Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எடப்பாடி பழனிசாமி vs மு.க. ஸ்டாலின்: தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் தேர்வு பற்றி முதலமைச்சர் உரை என்ன?

எடப்பாடி பழனிசாமி vs மு.க. ஸ்டாலின்: தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் தேர்வு பற்றி முதலமைச்சர் உரை என்ன?
, திங்கள், 13 செப்டம்பர் 2021 (12:37 IST)
எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோதுதான் நீட் தேர்வு தமிழ்நாட்டில் முதன்முதலில் நடத்தப்பட்டது என்றும் . குடியுரிமை திருத்தச் சட்டம், மற்றும் வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் வாக்களிக்க, நீட் தேர்விற்கு விலக்கு தர வேண்டுமென்று அ.தி.மு.க, பாரதிய ஜனதா கட்சிக்கு நிபந்தனை விதித்திருக்கலாம் என்றும் கூறியுள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு நிரந்தர விலக்கு கோரும் மசோதாவை தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின். இதன்பின்னர் எடப்பாடி பழனிசாமி திமுக அரசு மீது நீட் தேர்வு தொடர்பாக முவைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்தார்.

"அச்சம் விலக்கி, நம்பிக்கையூட்டி நீட்தேர்வுக்கு தயார்படுத்தி, நன்மதிப்பெண் பெற்று மருத்துவராக வேண்டிய மாணவன் தனுஷை மரணக்குழியில் தள்ளியிருக்கும் திமுக அரசே, நீட் தேர்வு ரத்து வாக்குறுதி என்னவாயிற்று, ரகசியம் வைத்திருப்பதாக சொன்னீர்களே,அதை எப்போது செயல்படுத்துவீர்கள்," என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியிருந்தார்.

"நீட் தேர்வு நடைபெறுமா, நடைபெறாதா, நடைபெறும் எனில் மாணவர்கள் தேர்வுக்கு தயாராக அறிவுறுத்தி முறையான பயிற்சி அளித்து குழப்பத்தில் உள்ள மாணவர்களை தெளிவுபடுத்த வேண்டும் ," என்றும் நேற்றைய அறிக்கையில் அவர் தெரிவித்திருந்தார்.

அதற்கு பதில் அளிக்கும் விதமாக, "நீட் தேர்வைத் தடுத்து நிறுத்தி, 12 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களை மருத்துவக் கல்வியில் சேர்த்தவர் கருணாநிதி என்றும் மறைந்த முதலமைச்சர் அம்மையார் ஜெயலலிதா கூட நீட் தேர்வை நடத்த அனுமதிக்கவில்லை," என்றும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று பேசினார் ஸ்டாலின்.

எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுகளுக்கு ஸ்டாலின் அளித்த பதிலின் முக்கிய சாராம்சம் கீழே தொகுக்கப்பட்டுள்ளது.
  • எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சராக இருந்தபோதுதான் நீட் தேர்வு தமிழ்நாட்டில் முதன்முதலில் நடத்தப்பட்டது.
  • 'நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும்' என்று இதே சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட மசோதா நிராகரிக்கப்பட்டதும், எதிர்க்கட்சித் தலைவரான இவர், முதலமைச்சராக இருந்தபோதுதான்.
  • நீட் தேர்வு அச்சத்தில், அனிதா உள்பட மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொண்டது உங்கள் ஆட்சியில்தான் என்று அதிமுகவை விமர்சித்து பேசினார் மு.க. ஸ்டாலின்.
  • இப்போது உயிரழந்த மாணவர் தனுஷ் இருமுறை நீட் தேர்வில் தோல்வி அடைந்ததும் நீங்கள், அதாவது, திரு. எடப்பாடி பழனிசாமி அவர்கள் முதலமைச்சராக இருந்தபோதுதான் என்றார் ஸ்டாலின்.
  • குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்ட நீட் மசோதாவை இந்த அவைக்குச் சொல்லாமல் மறைத்ததும் அ.தி.மு.க. ஆட்சிதான். அதாவது, எதிர்க் கட்சித் தலைவர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோதுதான் என்று எடப்பாடி பழனிசாமி மீது குற்றம்சாட்டினார் தமிழ்நாடு முதலமைச்சர்.
  • "ஒன்றிய அரசுடன் கூட்டணியாக இருந்தீர்கள். இப்போதும் இருக்கிறீர்கள். குடியுரிமை திருத்தச் சட்டம், மற்றும் வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு ஆதரவாக வாக்களிக்க நீட் தேர்விற்கு விலக்கு தர வேண்டுமென்று அ.தி.மு.க. நிபந்தனை விதித்து இருக்கலாம். அந்தத் தெம்பு, திராணி அ.தி.மு.க.-விற்கு இல்லை," என்று விமர்சித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.
  • அதைச் செய்திருந்தால், நீட் தேர்வுக்கு ஓரளவிற்கு விலக்கு கிடைத்திருக்கும். ஆனால் நீட் தேர்வால் மாணவச் செல்வங்கள் மடிந்தபோது மரண அமைதி காத்து, ஆட்சி நடத்தியதுதான் அ.தி.மு.க என்றார் ஸ்டாலின்.
  • நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுத்திருக்கிறோம். சட்ட மசோதாவை இன்று நான் அறிமுகப்படுத்தவிருக்கிறேன். ஆகவே, நீட் தேர்வை ரத்து செய்து, 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவக் கல்வியில் மாணவர்களை சேர்க்க இந்த அரசு அனைத்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பதை, எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் சொன்ன குற்றச்சாட்டிற்கு பதிலாக சொல்லி அமைகிறேன் என்று முடித்தார் மு.க.ஸ்டாலின்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரே நாளில் 28.36 லட்சம் பேருக்கு தடுப்பூசி: தமிழக அரசுக்கு ராமதாஸ் பாராட்டு!