கடலூர் மாவட்டத்தில் என்கவுண்டரில் கொல்லப்பட்ட ரவுடி ஒருவரின் மனைவி வெட்டிக்கொல்லப்பட்டது தொடர்பாக மூன்று சிறார்கள் உள்பட நால்வரைக் கைது செய்துள்ளது காவல்துறை. என்ன நடந்தது?
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் காவல்நிலைய எல்லைக்கு உள்பட்ட குப்பன்குளத்தை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் மனைவி காந்திமதி. இவருக்கு வயது 29.
காந்திமதியின் கணவர் கடந்த பிப்ரவரி மாதம் 16-ஆம் தேதி அன்று கூட்டாளிகள் ஒன்பது பேருடன் சேர்ந்து, திருப்பாதிரிப்புலியூர் சுப்புராயலுநகர் பூந்தோட்ட சாலையை சேர்ந்த பிரபல ரவுடியான வீரா என்கிற வீரங்கன் தலையை துண்டித்து கொலை செய்துவிட்டு தப்பி சென்றுவிட்டார். இதையறிந்த காவல் துறையினர், கிருஷ்ணன் உள்ளிட்ட ஐந்து பேரை தேடி பிடித்தனர்.
பின்னர் அவர்களை திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்து விட்டு, கிருஷ்ணனை மட்டும் மற்ற கொலையாளிகள் இருக்கும் இடத்தை அடையாளம் காட்டுவதற்காக அழைத்து சென்றனர். அப்போது கிருஷ்ணன், உதவி ஆய்வாளரை தாக்க முயன்ற போது, என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார் என்கிறது தமிழ்நாடு காவல்துறை.
இந்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை அடுத்து கிருஷ்ணனின் கூட்டாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த வழக்கு சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் என்கவுண்டர் செய்யப்பட்ட கிருஷ்ணனின் மனைவி காந்திமதி கடந்த இரு தினங்களுக்கு முன்பு இரவு அவர் வீட்டுக்கு அருகேயுள்ள பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அடையாளம் அறியப்படாத நான்கு பேர், காந்திமதியை வழிமறித்து அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் கழுத்து, கை, கால் உள்ளிட்ட இடங்களை வெட்டிவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.
இதில் படுகாயமடைந்த காந்திமதி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
காந்திமதி கொலை செய்யப்பட்டத்தை அடுத்து, கடலூர் கோட்டம் காவல் துணை கண்காணிப்பாளர் அசோகன் இந்த வழக்கை விசாரணை செய்தார். இதையடுத்து இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலைய ஆய்வாளர் கவிதா தலைமையில் ஐந்து பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில், கொலை செய்யப்பட்ட காந்திமதி என்பவருக்கும் சுப்புராயலு நகர் பகுதியைச் சேர்ந்த அரவிந்தன் என்பவருக்கும் திருமண பந்தத்துக்கு வெளியே உறவு இருந்தது தெரியவந்தது. மேலும் அரவிந்தன் மற்றும் காந்திமதிக்கு இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்துள்ளது என்கின்றனர் பிபிசி தமிழிடம் பேசிய காவல்துறையினர்.
இதனால் அரவிந்தன் என்பவரால் தனக்கு தொல்லை இருப்பதாக காந்திமதி அவருடைய உயிரிழந்த கணவரின் நண்பர்கள் சிலரிடம் கூறியதாக தெரிகிறது. இதனையறிந்த அரவிந்தன், காந்திமதி வசிக்கும் சுப்புராயலு நகர் பகுதியை சேர்ந்த மூன்று சிறார்கள் உதவியுடன் காந்திமதியை திட்டமிட்டு கொலை செய்தது விசாரணையில் தெரிந்தது என்று காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
பின்னர், "இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளி அரவிந்தன், மற்றும் மூன்று சிறார்களை காவல் துறையினர் கைது செய்தனர். என்கவுண்டர் செய்யப்பட்ட கிருஷ்ணனின் மனைவி காந்திமதி முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றிருந்த நிலையில், முறையற்ற உறவு காரணமாக அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்," என காவல் துறை தரப்பில் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து இந்த வழக்கை விசாரணை செய்த திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலைய ஆய்வாளர் கவிதா கூறுகையில், "இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான அரவிந்தன் தவிர்த்து மற்ற மூவருமே 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள். குறிப்பாக கொலை மற்றும் வழிப்பறி சம்பவங்களில் சிறார்களை திட்டமிட்டே பயன்படுத்துகின்றனர். இந்த கொரோனா காலகட்டத்தில் பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த காரணத்தால், அப்பகுதியில் உள்ள ரவுடிகளுடன் தொடர்பு வைத்துக் கொண்டு அவர்கள் சொல்லும் வேலைகளை செய்ய மதுபானங்கள் மற்றும் போதை பொருள்களுக்கு அடிமையாகிவிடுகின்றனர். குறிப்பாக படிப்பு மற்றும் வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கும் சிறார்கள் அப்பகுதியில் உள்ள ரவுடிகளுடன் தொடர்பு வைக்கின்றனர். இதனை ரவுடிகள் அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு சிறார்களை குற்ற வழக்குகளில் தொடர்புபடுத்தினால் சிறைத் தண்டனை கிடையாது, மற்ற தண்டனைகளை காட்டிலும் சிறார்களுக்கு குறைவான தண்டனை என்பதால் உள்நோக்கத்துடன் சிறார்களை குற்ற வழக்குகளில் ரவுடிகள் ஈடுபடுத்துகின்றனர்," என்று தெரிவித்தார்.
இதுபோன்று பல குற்றச் சம்பவங்களில் சிறார்களை திட்டமிட்டு பயன்படுத்துவதால், இளம் சிறார்கள் இதனால் எதிர்காலத்தை இழந்து சீரழிந்து வருகின்றனர். ஆகவே இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் சிறார்களை மீட்க பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை காவல் துறை தரப்பில் மேற்கொண்டு வருகிறோம்," என்று ஆய்வாளர் கவிதா தெரிவித்துள்ளார்.