Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கூகுள் நிறுவனத்தின் நவீன இன்டர்நெட் சோதனை வெற்றி - வயர்லெஸ் ஆப்டிகல் கம்யூனிகேஷன்

Advertiesment
கூகுள் நிறுவனத்தின் நவீன இன்டர்நெட் சோதனை வெற்றி - வயர்லெஸ் ஆப்டிகல் கம்யூனிகேஷன்
, செவ்வாய், 21 செப்டம்பர் 2021 (12:12 IST)
அதிவேக இணையத்தை ஒளிக்கதிர்கள் வழியாக காற்றில் அனுப்பிய சோதனை வெற்றி பெற்றிருக்கிறது. இந்தத் தொழில்நுட்பத்தில் காங்கோ நதிக்கு குறுக்காக இணைய சேவை நிறுவப்பட்டுள்ளது.

அதாவது ப்ரசாவில்லே மற்றும் கின்ஷாசா ஆகிய இரு ஆப்பிரிக்க பெருநகரங்களுக்கு அதிவேக மற்றும் விலை மலிவான அகன்ற அலைவரிசை கிடைக்கும்.

ஆல்ஃபபெட் எக்ஸின் (முன்பு கூகுள் எக்ஸ் என்று அழைக்கப்பட்டது) திட்டங்களில் ஒன்று தான் தாரா.

முன்பு ப்ராஜெக்ட் லூன் என்கிற பெயரில், பூமியின் வளிமண்டலத்தில் இருக்கும் ஸ்ட்ராடோஸ்ஃபியர் அடுக்கில் பலூன்களை நிலைநிறுத்தி அகன்ற அலைவரிசை இணைய சேவையை வழங்க திட்டமிடப்பட்டது. ஆனால் அது நாளடைவில் நிறுத்தப்பட்டது. அத்திட்டத்திலிருந்து தான் ஒளிக் கதிர்கள் வழி இணைய சேவை வழங்கும் திட்டம் உருவானது.

இந்த புதிய சோதனை முயற்சியின் காரணமாக காங்கோ குடியரசு நாட்டின் ப்ரசாவில்லே நகரத்துக்கும், காங்கோ ஜனநாயக குடியரசு நாட்டைச் சேர்ந்த கின்ஷாசா நகரத்துக்கும் இடையில் ஏற்பட்டு வந்த இணைய சேவைப் பிரச்சனை தீர்க்கப்பட்டிருப்பதாக, அவ்வணியினர் தங்கள் வலைப்பக்கத்தில் கூறியுள்ளனர்.

இரு நகரங்களுக்கும் இடையில் மூன்று கிலோமீட்டர் தொலைவு மட்டுமே இருக்கிறது. ஆனால் அந்த இருநகரங்களை இணைய வழியாக இணைப்பதில் சிக்கல் இருந்தது. கேபிள் வழியாக இரு நகரங்களை இணைக்க வேண்டுமானால் நதியைச் சுற்றித் தான் கேபிள்களை பதிக்க வேண்டி இருக்கும். இதனால் அகன்ற அலைவரிசையின் விலை ஐந்து மடங்கு அதிகமாகிவிடும்.

வயர்லெஸ் ஆப்டிகல் கம்யூனிகேஷன் (WOC) என்றழைக்கப்படும் அமைப்பு கடந்த 20 நாட்களில் 700 டெராபைட் தரவுகளை 99.9% வழங்கியுள்ளது என ஆல்ஃபபெட் எக்ஸ் அணியினர் கூறியுள்ளனர்.

"எல்லா காலநிலைகள் மற்றும் எதிர்கால சூழல்களிலும் கண கச்சிதமாக செயல்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஆனால் தாராவின் இணைப்பு சிறப்பாக செயல்படும், அதிவேகம் மற்றும் மலிவு விலை இணையத்தை இரு நகரங்களில் வாழும் 17 மில்லியன் (1.7 கோடி) பேருக்கு வழங்க உதவும்" என ஆல்ஃபபெட் எக்ஸ் தரப்பினர் அவ்வலைப்பதிவில் கூறியுள்ளனர்.

இது தாரா திட்டத்தின் புதிய பதிப்பு. இது கடந்த மூன்று ஆண்டுகளாக மேம்பாட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆப்பிரிக்க நாடுகளுக்கு அதிவேக இணைய சேவையைக் கொண்டு வர எக்ஸ் நிறுவனம் எகோனெட் குழுமம் மற்றும் லிக்விட் டெலிகாம் ஆகிய நிறுவனங்களோடு இணைந்து வேலை செய்து வருகிறது. கென்யாவில் வணிக ரீதியிலான சேவைகளும் தொடங்கப்பட்டுள்ளன.

அதிவேக இணைய சேவையை வழங்க இவ்வமைப்பு, மிக குறுகிய கண்ணுக்குத் தெரியாத ஒளிக்கதிர்களைப் பயன்படுத்துகிறது. தரையில் இருக்கும் பழைய ஃபைபர் முறையில் தரவுகளைக் கடத்த ஒளியைப் பயன்படுத்தியது போலத் தான் இதிலும் தரவுகள் கடத்தப்படுகின்றன. ஆனால் இந்த முறையில் கேபிள்கள் இல்லை.

இந்த தொழில்நுட்பத்தை ஃப்ரீ ஸ்பேஸ் ஆப்டிகல் கம்யூனிகேஷன்ஸ் என்றழைக்கிறார்கள். ப்ராஜெக்ட் லூனில் பலூன்களுக்கு மத்தியில் லேசர் ஒளிக்கதிர்களைப் பாய்ச்சிய சோதனை முயற்சிகளிலிருந்து இது மேம்பட்டு வந்தது. கடந்த பிப்ரவரி மாதம் ப்ராஜெக் லூன் வணிக ரீதியாக சாத்தியப்படாது என அத்திட்டத்தை கைவிட்டது ஆல்ஃபபெட்.

தாரா திட்டம் கச்சிதமாக செயல்படக் கூடியதல்ல என்பதை எக்ஸ் தரப்பினர் ஏற்றுக் கொள்கிறார்கள். பனிமூட்டம், புகை மூட்டம், பறவைகள் சிக்னலுக்கு குறுக்கே பறப்பது போன்ற சமயங்களில் இது கச்சிதமாக செயல்படாது என்கிறார்கள்.

ஆனால் கடத்தப்படும் லேசரின் சக்தியைக் கட்டுப்படுத்துவதன் மூலம் இந்த சிக்கல்களுக்கான தீர்வுகள் மேம்படுத்தப்பட்டிருக்கின்றன. இது ஒரு தொலைநோக்கியைப் (டெலெஸ்கோப்) போல கண்ணாடிகள், ஒளி, மென்பொருள், எங்கு ஒளிக்கதிர்களை செலுத்த வேண்டுமோ அங்கு செலுத்த உதவும். பறவைகள் சிக்னலுக்கு முன் பறக்கும் போது ஏற்படும் தடைகளைக் குறைக்கக் கூட எக்ஸ் தரப்பினர் சில வழிகளைக் கண்டுபிடித்துள்ளனர்.

"மூடுபனி நிறைந்த சான் பிரான்சிஸ்கோ போன்ற இடங்கள் வயர்லெஸ் ஆப்டிகல் கம்யூனிகேஷன் சேவையைப் பயன்படுத்த ஒரு சிறந்த இடமாக இருக்காது என்றாலும், தாரா திட்டத்துக்கு உகந்த வானிலை கொண்ட பல இடங்கள் உலகெங்கிலும் உள்ளன" என்று அவ்வலைப்பதிவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த தொழில்நுட்பம் கென்யா, இந்தியா, அமெரிக்கா மற்றும் மெக்சிகோவிலும் சோதனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தடுப்பூசி போட்டிருந்தாலும் செல்லாது..! – பிரிட்டன் அறிவிப்பால் இந்திய மக்கள் அதிர்ச்சி!