ஆண்ட்ராய்ட் ஆப்ரேடிங் சிஸ்டத்தில் உள்ள சில மேம்படுதல்களை ஹுவாய் அலைப்பேசி நிறுவனம் பெறமுடியாதபடி கூகுள் அதனை நிறுத்தியுள்ளது.
இது சீன அலைப்பேசி தயாரிப்பு நிறுவனமான ஹூவாய்க்கு ஒரு பலத்த அடியாக இருக்கும். ஹுவாய் புதிய ஸ்மார்ட்ஃபோன்களில் கூகுள் மேப்ஸுக்கான அனுமதியும் மறுக்கப்பட்டுள்ளது.
அனுமதி இல்லாமல் அமெரிக்க நிறுவனங்களுடன் வர்த்தகம் செய்ய முடியாத நிறுவனத்தின் பட்டியலில் ஹுவாய் பெயரை அமெரிக்கா அறிவித்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கூகுள் வெளியிட்ட அறிக்கையில், ஆணையுடன் இணைந்து செயல்படுவதாகவும், விளைவுகள் குறித்து மறு ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஹுவாய் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
மேலும், 5ஜி மொபைல் நெட்வொர்க்குகளில் ஹுவாய்யின் உபகரணங்களை பயன்படுத்த வேண்டாம் என பல நாடுகளில் உள்ள தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு கூறப்பட்டுள்ளது.