Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெகாசஸ்: 'விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய விரும்பவில்லை' - மத்திய அரசு

பெகாசஸ்: 'விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய விரும்பவில்லை' - மத்திய அரசு
, செவ்வாய், 14 செப்டம்பர் 2021 (13:35 IST)
(இன்று 14.09.2021 செவ்வாய்கிழமை இந்திய நாளிதழ்களில் வெளியான சில செய்திகளை தொகுத்தளிக்கிறோம்)

பெகாசஸ் உளவுக் குற்றச்சாட்டு விவகாரத்தில் விரிவான பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்ய விரும்பவில்லை என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளதாக தினமணியில் செய்தி வெளியாகியுள்ளது.

இந்த விவகாரம் தொடா்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீது விரைவில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படுமென உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலைச் சோ்ந்த என்.எஸ்.ஓ நிறுவனம் உருவாக்கிய பெகாசஸ் உளவு மென்பொருளைப் பயன்படுத்தி இந்தியாவில் எதிா்க்கட்சியினா், சமூக ஆா்வலா்கள், பத்திரிகையாளா்கள் உள்ளிட்ட சுமாா் 300 பேரின் தொலைபேசிகள் உளவு பாா்க்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த விவகாரம் தொடா்பாக சுதந்திரமான விசாரணை நடத்துவதற்கு தனிக் குழுவை நியமிக்கக் கோரி மூத்த பத்திரிகையாளா் என்.ராம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் உள்ளிட்டோா் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த விவகாரம் தொடா்பான பிரமாணப் பத்திரத்தை மத்திய அரசு தாக்கல் செய்திருந்தது. 2-ஆவது பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்வது தொடா்பாக முடிவெடுக்க மத்திய அரசு கால அவகாசம் கோரியிருந்தது. அதற்கு உச்சநீதிமன்றம் கடந்த வாரம் அனுமதி அளித்திருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சூா்யகாந்த், ஹிமா கோலி ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் திங்கட்கிழமை நடைபெற்றது.

மத்திய அரசு சாா்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா வாதிடுகையில், ''பெகாசஸ் மென்பொருளானது அரசால் பயன்படுத்தப்பட்டதா என்பது பொதுவில் விவாதிக்கப்பட வேண்டிய விவகாரம் அல்ல. இந்த விவகாரத்தை பிரமாணப் பத்திரத்தில் தெரிவிப்பது தேசத்தின் நலனுக்கு உகந்ததாக இருக்காது.

பெகாசஸ் மென்பொருளைப் பயன்படுத்தவில்லை என மத்திய அரசு கூறினால், அதை சாதகமாக எடுத்துக் கொண்டு பயங்கரவாத அமைப்புகள் உள்ளிட்டவை தீவிரமாக செயல்படத் தொடங்கும். அந்த மென்பொருள் பயன்படுத்தப்பட்டதாகக் கூறினால், வேறு மாதிரியான பின்விளைவுகளை ஏற்படுத்தும்.

மனுதாரா்கள் கோரும் அனைத்து விவகாரங்களையும் பிரமாணப் பத்திரமாகத் தாக்கல் செய்ய முடியாது. எனவே, இந்த விவகாரத்தில் விரிவான பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்ய விரும்பவில்லை.

பெகாசஸ் விவகாரத்தில் மறைப்பதற்கு மத்திய அரசிடம் எதுவுமில்லை. அதனால்தான் இதை விசாரிக்க துறைசாா் நிபுணா்களைக் கொண்ட குழு அமைக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அக்குழு அளிக்கும் அறிக்கை உச்சநீதிமன்றத்திலும் சமா்ப்பிக்கப்படும்'' என வாதிட்டார்.

அதையடுத்து நீதிபதிகள் கூறுகையில், ''பாதுகாப்பு சாா்ந்த விவகாரங்கள் எதையும் நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டியதில்லை. இந்த விவகாரம் தொடா்பாக 2 முதல் 3 நாட்களுக்குள் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும். ஒருவேளை அதற்கிடையில் மத்திய அரசு பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்ய விரும்பினால் அது தொடா்பாக நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கலாம்'' என கூறியதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

நீட் தேர்வுக்கு பயந்து மாணவர் தற்கொலை செய்ததற்கு தி.மு.க.வே காரணம்: ஹெச்.ராஜா குற்றச்சாட்டு

மாணவர் தனுஷ் தற்கொலை செய்து கொண்டதற்கு திமுகவே காரணம் என ஹெச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளதாக தினத்தந்தியில் செய்தி வெளியாகியுள்ளது.
webdunia

கடலூர் அருகே ராமாபுரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது "நீட் தேர்வு தொடர்பாக இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்ப்பது, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களை எதிர்ப்பது போன்ற தீய செயல்களில் தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது.

இதன் விளைவாகவே சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் தனுஷ் தற்கொலை செய்து இருக்கிறார். மாணவர் தற்கொலைக்கு முழுக்க, முழுக்க காரணம் முதலமைச்சர் ஸ்டாலின், தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தான்.

உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் காரணமாக நீட் தேர்வு நடைபெற்று வருகிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு மத்திய அரசு நினைத்தாலும் கூட நீட் தேர்வை மாற்ற முடியாது.

அப்படி இருக்கும் போது, தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் மத்தியில் நீட் தேர்வு நடக்குமா? நடக்காதா? என்ற சந்தேகத்தை உருவாக்குகிறார்கள். அனைத்து மாநிலங்களிலும் நீட் தேர்வு நடக்கிறது. யாரும் எதிர்க்கவில்லை. ஆனால் தமிழக சட்டசபையில் தற்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானம், முதலமைச்சரின் பொறுப்பற்ற தன்மையை காட்டுகிறது" என கூறியுள்ளதாக அச்செய்தியில் உள்ளது.

பெண் குழந்தை பிறந்ததை கொண்டாடும் வகையில் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பானிபூரியை இலவசமாக வழங்கிய வியாபாரி

போபால் நகரத்தைச் சேர்ந்த வியாபாரி ஒருவர், தனக்கு பெண் குழந்தை பிறந்ததால் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பானி பூரியை பொதுமக்களுக்கு இலவசமாக கொடுத்து கொண்டாடியுள்ளதாக இந்து தமிழ் திசையில் செய்தி வெளியாகியுள்ளது.

மத்தியபிரதேச மாநிலம் போபால் நகரைச் சேர்ந்தவர் அஞ்சல் குப்தா. தள்ளுவண்டியில் பானி பூரி வியாபாரம் செய்து வருகிறார். 28 வயதாகும் இவருக்கு கடந்த மாதம் பெண் குழந்தை பிறந்துள்ளது.

இதையடுத்து பெண் குழந்தை பிறந்ததைக் கொண்டாடும் விதமாக தனது பகுதியிலுள்ள பொதுமக்களுக்கு இலவசமாக பானி பூரி விநியோகம் செய்துள்ளார் குப்தா. ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பானி பூரியை இவர் இலவசமாகவே கொடுத்து கொண்டாடியுள்ளார்.

இதுகுறித்து அஞ்சல் குப்தா கூறும்போது, "பிறப்பில் ஆண், பெண் பேதம் பார்க்கக்கூடாது. இதை அனைத்து மக்களும் கடை பிடிக்கவேண்டும். அதற்காகத்தான் நான் இலவசமாக பானி பூரியை பொதுமக்களுக்கு கொடுத்தேன்.

என் மனைவிக்கு பெண் குழந்தை பிறந்ததைக் கேள்விப்பட்ட சில உறவினர்கள், உனக்கு பொருளாதார சுமை ஏற்படும், கஷ்டம் வந்து சேரும் என்று எச்சரிக்கை செய்தனர். ஆனால் அதைப் பற்றியெல்லாம் நான் கவலைப்படவில்லை.

பெண் குழந்தை பிறந்ததால் நான் பெருமை அடைகிறேன். நான்சிறு வியாபாரிதான். எனக்கு லாபம்குறைவாகத் தான் கிடைக்கிறது. இருந்தாலும் எனக்கு அது போதும். குழந்தை பிறப்பில் ஏன் பேதம்பார்க்க வேண்டும். பெண் குழந்தைகளைப் பெற்ற அனைத்து பெற்றோருமே அதிர்ஷ்டசாலிகள்தான். இதை உலகுக்கு உணர்த்துவதற்காகவே பானி பூரியை கடந்த ஞாயிற்றுக்கிழமை இலவசமாக விநியோகம் செய்தேன்.

போபாலின் கோலார் பகுதியிலுள்ள பீமா கஞ்ச் சாலை முழுவதும் உள்ள மக்களுக்கு பகல் 1 மணி முதல் மாலை 6 மணி வரை இலவசமாகக் கொடுத்தேன். கொரோனா விதிகளை கடைபிடித்து நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் வாங்கிச்சென்றனர். சிலர் வரிசையை கடைப்பிடிக்காமல் முண்டியடித்தனர்" என அஞ்சல் குப்தா கூறியதாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாநிலங்களவை தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு! – போட்டியின்றி தேர்வா?