகளின் எண்ணிக்கை குறைந்த போதிலும், நஸ்ரல்லா வீட்டோ அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதில் வெற்றி பெற்றார்.
 
 
ஹமாஸிக்கு எதிரான போரில் அணு ஆயுதங்களை உபயோகிக்கலாம்- இஸ்ரேல் அமைச்சரின் கருத்தால் சர்ச்சை
 
அதே ஆண்டு, லெபனான் அமைச்சரவை தனது ஆயுதங்களை வைத்திருக்க ஹெஸ்பொலாவுக்கு அனுமதி வழங்கியது.
 
இந்த இடத்திலிருந்து தான் ஹசன் நஸ்ரல்லா ஒரு ஆளுமையாக உருவெடுத்தார். லெபனானின் அரசியல் உயரடுக்கினரிடையே கிட்டத்தட்ட எவரும் அவரது அதிகாரத்தைக் குறைப்பதில் வெற்றிபெறவில்லை.
 
அவரை எதிர்த்த பிரதமர்களின் ராஜிநாமாவோ அல்லது சௌதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் தலையீடுகளோ அவரைப் பின்னுக்குத் தள்ள முடியவில்லை. மாறாக, அந்த ஆண்டுகளில், இரானின் ஆதரவுடன், சிரிய உள்நாட்டுப் போர் மற்றும் லெபனானின் பொருளாதார நெருக்கடி போன்ற வரலாற்று நெருக்கடிகளைக் கட்டுப்படுத்துவதில் ஹசன் நஸ்ரல்லா வெற்றிகரமாக இருந்தார்.
 
63 வயதில், அவர் லெபனானில் ஒரு அரசியல் மற்றும் ராணுவத் தலைவராகக் கருதப்படுவதோடு மட்டுமல்லாமல், தனது அடிப்படை நோக்கங்களுக்காகவும் அவர் பல தசாப்தங்களாக கடுமையாகப் போராடி வருகிறார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இஸ்ரேல் தாக்குதலில் 10,569 பாலஸ்தீனியர்கள் பலி