Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வெங்காய விளம்பரத்தை "ஆபாசமானதாக" கருதி நிராகரித்த ஃபேஸ்புக்

வெங்காய விளம்பரத்தை
, ஞாயிறு, 11 அக்டோபர் 2020 (14:48 IST)
வெங்காயத்தில் வழக்கமான வெங்காயங்கள் மற்றும் ஃபேஸ்புக்கிற்கு மிகவும் கவர்ச்சியாக உள்ள வெங்காயங்கள் என இருவேறு வகைகள் உள்ளதை கனடாவை சேர்ந்த விதை மற்றும் தோட்டம் சார்ந்த அங்காடி ஒன்று கண்டறிந்துள்ளது.

தனது அங்காடியில் உள்ள வல்லா- வல்லா என்னும் ஒருவகை வெங்காயத்துக்கான விதைகள் குறித்து ஃபேஸ்புக்கில் விளம்பரப்படுத்த முயற்சி செய்தபோதே இந்த சுவாரஸ்யமான சம்பவம் நடந்துள்ளது.

அதாவது, வெங்காயத்தின் விதைகள் குறித்த விளம்பரம் "ஆபாசமாக" உள்ளதாக கூறி அதை ஃபேஸ்புக் நிராகரித்துள்ளது.

இந்த நிலையில், தனது தானியங்கி தொழில்நுட்பம் செய்த இந்த தவறுக்கு மன்னிப்பு கோருவதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
webdunia

ஃபேஸ்புக்கின் தானியங்கி தொழில்நுட்பத்தால் நிராகரிக்கப்பட்ட அந்த விளம்பரத்தில், அதிக எடை மற்றும் இனிப்பு சுவைக்காக அறியப்படும் வல்லா வல்லா வெங்காயங்கள் மரக்கூடையில் பல வெட்டப்படாமலும், சில வெட்டப்பட்ட நிலையிலும் உள்ளதை போன்ற புகைப்படம் இணைக்கப்பட்டிருந்தது.

தங்களது விளம்பரம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை அறிவதற்கு சிறிதுநேரம் பிடித்ததாக அந்த அங்காடியின் மேலாளர் ஜாக்சன் மெக்லீன் கூறுகிறார்.

அதன் பிறகே, வெங்காயத்தின் "வட்டமான வடிவத்தை" தானியங்கி தொழில்நுட்பம் மார்பகம் அல்லது பிட்டம் என எண்ணி நிராகரித்திருக்கக் கூடும் என்ற முடிவுக்கு அவர் வந்தார்.

இவ்வாறு விளம்பரம் நிராகரிக்கப்பட்டது தனது வாடிக்கையாளர்களுக்கு வேடிக்கையாக இருக்கும் என்று எண்ணிய அவர், "பாலியல் ரீதியாக ஒரு தயாரிப்பையோ அல்லது சேவையையோ விளம்பரப்படுத்தக் கூடாது" என்ற ஃபேஸ்புக்கின் தானியங்கி தொழில்நுட்பத்தின் எச்சரிக்கையுடன் அங்காடியில் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.

அந்த பதிவுக்கு பதிலளிக்கும் வகையில், சில வாடிக்கையாளர்கள் சர்ச்சைக்குள்ளான வெங்காயத்தை தொடர்ந்து கேரட், பூசணிக்காய்களின் படங்களை பதிலாக பதிவிட்டனர்.
இதுமட்டுமின்றி, இந்த முடிவுக்கு எதிராக அவர் ஃபேஸ்புக்கிடம் முறையிட்டார்.

"எங்கள் செயலிகளில் நிர்வாணத்தைத் தடுக்க நாங்கள் தானியங்கி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறோம். ஆனால் சில சமயங்களில் அது வல்லா வல்லா வெங்காயம் போன்றவற்றை பிரித்தறிவதில்லை" என்று ஃபேஸ்புக் கனடாவின் தகவல் தொடர்புத் தலைவர் மெக் சின்க்ளேர் பிபிசியிடம் தெரிவித்தார்.

"நாங்கள் அந்த விளம்பரத்துக்கு ஒப்புதல் அளித்துவிட்டோம். மேலும், சிக்கலுக்கு வருந்துகிறோம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவலின் காரணமாக தங்களது அங்காடியில் உள்ள அனைத்து பொருட்களையும் இணையவழியில் வாங்குவதற்கான வசதிகளை ஏற்படுத்தும் முயற்சியை மேற்கொண்டுள்ளதாகவும், அதன் ஒரு பகுதியாகவே வெங்காயம் போன்ற சில தயாரிப்புகளை சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்தி வருவதாகவும் மெக்லீன் கூறினார்.

"பழைய வெங்காய ரகமான" வல்லா வல்லாவை வாடிக்கையாளர்களின் வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் விற்பனைக்கு கொண்டுள்ளதாகவும், அது பிற வகைகளுடன் அதிகம் விற்பனை ஆவதாகவும் அவர் மேலும் கூறுகிறார்.

"கடந்த ஐந்தாண்டுகளில் விற்பனையானதை விட அதிகளவிலான வல்லா வல்லா வெங்காயம் கடந்த மூன்றே நாட்களில் விற்பனை ஆகியுள்ளது. மேலும், ஃபேஸ்புக்கில் நடந்த சம்பவத்தை தொடர்ந்து, இந்த வகை வெங்காயத்தை எங்களது இணையதளத்தில், "கவர்ச்சியான வெங்காயம்" என்ற பட்டியலின் கீழ் வகைப்படுத்தியுள்ளோம்" என்று அவர் மேலும் கூறினார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எல்லா முக்கிய பிரச்சினையும் மென்சன் பண்ணுங்க! – தயாராகிறது திமுக தேர்தல் அறிக்கை!