Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வீழும் அதானி குழும பங்கில் மேலும் முதலீடு: எல்.ஐ.சி, எஸ்.பி.ஐ.யில் உள்ள மக்கள் பணத்துக்கு ஆபத்தா?

Advertiesment
வீழும் அதானி குழும பங்கில் மேலும் முதலீடு: எல்.ஐ.சி, எஸ்.பி.ஐ.யில் உள்ள மக்கள் பணத்துக்கு ஆபத்தா?
, சனி, 28 ஜனவரி 2023 (23:46 IST)
ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை எதிரொலியாக பங்குச்சந்தைகளில் பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ள அதானி குழும பங்குகளில், எல்.ஐ.சி., எஸ்.பி.ஐ. ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள் மேலும் முதலீடு செய்துள்ளன. இதனால், அந்நிறுவனங்களில் உள்ள கோடிக்கணக்கான மக்களின் வாழ்நாள் சேமிப்புக்கு ஆபத்து எழுந்திருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
 
உலக பணக்காரர்கள் வரிசையில் சமீபத்திய ஆண்டுகளில் சரசரவென மேலேறி, ஃபோர்ப்ஸ் பட்டியலில் இரண்டாவது இடத்தை எட்டிப் பிடித்த இந்திய கோடீஸ்வரர் கௌதம் அதானிக்கு இது சிக்கலான நேரம். அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் கடந்த புதன்கிழமையன்று வெளியிட்ட ஆய்வறிக்கை, அதானி குழுமத்தையே அசைத்துப் பார்த்துள்ளது.
 
அதானி குழுமம் பங்குச்சந்தையில் திருகு வேலை செய்ததாகவும், கணக்கு மோசடியில் ஈடுபட்டதாகவும் ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை குற்றம்சாட்டுகிறது.
 
ஹிண்டன்பர்க் அறிக்கை தீங்கிழைக்கும் நோக்கம் கொண்டது என்று கூறும் அதானி குழுமம், சட்ட நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்துள்ளது.
 
ஆனால், ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனமோ, "ஆய்வறிக்கையில் நாங்கள் முனவைத்த எந்தவொரு குற்றச்சாட்டிற்கும் அதானி குழுமம் பதிலளிக்கவில்லை. நாங்கள் முன்வைத்த ஒவ்வொரு குற்றச்சாட்டையும் நிரூபிக்கத் தேவையான ஆவணங்களை கைவசம் வைத்துள்ளோம். அதானி குழுமம் விரும்பினால், அமெரிக்க நீதிமன்றங்களில் கூட வழக்கு தொடுக்கலாம். அதனை எதிர்கொள்ள நாங்கள் தயார்," என்று சவால் விடும் ரீதியில் பதில் கொடுத்துள்ளது.
 
பங்குச்சந்தையில் அதானி பங்குகள் வீழ்ச்சி
ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை வெளியான பிறகு, புதன் மற்றும் வெள்ளி ஆகிய இரண்டே நாட்களில் பங்குச்சந்தையில் அதானி குழுமத்தின் பங்கு மதிப்பு தடாலடியாக வீழ்ச்சி கண்டுள்ளது. அந்த குழுமத்திற்குட்பட்ட 10 நிறுவனங்களின் பங்குகளும் சரமாரியாக சரிந்துள்ளன.
 
குறிப்பாக, அதானி டிரான்ஸ்மிஷன், அதானி டோடல் கேஸ், அதானி கிரீன் எனர்ஜி ஆகிய 3 நிறுவனங்களின் பங்குகளும் 20 சதவீதத்திற்கும் கீழாக குறைந்துள்ளன. அதானி குழுமத்தின் பிரதான நிறுவனமான அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் 18.5 சதவீத அளவுக்கு சரிவு கண்டுள்ளது.
 
ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை வெளியான பிறகு, அதானி குழுமத்தில் அடங்கிய 7 முக்கிய நிறுவனங்களின் மதிப்பு சுமார் 3.92 லட்சம் கோடி அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ளது. அதானி குழுமம் ஒட்டுமொத்தத்தில் ஐந்தில் ஒரு பங்கு அதாவது சுமார் ரூ. 4.2 லட்சம் கோடி அளவுக்கு சந்தை மூலதன மதிப்பை இழந்துள்ளது.
 
உலக பணக்காரர்கள் வரிசையில் பின்னடைவு
அதானி குழுமத்திற்கு ஏற்பட்டுள்ள சரிவு அதன் தலைவர் கௌதம் அதானியின் சொத்து மதிப்பை கடுமையாக பாதித்துள்ளது. அவரது சொத்து மதிப்பு 7.87 லட்சம் கோடி ரூபாயாக சரிந்துள்ளது.
 
இரண்டே நாட்களில் அவரது சொத்து மதிப்பு ரூ.1.85 லட்சம் கோடி குறைந்துள்ளது. இதனால், உலக பணக்காரர்கள் வரிசையிலும் ஏழாவது இடத்திற்கு கௌதம் அதானி பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
 
 
அதானி எண்டர்பிரைசஸ் கூடுதல் பங்குகள் வெளியீடு
ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கையால் பங்குச்சந்தையில் பின்னடைவைச் சந்தித்தாலும், அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் 20 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் மூலதனம் திரட்டுவதற்காக ஏற்கனவே திட்டமிட்டபடி பங்கு வெளியீட்டில் இறங்கியது. ஹிண்டன்பர்க் அறிக்கையால் பங்குச்சந்தையில் அதானி குழுமத்திற்கு ஏற்பட்ட ரத்தக்களரி இங்கும் எதிரொலித்தது.
 
அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் எதிர்பார்த்தபடி அந்த நாள் அமையவில்லை. பங்குச்சந்தை நிலவரத்தால் முதலீட்டாளர்கள் தயக்கம் காட்ட, முதல் நாளான வெள்ளிக்கிழமை ஒரு சதவீத பங்குகள் மட்டுமே சப்ஸ்கிரைப் செய்யப்பட்டதாக மும்பை பங்குச்சந்தை இணையதள தரவுகள் கூறுகின்றன. அந்நிறுவனம் 4.55 கோடி பங்குகளை வெளியிட்டுள்ள நிலையில், சுமார் 4.7 லட்சம் பங்குகளுக்கு மட்டுமே முன்பதிவுகள் கிடைத்துள்ளன.
 
 
அதானி குழுமத்தில் எல்.ஐ.சி., எஸ்.பி.ஐ. மீண்டும் முதலீடு
ஆனாலும், இந்த பங்குச்சந்தை நிகழ்வுகள் அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில் எல்.ஐ.சி., எஸ்.பி.ஐ. தொழிலாளர் ஓய்வூதிய நிதி, எஸ்.பி.ஐ. காப்பீட்டு நிறுவனம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள் முதலீடு செய்வதில் எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.
 
எல்.ஐ.சி. நிறுவனம் ரூ.300 கோடி, எஸ்.பி.ஐ. தொழிலாளர் ஓய்வூதிய நிதி ரூ.100 கோடி, எஸ்.பி.ஐ. காப்பீட்டு நிறுவனம் ரூ.125 கோடி முதலீடு செய்துள்ளன.
 
அதானி குழும பங்குகளின் வீழ்ச்சியால், எல்.ஐ.சி. நிறுவனம் இரண்டே நாட்களில் ரூ.16,580 கோடி ரூபாயை இழந்துள்ளது. அதாவது, எல்.ஐ.சி. வசமுள்ள அதானி நிறுவனங்களின் பங்கு மதிப்பு அந்த அளவுக்கு இறக்கம் கண்டுள்ளது.
 
பங்குச்சந்தையில் வீழ்ச்சி கண்டு கொண்டிருக்கும் அதானி குழுமத்தில் எல்,ஐ.சி., எஸ்.பி.ஐ. ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள் மீண்டும் முதலீடு செய்திருப்பது சரியா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால், அந்த இரு நிறுவனங்களிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களின் வாழ்நாள் சேமிப்புக்கு ஆபத்து எழுந்திருப்பதாகவும் அச்சம் எழுந்துள்ளது.
 
நாட்டின் நிதி ஸ்திரத்தன்மைக்கே ஆபத்து - காங்கிரஸ்
"இந்திய நிதிச் சந்தையில் முக்கிய பங்கு வகிக்கும் எல்.ஐ.சி., எஸ்.பி.ஐ. ஆகிய இரண்டுமே அதானி குழுமத்தில் ஏராளமான முதலீடுகளை செய்துள்ளன. இதனால், அதானி குழுமத்திற்கு எழுந்துள்ள நெருக்கடி நாட்டின் ஒட்டுமொத்த நிதி ஸ்திரத்தன்மையிலும், அந்த பொதுத்துறை நிறுவனங்களில் முதலீடு செய்துள்ள கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்த வல்லது," என்கிறார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்.
 
"ஒரு தனி நபர் அல்லது நிறுவனம் குறித்த ஆய்வறிக்கை குறித்து ஒரு அரசியல் கட்சி வினைபுரிய தேவையில்லைதான். ஆனால், அதானி குழுமம் ஒன்றும் சாதாரண நிறுவனம் அல்ல. பிரதமர் நரேந்திர மோதி, குஜராத் முதலமைச்சராக பதவி வகித்த போதே அவருக்கு நெருக்கமானவராக அறியப்படும் கௌதம் அதானியுடையது. ஆகவே, ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கையில் எழுப்பியுள்ள கேள்விகள் குறித்து பங்குச்சந்தை ஒழுங்காற்று அமைப்பான செபி விசாரிக்க வேண்டும்," என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
 
 
இந்தக் கட்டுரையில் Twitter வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Twitter குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
 
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
 
"எல்.ஐ.சி., எஸ்.பி.ஐ.யில் மக்களின் சேமிப்புப் பணம் என்னவாகும்?"
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி கூறுகையில், "ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் உண்மையானால், அது எல்.ஐ.சி., எஸ்.பி.ஐ. ஆகியவற்றில் தங்களது வாழ்நாள் சேமிப்பை வைத்துள்ள கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை சிதைத்துவிடும்," என்று அச்சம் தெரிவித்துள்ளார்.
 
"நாட்டிற்கு பிரதமர் மோடி கண்டிப்பாக விளக்கம் அளிக்க வேண்டும். இதுகுறித்து முழுமையாக விசாரணை அவசியம்," என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா வலியுறுத்தியுள்ளார்.
 
எஸ்.பி.ஐ. வங்கி என்ன சொல்கிறது?
அதானி குழுமத்தில் செய்துள்ள முதலீடுகள் குறித்து ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் எஸ்.பி.ஐ. தலைவர் தினேஷ்குமார் காரா விளக்கம் அளித்துள்ளார். "அதானி குழுமத்தில் எஸ்.பி.ஐ. முதலீடு ஒன்றும் அச்சப்படத்தக்க அளவுக்கு இல்லை. ரிசர்வ் வங்கி அனுமதித்துள்ள அளவுக்கும் குறைவாகவே முதலீடு செய்துள்ளோம். அதனால், இப்போதைய நிலையில் எங்களுக்கு எந்தவொரு கவலையும் இல்லை." என்று அவர் கூறியுள்ளார்.
 
அவர் மேலும் கூறுகையில், "அண்மைக் காலத்தில் அதானி குழுமத்தில் எஸ்.பி.ஐ. வங்கி முதலீடு ஏதும் செய்யவில்லை. இனி வருங்காலத்தில் அதானி குழுமத்தில் இருந்து முதலீட்டிற்கான வேண்டுகோள் ஏதும் வந்தால், விவேகத்துடன் அதனை அணுகுவோம்," என்று தெரிவித்துள்ளார்.
 
எல்.ஐ.சி.யோ, பங்குச்சந்தையின் தற்போதைய நிகழ்வுகளை பொருட்படுத்தாமல் அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில் மீண்டும் 300 கோடி ரூபாயை முதலீடு செய்திருப்பதன் மூலம் மவுனமாக தனது பதிலை தெரியப்படுத்தியிருப்பதாகவே பொருள் கொள்ளலாம் என்று பங்குச்சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.
 
 
பங்குச்சந்தை நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?
இதுகுறித்து பங்குச்சந்தை நிபுணர் சோம. வள்ளியப்பனிடம் பேசிய போது, "எல்.ஐ.சி., எஸ்.பி.ஐ. ஆகிய நிறுவனங்கள் அளவில் மிகப்பெரியவை. அத்துடன் ஒப்பிடுகையில், அதானி குழுமத்தில் அவற்றின் முதலீடு என்பது சிறிய அளவுதான். மேலும், ரிசர்வ் வங்கி அனுமதித்துள்ள அளவுக்கு மேல் அதானி குழுமத்தில் அவற்றால் முதலீடு செய்திருக்க முடியாது என்றே நினைக்கிறேன்.
 
பங்குச்சந்தையின் தற்போதைய நிகழ்வுகளால் எல்.ஐ.சி., எஸ்.பி.ஐ. ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள் ஒருவேளை நஷ்டத்தை சந்தித்தாலும், அவை அந்நிறுவனங்களை பெரிய அளவில் பாதிக்காது என்றே கருதுகிறேன். ஆகவே, எல்.ஐ.சி., எஸ்.பி.ஐ. நிறுவனங்களின் ஸ்திரத்தன்மை குறித்து அச்சப்படத் தேவையில்லை," என்றார்.
 
அதானி குழுமத்தின் எதிர்காலம் என்னவாகும்?
"அதானி குழுமம் தன் சந்தை மூலதன மதிப்பை மிகை மதிப்பீடு செய்தது, செயற்கையாக மதிப்பை உயர்த்திக் காட்டியது என்பதே அதன் மீது ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை முன்வைக்கும் பிரதான குற்றச்சாட்டு போல தெரிகிறது. நிறுவனம் குறித்த மிகை மதிப்பீடு என்பது புதிதல்ல. லஞ்சம் போன்ற சட்டவிரோத செயல்களில் அதானி குழுமம் ஈடுபட்டிருப்பதாக ஹிண்டன்பர்க் அறிக்கையில் கூறப்பட்டிருந்தால் அது பெரிய பிரச்னையை உருவாக்கக் கூடும்.
 
ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை சுட்டுவது எந்த அளவுக்கு உண்மையாக இருந்தாலும், தற்போதைய நிலையில் அதானி குழுமத்தை சந்தேக மேகங்கள் சூழ்ந்திருப்பதால், அதில் முதலீடு செய்ய பெரு முதலீட்டாளர்களிடையே தயக்கம் நிலவும். சிறு முதலீட்டாளர்களோ ஆபத்து என்று கருதி ஒதுங்குவதே சரி. அவர்கள் அப்படி செய்வார்களா என்று தெரியவில்லை," என்கிறார் வள்ளியப்பன்.
 
மேலும் அவர் பேசும்போது, "ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை உண்மையா? இல்லையா? என்பதைக் காட்டிலும் அதன் பேரில் செபியோ, இந்திய ரிசர்வ் வங்கியோ என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதே மிகவும் முக்கியம். ஆய்வறிக்கையால் எழுந்துள்ள சந்தேக மேகங்கள் எப்போது விலகும் அல்லது உறுதி செய்யப்படும்? செபி அல்லது ரிசர்வ் வங்கி நடவடிக்கை என்ன? என்பதைப் பொருத்தே அதானி குழுமத்தின், அதன் பங்குகளின் எதிர்காலம் அமையும்," என்று கூறினார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கரூரில் மாநில சாரணர் உயர் விருதை வழங்கிய அமைச்சர் அன்பில் மகேஷ்