Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மகேந்திர சிங் தோனி அடுத்த ஐபிஎல் சீசனில் ஆடுவாரா? சிஎஸ்கே நிர்வாகம் கூறியது என்ன?

மகேந்திர சிங் தோனி அடுத்த ஐபிஎல் சீசனில் ஆடுவாரா? சிஎஸ்கே நிர்வாகம் கூறியது என்ன?
, ஞாயிறு, 17 அக்டோபர் 2021 (13:12 IST)
மகேந்திரசிங் தோனி. இந்த ஒற்றை சொல் கடந்த பல ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட்டை வசீகரித்துக் கொண்டிருக்கிறது.

மிக சாதாரண பின்புலத்திலிருந்து வந்த தோனி, 2007 டி20 உலகக் கோப்பையை வென்றதிலிருந்து, இப்போது வரை ஒவ்வொரு போட்டியிலும் ரசிகர்களை தன் அதிரடி விக்கெட் கீப்பிங்கினாலும், ஹெலிகாப்டர் ஷாட் சிக்சர்களாலும், அட்டகாசமான கேப்டன்சியாலும் ஈர்த்துக் கொண்டிருக்கிறார்.

என்ன தான் புகழ் வெளிச்சத்தின் உச்சத்தில் இருந்தாலும், ஐசிசி கோப்பைகள், ஐபிஎல் கோப்பைகள் என வரிசை கட்டி வென்றிருந்தாலும், ஓய்வு பெறுவது குறித்த சர்ச்சைகள் அவரை சூழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன.

கடந்த 2014 டிசம்பரில் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். 2020 ஆகஸ்ட் மாதம் திடீரென சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெற்று ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் ஸ்தம்பிக்க வைத்தார்.

மகேந்திர சிங் தோனியை இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகள் வழியாகத் தான் களத்தில் பார்க்க முடிகிறது. ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் தொடங்கியதில் இருந்தே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தோனிதான் தலைவராக பல வெற்றிகளை குவித்து வருகிறார்.

ஐபிஎல் போட்டிகளில் இதுவரை 11 முறை பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்று ஒன்பது முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது சென்னை அணி.

கடந்த ஐபிஎல் 2020 சீசனில், சென்னை அணி முதல் முறையாக பிளே ஆஃப் சுற்றுக்குக் கூட தகுதி பெறாமல் வெளியேறியது. அப்போது "நாங்கள் மீண்டும் வலுவாக திரும்பி வருவோம். அதற்குத்தான் நாங்கள் அறியப்பட்டிருக்கிறோம்'' என்று கூறினார் தோனி.

அவர் சொன்னது போலவே, இந்த ஐபிஎல் 2021 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றது. அதே போல இறுதிப் போட்டிக்கும் முதல் அணியாக தகுதி பெற்றது.

எல்லாவற்றையும் தாண்டி, வலுவான கொல்கத்தா நைட் ரைடர் அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, நான்காவது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது. அத்தனைக்கும் மூல முக்கிய காரணம், தோனியும் அவரது தலைமைப் பண்பும்தான்.

அதிவேக அதிரடி ஆட்டம், இளைஞர்களின் ஆட்டம் என்று அறியப்படும் டி20 வடிவத்தில் தன் 40ஆவது வயதில், சென்னைக்கு கோப்பையை வாங்கிக் கொடுத்துள்ளார் தோனி.

2007ஆம் ஆண்டில் தோனியின் மடியில் தவழத் தொடங்கிய கோப்பைகள், 2021ஆம் ஆண்டு வரை கடந்த 14 ஆண்டுகளாக தொடர்ந்து தவழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
சமீபத்திய ஐபிஎல் வெற்றிக்குப் பிறகும் கூட, தோனியின் ஓய்வு குறித்தும், அவர் சென்னை அணியில் தொடர்வது குறித்தும் சர்ச்சைகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.

அதற்கு எல்லாம் முற்றுப் புள்ளி வைக்கும் விதத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தரப்பில் சில விளக்கங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

"அணியில் சிலரை தக்க வைத்துக் கொள்வோம் என்பது உண்மைதான். ஆனால் எத்தனை பேரை தக்க வைத்துக் கொள்ளப் போகிறோம் என்பது குறித்து இன்னும் தெரியவில்லை. ஆனால், ஒரு வீரரை தக்கவைத்துக்கொள்வதற்கான முதல் வாய்ப்பையே தோனிக்குத்தான் பயன்படுத்துவோம்.

சென்னை சூப்பர் கிங்ஸ் எனும் கப்பலுக்கு தலைவன் தேவை. அவர் மீண்டும் அடுத்த ஆண்டு விளையாடுவார்" என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் ஏ.என்.ஐ முகமையிடம் கூறியுள்ளார்.

ஆக கேப்டன் கூல் தோனியை அடுத்த ஆண்டும் ஐபிஎல் களத்தில் காணலாம்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாம் அனைவரும் ஒன்றாக இருந்தால் கழகமும் நன்றாக இருக்கும்: சசிகலா