லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஒன்வெப் என்கிற நிறுவனம், விண்வெளியில் இருந்து அதிவேக இணைய சேவையை வழங்குவதற்கு தேவையான விஷயங்களை மேம்படுத்திக் கொண்டிருக்கிறது.
தன் முயற்சியில் கடந்த வியாழக்கிழமை ஒரு புதிய உச்சத்தை எட்டி இருக்கிறது அந்நிறுவனம்.
ஒன்வெப் நிறுவனம் மேலும் 36 செயற்கைக் கோள்களை ஏவியுள்ளது. எனவே தற்போது ஒன்வெப் நிறுவனத்துக்குச் சொந்தமாக 254 செயற்கைக் கோள்கள் விண்வெளியில் இருக்கின்றன.
தன் முழு அமைப்பையும் நிறுவ, இன்னும் பல செயற்கைக் கோள்களை ஏவ வேண்டும் என்றால் கூட, தற்போது ஏவப்பட்டிருக்கும் செயற்கைக் கோள்களை வைத்துக் கொண்டு, உலகின் வட துருவத்தில் தன் இணைய சேவையை வழங்கத் தொடங்கும் அளவுக்கு போதுமானதாக இருக்கிறது.
இது இவ்வாண்டின் இறுதிக்குள் தொடங்கப்பட இருக்கிறது.
"இவை அனைத்தும் ஒருநாள் இரவில் நடக்காது. கடந்த சில மாதங்களாக கடுமையான உழைப்பு போடப்பட்டிருக்கிறது. இருப்பினும் இந்த 36 செயற்கைக் கோள்களை ஏவுவது என்பது பிரத்யேகமானது" என ராக்கெட் ஏவப்படுவதற்கு முன் கூறினார் ஒன்வெப் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி நீல் மாஸ்டர்சன்.
"இந்த 36 செயற்கைக் கோள்கள் தான் 50 டிகிரி லாட்டிட்யூட் பகுதியில் இருந்து வட துருவம் முழுக்க இணைப்பு சேவையை வழங்குகின்றன. இதில் வட ஐரோப்பா, பிரிட்டன், கிரீன்லாந்து, கனடா, அலாஸ்கா, ஐஸ்லாந்து ஆகிய பகுதிகள் அடங்கும்" என பிபிசியிடம் கூறினார்.
ரஷ்யாவில் கிழக்குப் பகுதியில் இருக்கும் வோஸ்டோச்னி காஸ்மோட்ரோமில் இருந்து இந்த 36 செயற்கைக் கோள்கள் ஏவப்பட்டன.
நேற்று (ஜூலை 01, வியாழக்கிழமை) உள்ளூர் நேரப்படி 21.48-க்கும் சோயஸ் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்டது.
அடுத்த சில மணி நேரங்களுக்கு செயற்கைக் கோள்கள் வெற்றிகரமாக சென்ற சேர்ந்ததா என்பதை தெரிந்து கொள்ள முடியாது.
சுமார் ஓராண்டு காலத்துக்கு முன் தான் பிரிட்டன் அரசும், இந்தியாவின் பார்தி குளோபல் என்கிற நிறுவனமும், கடனில் தத்தளித்துக் கொண்டிருந்த ஒன்வெப் நிறுவனத்தை ஏலத்தில் எடுத்து, தலா 500 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்தனர்.
அதன் பிறகு பல முதலீட்டாளர்கள் இத்திட்டத்தில் இணைந்தனர். யுடெல்சாட் (Eutelsat) என்கிற பிரான்சின் செயற்கைக் கோள் தொலைத் தொடர்பு நிறுவனம் இத்திட்டத்தில் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
2022ஆம் ஆண்டுக்குள் 650 செயற்கைக் கோள்களை ஏவுவது தான் இத்திட்டத்தின் இலக்கு. அதற்கு வியாழக்கிழமை ஏவிய 36 செயற்கைக் கோள்கள் போக, இன்னும் சுமார் 10 முறையாவது செயற்கைக் கோள்களை ஏவ வேண்டும்.
இத்திட்டத்துக்கு 2.4 பில்லியன் அமெரிக்க டாலர் நிதி தேவைப்படுகிறது. இந்த வாரம் 500 மில்லியன் அமெரிக்க டாலரை முதலீடு செய்ய தீர்மானித்திருக்கிறது பார்தி குழுமம். எனவே திட்டத்துக்குத் தேவையான மொத்த நிதித் தேவையையும் இது நிறைவு செய்கிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒன்வெப் நிறுவனம் மற்றும் பிரிட்டனின் தொலைத் தொடர்பு சேவை நிறுவனமான பிடி நிறுவனமும் ஓர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். பிரிட்டன் மற்றும் உலகம் முழுக்க இந்த இரு நிறுவனங்களும் எப்படி இணைந்து செயல்படலாம் என்கிற வழிகளை ஆராயவிருக்கின்றன.
பிரிட்டனுக்கான கொள்ளளவில் பெரும் பகுதியை பிடி நிறுவனம் எடுத்துக் கொள்ளலாம். பிடி நிறுவனம் தன் அகன்ற அலைவரிசை சேவையில் ஒன்வெப் சேவையையும் ஒன்றாக களமிறக்கும்.
எனவே இதுவரை இணைய வசதிகள் இல்லாத அல்லது மிகக் குறைவான இணைய வசதி கொண்ட இடங்களில் ஒன்வெப் நிறுவனத்தின் இணைய சேவைகள் வழங்கப்படும்.
"நாங்கள் ஃபைபர் ஆப்டிக் அளவுக்கு தரமான இணைய சேவையை, ஃபைபர் ஆப்டிக் கேபிள்கள் இல்லாத இடங்களில் வழங்குகிறோம். பிடி போன்ற தொலைத் தொடர்பு நிறுவனங்களால் சேவை வழங்க முடியாத இடங்களுக்கு சேவை வழங்குவது அல்லது அவர்களது சேவைக்கு வலுசேர்ப்பது தான் எங்கள் இலக்கு" என்கிறார் மாஸ்டர்சன்.
பிரிட்டன் அமைச்சர்கள் 'ஜிகாபிட்' என்கிற திட்டத்தை முன்மொழிந்து கொண்டிருக்கிறார்கள். பிரிட்டனின் கிராமபுற பகுதிகளில் அகன்ற அலைவரிசை சேவையை கணிசமாக மேம்படுத்துவது தான் இதன் நோக்கம். இத்திட்டத்தில் ஒன்வெப் நிறுவனத்தின் சேவை முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒன்வெப்பைப் போலவே அதிக எண்ணிக்கையில் செயற்கைக் கோள்களை அனுப்பி இணைய சேவையை வழங்கும் போட்டி நிறுவனம் ஈலான் மஸ்கின் ஸ்டார் லிங்க்.
ஸ்டார் லிங்க் நிறுவனத்துக்கு ஏற்கனவே 1,500 செயற்கைக் கோள்கள் விண்வெளியில் சுற்றித் திரிந்து கொண்டிருக்கின்றன.
இன்னும் ஆயிரக் கணக்கான செயற்கைக் கோள்கள் அனுப்பப்பட இருகின்றன. இதன் இணைய சேவை பீட்டா சோதனையில் இருக்கிறது. வரும் ஆகஸ்ட் மாதம் முதல் தன் சேவையை தொடங்க இருப்பதாக ஈலான் மஸ்க் இந்த வாரம் தெரிவித்தார். அடுத்த 12 மாதங்களுக்குள் சுமார் ஐந்து லட்சம் பயனர்கள் இதைப் பயனப்டுத்துவார்கள் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.
ஸ்டார்லிங்க் மற்றும் ஒன்வெப் நிறுவனங்கள் இரண்டும், இருவேறு வியாபார மாதிரிகளைக் கொண்டிருக்கின்றன. ஒன்வெப் நிறுவனம் தொலைத் தொடர்பு நிறுவனங்களோடு இணைந்து செயல்பட இருக்கிறது. ஆனால் ஸ்டார் லிங்கோ நேரடியாக வாடிக்கையாளர்களிடம் அலைவரிசையை விற்க இருக்கிறது.
இந்த இரு நிறுவனங்களும் மற்ற எந்த நிறுவனங்களை விடவும் இணைய வியாபாரத்தில் முன்னேறி இருக்கிறார்கள்.
ஐரோப்பிய ஆணையம் மற்றும் சீன அரசாங்கம் கூட இது போல செயற்கைக் கோள்களை ஏவி இணைய சேவையை வழங்குவது குறித்து பேசிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அது குறித்து எந்த வித தெளிவான விவரங்களும் கிடைக்கவில்லை.