Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

'மதம் கடந்து திருமணம் செய்துகொள்ள விரும்பாத பெரும்பான்மை இந்தியர்கள்' - ப்யூ ரிசர்ச் சென்டர்

Advertiesment
'மதம் கடந்து திருமணம் செய்துகொள்ள விரும்பாத பெரும்பான்மை இந்தியர்கள்' - ப்யூ ரிசர்ச் சென்டர்
, வியாழன், 1 ஜூலை 2021 (13:16 IST)
தாங்கள் மத சகிப்புத் தன்மை வாய்ந்தவர்கள் ஆனால் மதம் கடந்து திருமணங்களுக்கு எதிரானவர்கள் என்று பெரும்பாலான இந்தியர்கள் தங்களை அடையாளப் படுத்திக் கொள்வதாக அமெரிக்காவைச் சேர்ந்த ப்யூ ரிசர்ச் சென்டர் எனும் சமூக ஆய்வு நிறுவனம் ஒன்று நடத்தியுள்ள கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.

மதம் கடந்த திருமணங்கள் நிகழ்வதை நிறுத்துவது தங்களுக்கு அதிக முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டியது என்று இந்தியாவில் உள்ள வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

திருமணத்துக்காக கட்டாயமாக மதமாற்றம் செய்யப்படுவதை தண்டனையாக்கும் சட்டங்களை பல இந்திய மாநிலங்கள் அமல்படுத்திய நிலையில் இந்த நிறுவனம் இந்த ஆய்வை மேற்கொண்டது.

இந்தியா முழுவதும் 17 மொழிகளைப் பேசும் 30,000 பேரிடம் நேர்காணல் செய்யப்பட்டது. 26 மாநிலங்கள் மற்றும் மூன்று ஒன்றிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் ப்யூ ரிசர்ச் சென்டர் நடத்திய இந்த ஆய்வில் பங்கேற்றுள்ளனர்.

இந்த ஆய்வில் பங்கேற்ற 80 சதவீதம் இஸ்லாமியர்கள் தங்கள் மதத்தை சேர்ந்த ஒருவர் பிற மதத்தினரை திருமணம் செய்து கொள்வது தடுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இதேபோல இந்த ஆய்வில் பங்கேற்ற 65 சதவீத இந்துக்கள் கூறியுள்ளனர்.

இந்த ஆய்வில் ஒருவருடைய மத நம்பிக்கை மற்றும் தேசியவாதம் ஆகியவற்றுக்கு இடையே உள்ள தொடர்பு குறித்து கேட்கப்பட்டது. தங்களுடைய தேசிய அடையாளம் மற்றும் மத நம்பிக்கை ஆகியவை மிகவும் நெருக்கமாக இரண்டறக் கலந்தவை என்ற கருத்தை பெரும்பாலான இந்துக்கள் பார்வையாகக் கொண்டுள்ளனர் என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

உண்மையான இந்தியனாக இருப்பதற்கு ஒருவர் இந்துவாக இருக்க வேண்டியது அவசியம் என்று இந்த ஆய்வில் பங்கேற்ற இந்துக்களின் சுமார் மூன்றில் இரண்டு பங்கினர் (64 சதவிகிதம் பேர்) தெரிவித்துள்ளனர்.

மதங்களுக்கு இடையே பெரும்பாலான மத நம்பிக்கைகள் மற்றும் விழுமியங்கள் ஆகியவை பொதுவானதாக இருக்கும் போதும் தங்களுக்குள் பொதுத்தன்மை அதிகமானதாக இல்லை என்றே இந்தியாவில் இருக்கும் பெரும்பான்மையான சமூகங்களை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர் என்கிறது இந்த சமூக ஆய்வு.

மத சகிப்புத்தன்மை குறித்து உற்சாகமாக கருத்து வெளியிடும் இந்தியர்கள் அதே சமயத்தில் தங்களது மத குழுக்களை சேர்ந்தவர்களுடன் மட்டும் தனியான இடங்களில் அவர்கள் மட்டும் ஒரு குழுவாக வாழ்கிறார்கள் என்று இந்த ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.

மத அடிப்படையில் பிறரிடம் இருந்து பிரிந்து வாழும் ஒரு வாழ்க்கையையே வாழ்வதாகக் கூறும் இந்த ஆய்வறிக்கை நட்பு என்று வரும்பொழுது தங்களது கிராமம் அல்லது குடியிருப்புப் பகுதியில் இருந்து குறிப்பிட்ட சில மதத்தைச் சேர்ந்தவர்களை தள்ளி வைத்திருக்கவே விரும்புவதாகத் தெரிவிக்கின்றனர் என்று இந்த ஆய்வு கூறுகிறது.
webdunia

இந்து மற்றும் இஸ்லாமிய சமூகங்களைச் சேர்ந்த இருவர் இடையே நிகழும் திருமணங்கள் பழமைவாத குடும்பங்களில் இருந்து கடுமையான எதிர்ப்பை சந்தித்து வருகின்றன.

தற்போது இதுபோன்று மணமுடிக்கும் தம்பதிகள் சட்டபூர்வத் தடைகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

மதம் கடந்த திருமணம் செய்பவர் 30 நாட்களுக்கு முன்பே நோட்டீஸ் வழங்க வேண்டும் என்று இந்தியாவில் உள்ள சிறப்புத் திருமணச் சட்டம் அறிவுறுத்துகிறது.

ஆனால் பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநில அரசுகள் ஒரு படி மேலே போய் "கட்டாயப்படுத்தி அல்லது ஏமாற்றி சட்டவிரோதமாக மேற்கொள்ளப்படும் மத மாற்றங்களை தடை செய்வதற்காக" சட்டம் இயற்றியுள்ளன.

இஸ்லாமிய ஆண்கள் இந்து பெண்களை தங்கள் மதத்திற்கு மதமாற்றம் செய்ய வேண்டும் எனும் நோக்கில் ஏமாற்றி மணம் முடிப்பதாக அடிப்படை ஆதாரங்கள் அற்ற ஒரு சதித்திட்ட கோட்பாட்டை இந்தியாவிலுள்ள வலதுசாரி இந்து குழுக்கள் ''லவ் ஜிகாத்'' என்று கூறுகின்றனர். இதற்கு எதிராகவே இந்த சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.

சுமித் செளகான் மற்றும் அவரது மனைவி ஆஸ்ரா பர்வீன் ஆகியோர் மதம் கடந்த திருமணம் செய்தவர்கள். சுமித் சவுகான் ஓர் இந்து குடும்பத்தை சேர்ந்தவர்; அவர் தன்னை ஒரு தலித் என்று அடையாளப்படுத்திக் கொள்கிறார்.

ஆஸ்ரா இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர்." இஸ்லாமியர்களைப் பற்றி சில தவறான புரிதல்கள் என்னுடைய இந்து உறவினர்களுக்கு இருந்தது. ஆனால் நான் என் தாயார் சகோதரி மற்றும் சகோதரர் ஆகியோரிடம் பேசி புரிய வைத்தேன்," என்று கூறுகிறார் சுமித்.

ஆனால் ஆஸ்ராவுக்கு எதுவும் எளிதாக இருக்கவில்லை. தாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள தங்கள் குடும்பம் அனுமதிக்கவில்லை என்று அவர் கூறுகிறார்.

இதன் பின்பு ரகசியமாக திருமணம் செய்து கொள்ள இவர்கள் முடிவுசெய்தனர். இதன் பின்பு சுமார் மூன்றாண்டு காலம் ஆகியும் ஆஸ்ரா பர்வீன் குடும்பத்தினர் தங்களிடம் பேசவில்லை என்று செளகான் கூறுகிறார்.

தற்போது அவரின் குடும்பத்தினர் தங்களுடன் பேசினாலும் தங்களுக்கு திருமணம் நடந்ததை பொதுவெளியில் அங்கீகரிப்பதில்லை என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஆண்டு எனது மனைவியின் இளைய சகோதரிக்கு திருமணம் நடந்தது. ஆனால் நாங்கள் அதற்கு அழைக்கப்படவில்லை என்று செளகான் கூறுகிறார்.

தங்கள் கதையை கூறி முடிக்கும் பொழுது சுமித் வேறொன்றையும் தெரிவித்தார்.

"நீங்கள் நேசிக்கும் ஒருவரை திருமணம் செய்து கொள்வதற்காக நீங்கள் மதம் மாறத் தேவையில்லை."

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒன்றிய அரசு என சொல்ல தடை விதிக்க முடியாது! – சென்னை உயர்நீதிமன்றம்