ஆர்க்டிக் கடல் பனி அடுக்குகள் உலகின் வெப்ப நிலையை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த இயற்கையான வெப்ப கட்டுப்பாட்டு அமைப்புக்கு ஏற்படும் பிரச்சனை உண்மையிலேயே புவிக் கோளுக்கு கவலைக்குரிய செய்தி.
ஒவ்வொரு பத்தாண்டும் ஆர்க்டிக் பனி அடுக்குகள் பரவிக் கிடக்கும் பகுதியில் குறைந்தது 13.1 சதவீதம் காணாமல் போவதாக அமெரிக்காவின் விண்வெளி முகமையான நாசா கூறுகிறது. இது 1981 முதல் 2010 வரையான ஆண்டுகளின் சராசரி என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்க்டிக் பகுதியில் பனி அடுக்குகள் சுருங்குவதற்கு, மனிதர்கள் வெளியிடும் பசுமை இல்ல வாயுக்கள் வளிமண்டலத்தில் அளவுக்கு அதிகமாக சேர்வதுதான் முதன்மையான காரணம் என, கடந்த 2007ஆம் ஆண்டு பருவநிலை மாற்றம் தொடர்பான அரசுகளுக்கிடையிலான குழுவின் நான்காவது மதிப்பீட்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வெப்பம் அதிகரித்து வரும் புவியில், காணாமல் போகும் கடல் பனி அடுக்குகள், பூவிப் பரப்பின் சராசரி வெப்ப நிலை அதிகரிக்க காரணமாகும். இந்த பனி அடுக்குகள் 80 சதவீத சூரிய ஒளியை எதிரொலிக்கின்றன. இதனால், சூரிய ஒளி புவியை வெப்பமாக்காமல் திருப்பி அனுப்பப்படுகிறது.
கடல் பனி அடுக்குகள் உருகும் போது, பெருங்கடல்களில் மேற்பரப்பின் மீது சூரிய ஒளி நேரடியாக விழுகிறது. பெருங்கடல்கள் 90 சதவீத சூரிய ஒளியை உள்வாங்கிக் கொள்கின்றன. அது ஒட்டுமொத்த வட்டாரத்தையும் சூடாக்குகிறது. இதை ஆங்கிலத்தில் அல்பெடோ எஃபெட் (Albedo Effect) என்கிறார்கள்.
மனிதர்களால் கட்டுப்படுத்த முடியாது
வெளிர் நிறங்கள் வெப்பத்தை எதிரொலிக்கும், அடர் நிறங்கள் வெப்பத்தை உள்வாங்கிக் கொள்ளும் என்கிற எளிய தத்துவத்தால் இந்த விளைவு ஏற்படுகிறது.
ஆர்க்டிக் கடல் பனி அடுக்குகள் உறைவதும், உருகுவதும் குறிப்பிட்ட காலத்தில் நடக்கும் ஒரு விஷயம். மார்ச் மாதங்களில் உறைந்து கிடக்கும். செப்டம்பர் மாத காலத்தில் உருகிய நிலையில் இருக்கும்.
ஆர்டிக் கடல் பனி அடுக்குகள் சுருங்கி வருவதாக களத்தில் இருந்து கண்டு எடுக்கப்பட்ட தரவுகள் மற்றும் செயற்கைக் கோள் தரவுகள் நமக்கு உணர்த்துகின்றன.
கடல் பனி அடுக்குகள் சுருங்குவதால், பெருங்கடல் பரப்புகள் அதிக வெப்பத்தை உள்வாங்கிக் கொள்கின்றன. எனவே இது ஒட்டுமொத்தமாக நிலப்பரப்புகள் மற்றும் கடல்களை அதிகம் வெப்பமடையச் செய்கின்றன.
பனியால் மூடப்பட்டிருக்கும் பகுதிகள் குறைந்து, நேரடியாக சூரிய ஒளி படும் பகுதிகள் அதிகரித்து வருவது, ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் தங்கள் அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதனால்தான் புவியை சூழ்ந்த வளிமண்டலத்தின் வெப்ப நிலை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு அதிகரிக்கிறது. அது அபாய அளவை எட்டிய பிறகு மனிதர்கள் என்ன தான் முயற்சி எடுத்தாலும் அதன் வெப்ப நிலையை மாற்ற முடியாமல் போகிறது.
சிறிய மற்றும் வெப்பமான பூமி
வட துருவத்தில் பனி அடுக்குகளின் அடர்த்தி குறைவது மற்றொரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அது வடமேற்கு போக்குவரத்துப் பாதையை திறந்துவிடுகிறது. இந்த வணிகப் பாதை வட அட்லாண்டிக் மற்றும் வட பசிபிக் பெருங்கடலை இணைக்கிறது.
கிரீன்லாந்து மற்றும் கனடா நாட்டுக்கு மத்தியில் உறைந்து கிடக்கும் ஆர்டிக் பெருங்கடலில் ஒரு போக்குவரத்துப் பாதையைக் கண்டுபிடிக்க 19ஆம் நூற்றாண்டில் இருந்து முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அப்பகுதியில் கோடை காலத்தில் கடல் பகுதி உருகுவதால், எதிர்காலத்தில் அது வணிக ரீதியில் பயன்படுத்தப்படும் ஒரு தடமாக மாறலாம் என சில நிபுணர்கள் கருதுகின்றனர்.
சிலரோ, இது உலக கப்பல் போக்குவரத்தில் ஏற்படவிருக்கும் மிகப் பெரிய புரட்சிகரமான மாற்றமாக இருக்கலாம் என்கிறார்கள். சிலரோ இது அப்பகுதியில் ஏற்படவிருக்கும் பேரழிவு என்கிறார்கள்.
அவ்வழித் தடத்தில் அதிகரித்து வரும் கப்பல் போக்குவரத்து, அப்பகுதியில் இருக்கும் கடல் வாழ் உயிரினங்களின் சூழலியலையை பாதிக்கும் என தங்கள் அச்சத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள் சுற்றுச்சூழல் அமைப்புகள்.
இந்த துருவ பகுதியில் கப்பல்கள் விபத்தை எதிர்கொண்டால் அது மிக மோசமான மாசுபாட்டை ஏற்படுத்தலாம் என அவர்கள் குறிப்பிட்டு தங்கள் கவலையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
போதுமான உணவு இல்லை
கடல் பனி அடுக்குகளின் அடர்த்தி குறைவதால் சில விலங்கினங்கள் நேரடியாக பாதிக்கப்படுகின்றன என்று ஆதாரங்கள் கூறுகின்றன. இதில் போலார் பனிக் கரடிகளும் அடக்கம்.
பனிக் கரடிகளின் உடல் எடையை தாங்கும் அளவுக்கு பனி அடுக்குகளின் அடர்த்தி இல்லாததால், அவ்உயிரினங்கள் தங்கள் சக்தியை அதிகம் பயன்படுத்தி இரையை வேட்டையாட வேண்டி இருக்கிறது அல்லது ஒட்டுமொத்தமாக இரையை வேட்டையாடுவதே சிரமமாகி இருக்கிறது.
பனிக்கரடிகள் தனக்கு போதுமான உணவு கிடைக்காததால், மக்கள் வாழும் இடக்களுக்கு உணவைத் தேடி வருகின்றன.
இது போக விஞ்ஞானிகள் மத்தியில் இருக்கும் மற்றொரு மிகப் பெரிய பிரச்சனை என்னவென்றால் அது நீரோட்டம். கடல் பனி அடுக்குகள் உருகுவதால் ஆர்டிக் பகுதியில் கடலின் நீரோட்டம் பாதிக்கப்படுகிறது.
பொதுவாக கடலின் உப்பு நீரை விட, நன்னீரின் அடர்த்தி குறைவாக இருக்கும். திடீரென ஆர்டிக் கடலில் உருவாகும் நன்னீர், வடக்கு அட்லாண்டிக் கடலில் கலப்பதால் கடல் நீரோட்டத்தின் வலிமை மாற்றத்துக்கு உள்ளாகிறது. இது ஒட்டுமொத்தமாக உலகின் பருவநிலை அமைப்பில் காலநிலை முறைகளை பாதிக்கலாம்.