கொரோனா வைரசின் புதிய திரிபை சிலர் 'டெல்டா பிளஸ்' என்று அழைக்கிறார்கள். அத்திரிபு வழக்கமான டெல்டா திரிபை விட எளிதாக பரவக்கூடியதாக இருக்கலாம் என பிரிட்டனைச் சேர்ந்த நிபுணர்கள் தற்போது கூறுகின்றனர்.
யூகே ஹெல்த் செக்யுரிட்டி ஏஜென்சி எனப்படும் சுகாதார பாதுகாப்பு அமைப்பு, இத்திரிபை 'ஆய்வில் உள்ள திரிபு' என வகைப்படுத்தியுள்ளது.
இந்த புதிய டெல்டா பிளஸ் திரிபு ஏற்கெனவே உள்ள திரிபுகளைவிட அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என் சொல்வதற்கு ஆதாரம் இதுவரை இல்லை.
தற்போது பயன்பாட்டில் இருக்கும் கொரோனா தடுப்பூசிகளே, இந்த திரிபுக்கு எதிராகவும் சிறப்பாக வேலை செய்யும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
பிரிட்டனில் ஏற்படும் கொரோனா தொற்றில் வழக்கமான டெல்டா திரிபால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. தற்போது டெல்டா பிளஸ் அல்லது AY.4.2 என்றழைக்கப்படும் இந்த திரிபால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்புகளில் ஆறு சதவீதம் பேர் இந்த திரிபால் பாதிக்கப்பட்டிருப்பதாக சமீப கால அதிகாரபூர்வ தரவுகள் கூறுகின்றன.
பிரிட்டனின் டெல்டா திரிபை விட, டெல்டா பிளஸ் திரிபின் பரவும் விகிதம் அதிகமாக இருப்பதாக சில ஆரம்பகட்ட ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, டெல்டா திரிபைப் போல, டெல்டா ப்ளஸ் திரிபு கவலைக்குரிய திரிபு வகைகளில் ஒன்றாக கருதப்படவில்லை. இது தான் கொரோனா திரிபுகளின் ஆபத்தை பொறுத்து வழங்கப்படும் படிநிலைகளில் உச்சபட்சமானது என்பது குறிப்பிடத்தக்கது.
உலக அளவில் பல கொரோனா திரிபுகள் உள்ளன. வைரஸ் பிறழ்வு எப்போதுமே வழக்கமாக நடக்கும் ஒன்று தான், எனவே புதிய திரிபைக் காண்பதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை.
AY.4.2 திரிபில் உள்ள சில புதிய பிறழ்வுகள் மனித உடலுக்குள் இருக்கும் செல்களை பாதிக்க வைரஸ் பயன்படுத்தப்படும் ஸ்பைக் புரதங்களை பாதிப்பதாக உள்ளன.
கொரோனா பெருந்தொற்று தொடங்கியதிலிருந்தே Y145H மற்றும் A222V பிறழ்வுகள் பல்வேறு கொரோனா துணைவரிசைகளில் காணப்பட்டன.
தற்போது இருக்கும் கொரோனா வைரசின் பல்வேறு திரிபுகளுக்கு எதிராக, புதிய கொரோனா தடுப்பூசி மேம்பாடு தொடர்பாக எந்த வித பரிந்துரைகளும் இல்லை.
"எல்லா கொரோனா திரிபுகளுக்கும் ஒரே மாதிரியான பொது சுகாதார அறிவுரைகள்தான் வழங்கப்படுகின்றன. யார் எல்லாம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதியானவர்களோ, அவர்கள் எல்லாம் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள், உங்களுக்கு எப்போது பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்ள அழைப்பு விடுக்கப்படுகிறதோ, அப்போது முன்வந்து பூஸ்டர் டோஸை செலுத்திக் கொள்ளுங்கள்" என பிரிட்டனின் சுகாதார பாதுகாப்பு முகமையின் மருத்துவர் ஜென்னி ஹாரிஸ் கூறியுள்ளார்.
"எப்போதும் எச்சரிக்கையோடு இருங்கள். மக்கள் நெருக்கமாக இருக்கும் இடங்களில் முகக்கவசம் அணிந்து கொள்ளுங்கள், மற்றவர்களை உள் அரங்குகளில் சந்திக்கும் போது காற்றோட்டத்துக்காக ஜன்னல் கதவுகளை திறந்துவிடுங்கள். கொரோனா அறிகுறிகள் இருந்தால் பிசிஆர் சோதனை செய்து கொள்ளுங்கள், நெகட்டிவ் என சோதனை முடிவு கிடைக்கும் வரை சுயமாக தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்" என்கிறார் ஜென்னி.