கிளாஸ்கோவில் நடைபெற உள்ள COP26 பருவநிலை மாற்ற உச்சிமாநாடு தான் "உலகம் ஒன்றாகச் செயல்படுவதற்கான கடைசி நம்பிக்கை" என அமெரிக்காவின் பருவநிலை மாற்றத்துக்கான சிறப்பு தூதர் ஜான் கெர்ரி கூறியுள்ளார்.
அடுத்த ஒன்பது ஆண்டுகளில் பசுமை இல்ல வாயு உமிழ்வு போதுமான அளவுக்கு குறைக்கவில்லை எனில், நீண்ட கால இலக்குகளை அடைய வாய்ப்பில்லை என்றும் அவர் கூறினார்.
பூமியின் வெப்பநிலை உயர்வை 1.5 டிகிரி செல்சியஸ் அளவுக்குள் வைத்திருப்பதே இதன் நோக்கம்.
அந்த இலக்கை அடைய, இந்த தசாப்த காலத்தின் இறுதிக்குள் 2010ஆம் ஆண்டின் உலக அளவிலான கார்பன் உமிழ்விலிருந்து 45 சதவீதமாக குறைக்க வேண்டும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
ஆனால் கொரோனா ஊரடங்கின் ஒரு குறுகிய காலத்துக்குப் பிறகு, கார்பன் உமிழ்வு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அக்டோபர் 31 முதல் நவம்பர் 12 வரை கிளாஸ்கோ நகரத்தில் நடைபெற உள்ள பருவநிலை மாநாட்டில் வலுவான முடிவுகள் எடுக்கப்பட, உலகின் மிகப்பெரிய கார்பன் உமிழும் நாடான சீனா முக்கிய பங்கு வகிக்கும்.
அமெரிக்காவின் பருவநிலை மாற்றத் தூதர் ஜான் கெர்ரி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொடங்கி உலகெங்கிலும் உள்ள பல தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் இந்த உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர்.
உலகளாவிய குடியுரிமைக்கான சோதனை
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆட்சிக் காலத்தின் கீழ் நான்கு ஆண்டு கால "பொறுப்பற்ற நடத்தை" க்குப் பின் அமெரிக்கா விரைவான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கும் என கெர்ரி முன்பு கூறினார்.
உலகளாவிய பேச்சுவார்த்தைகளில் அமெரிக்கா பணிவோடும், லட்சியத்துடனும் முன்னேறும் என அவர் கூறினார்.
முன்னாள் அதிபர் வேட்பாளரான ஜான் கெர்ரி பருவநிலை சார்ந்த அரசியலில் நீண்ட காலமாக ஒரு சக்திவாய்ந்த குரலாக இருந்து வருகிறார். அதிபர் ஒபாமாவின் வெளியுறவுச் செயலராக இருந்த போது, அவர் 2015 ஆம் ஆண்டில் உலக பருவநிலை மாற்றத்தில் சர்வ தேச அளவில் முக்கிய மைல்கல்லாகக் கருதப்படும் பாரிஸ் ஒப்பந்தத்தை நிறைவேற்றியதில் முக்கிய பங்கு வகித்தார்.
பிபிசி ரேடியோ 4 ஆவணப்படமான 'கிளாஸ்கோ: அவர் லாஸ்ட் பெஸ்ட் ஹோப்?'-ல் பல பெரிய வாக்குறுதிகள் தொடர்பாக போதுமான நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தன, என்று பருவநிலை மாற்றம் குறித்த அமெரிக்காவின் சிறப்புத் தூதர் ஜான் கெர்ரி கூறினார்.
"உண்மை என்னவெனில், உலகம் முழுக்க உமிழ்வு அதிகரித்து வருகிறது, போதுமான நாடுகளில் உமிழ்வு குறையவில்லை, பல முக்கிய நாடுகள் அனைவருக்கும் ஆபத்தை விளைவிக்கும் கொள்கைகளை பின்பற்றுகின்றன."
கார்பனை குறைப்பதற்கான முயற்சிகளின் வேகத்தையும் ஆழத்தையும் அதிகரிக்குமாறு, கெர்ரி சீனாவுக்கு முன்பு அழைப்பு விடுத்தார்.
2030ஆம் ஆண்டுக்குள் சீனா தன் உமிழ்வின் உச்சத்தை அடையும் என சீனா உறுதியளித்தது, ஆனால் அது போதுமானதல்ல என அவர் கூறினார்.
"2020 மற்றும் 2030ஆம் ஆண்டுகளுக்கு இடையில் நாம் போதுமான கார்பன் உமிழ்வைக் குறைக்கவில்லை என்றால், நாம் அடைய வேண்டிய இலக்கை அடைய முடியாது என விஞ்ஞானிகள் எங்களிடம் கூறுகின்றனர். நம்மால் புவியின் வெப்ப நிலை அதிகரிப்பை 1.5 டிகிரி செல்சியஸுக்குள் வைக்கவோ, 2050ஆம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜிய உமிழ்வு இலக்கையோ அடைய முடியாது"
கிளாஸ்கோ பருவநிலை மாநாட்டில் உலகின் 20 முக்கிய பொருளாதாரங்கள், தங்கள் கார்பன் உமிழ்வு லட்சியத்தை உயர்த்த வேண்டும் என விரும்புவதாக கெர்ரி கூறினார்.
நிகர பூஜ்ஜிய இலக்கை அடைவதற்கான உறுதியான திட்டங்களையும், குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகள் பொருளாதார பிரச்சனைகளை எதிர்கொள்ளாமல் தங்கள் பருவநிலை இலக்குகளை அடைய உதவும் பண உதவிகளையும் எதிர்பார்ப்பதாக கூறினார். இது உலகளாவிய குடியுரிமை தொடர்பான சோதனை என்கிறார் கெர்ரி.
"விஞ்ஞானிகள் எங்களிடம் மிக முக்கியமான முடிவுகளை எடுக்க இன்னும் ஒன்பது ஆண்டுகள் எஞ்சியுள்ளன என்று கூறும் கட்டத்தில் கிளாஸ்கோ உச்சி மாநாடு வருகிறது. உண்மையிலேயே தீர்மானங்கள் தீவிரமாகவும், கிளாஸ்கோவில் குறிப்பிடத்தக்க அளவிலும் தொடங்கப்பட வேண்டும்."
"நாம் கடந்த 30 ஆண்டுகளாக இதைப் பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். இப்போதை அதை செயல்படுத்த வேண்டும்" என கூறினார் ஜான் கெர்ரி.