இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் நடைபெற்றுவரும் டெல்லி சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தற்போது வரை 60 இடங்களில் முன்னிலை வகித்து வரும் ஆம் ஆத்மி கட்சி, மீண்டும் அம்மாநிலத்தில் ஆட்சியமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவரும் மொத்தமுள்ள 70 சட்டமன்ற தொகுதிகளில், பாஜக 10 தொகுதிகளில் மட்டும் முன்னிலை பெற்றுள்ளது.
கடந்த 1999 முதல் 2014 வரை 15 ஆண்டுகள் டெல்லியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி எந்த இடத்திலும் முன்னிலை வகிக்கவில்லை.
டெல்லி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம்:
2015-இல் நடந்த கடந்த சட்டமன்ற தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி எந்த இடத்திலும் வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளையில் 1993-இல் நடந்த டெல்லி சட்டமன்ற தேர்தலில் வென்று ஆட்சியமைத்த பாஜகவால், அதன்பிறகு நடந்த 6 சட்டமன்ற தேர்தல்களில் (2020 உள்பட) வெல்லமுடியவில்லை.
மேலும் அண்மையில் நடைபெற்ற ஜார்கண்ட் சட்டமன்ற தேர்தலில் ஆட்சியில் இருந்த பாஜக தோல்வியுற்றது. அதேபோல் 2019 நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பிறகு நடந்த மஹாராஷ்ட்ரா மற்றும் ஹரியாணா மாநில சட்டமன்ற தேர்தல்களில் எதிர்பார்த்த அளவுக்கு பாஜகவால் வெல்லமுடியவில்லை.
இந்நிலையில், டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் குறித்தும், 2019 நாடாளுமன்ற தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற பாஜக, அதற்கு பிறகு நடந்த சட்டமன்ற தேர்தல்களில் வெல்ல முடியாதது குறித்தும் மூத்த பத்திரிகையாளர் டி. சுரேஷ்குமார் பிபிசி தமிழிடம் பேசினார்.
''நாடாளுமன்ற தேர்தல் மற்றும் மாநில சட்டமன்ற தேர்தல்களில் வெவ்வேறு காரணங்களுக்காக வெவ்வேறு கட்சிகள் அல்லது கூட்டணிகளுக்கு வாக்களிக்கும் பாணி நீண்ட காலமாக தமிழகத்தில் உள்ளது. அவ்வாறான பாணியை தற்போது வட மாநிலங்களில் உள்ள மக்கள் பின்பற்ற தொடங்கியிருப்பது தெரிகிறது'' என்று கூறினார்.
''தங்கள் இதுவரை காலூன்ற முடியாத திரிபுரா, காஷ்மீர் மற்றும் மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் பாஜக வென்றவுடன், அக்கட்சி இனி இந்தியாவில் வெல்ல முடியாத மாநிலமே இல்லை என்றார்கள். ஆனால் கர்நாடகாவை தவிர மற்ற தென் மாநிலங்களில் பாஜகவால் வெல்ல முடியவில்லை என்பதே உண்மை''.
''பாஜக வெல்லும் சமயங்களில் அது அமித் ஷாவின் சாணக்கியத்தனம் என்றும் அமித் ஷா மற்றும் பாஜவின் ராஜ தந்திரம் என்றும் அக்கட்சியின் ஆதரவாளர்கள் கொண்டாடுவார்கள். ஆனால் தற்போது அந்த சாணக்கியத்தனத்துக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை'' என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
தேர்தல் முடிவுகளில் CAA எதிரொலித்ததா?
''வளர்ச்சி என்ற ஒற்றை சொல்லை கோஷமாக்கியும், 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி மீது சுமத்தப்பட்ட பல ஊழல் குற்றசாட்டுக்களை பிரச்சாரத்தில் தீவிரமாக பயன்படுத்தியும் 2014-இல் தனிப்பெரும்பான்மை பெற்று பாஜக ஆட்சிக்கு வந்தது. பலமான எதிர்க்கட்சி கூட்டணி இல்லாதது மற்றும் நரேந்திர மோதிக்கு சவால்விடும் அளவில் பிரதமர் வேட்பாளரை ஒருமித்த குரலில் எதிர்க்கட்சிகள் முன்னிறுத்தாததும் பாஜக 2019-இல் மீண்டும் வெல்ல காரணமாக அமைந்தன'' என்று டி. சுரேஷ்குமார் நினைவுகூர்ந்தார்.
டெல்லி சட்டமன்ற தேர்தலில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக அங்கு தீவிரமாக நடந்த போராட்டங்கள் எதிரொலித்துள்ளதா என்று கேட்டதற்கு, ''டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக மிகவும் தீவிரமாக போராட்டங்கள் நடைபெற்றது உண்மைதான். தேர்தல் முடிவுகள் முழுவதும் வெளியான பிறகு, அவற்றை ஆராய்ந்தபிறகே இதன் தாக்கம் பற்றி நாம் தெளிவாக கூற முடியும். அதேவேளையில் இந்த போராட்டங்கள் தொடர்ந்து நடந்த ஷாஹின்பாத் உள்ளடங்கிய ஓக்லா சட்டமன்ற தொகுதியில் சிறிது நேரம் பாஜக முன்னிலை பெற்றது கவனத்தை பெற்றது'' என்று பதிலளித்தார்.
மேலும் அவர் கூறுகையில், ''அதேவேளையில் இங்கு 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி இராண்டாவது முறையாக ஒரு இடத்தில்கூட வெல்லமுடியவில்லை. அக்கட்சிக்கு இது நிச்சயம் மோசமான தோல்விதான்'' என்றார்.
''ஒட்டுமொத்தமாக பார்த்தால் டெல்லி தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு தோல்விதான் என்றாலும், எதிர்க்கட்சிகள் கற்க வேண்டிய பாடங்களும் இதில் உள்ளன''
''ஜார்கண்ட் மற்றும் டெல்லி சட்டமன்ற தேர்தல்களில் மாநில கட்சிகள் வெற்றி பெறலாம். ஆனால் அதேவேளையில் தேசிய அளவில் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மை தொடர்ந்தாலோ, வலுவான பிரதமர் வேட்பாளரை அவர்கள் முன்வைக்கவில்லையென்றாலோ, 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்துவது சிரமம் ஆகும்'' என்று அவர் கூறினார்.
''சில மாநில சட்டமன்ற தேர்தல்களில் பாஜக தோல்வியடைந்து வருவதை வைத்து பாஜகவுக்கு இறங்குமுகம் என்று முடிவெடுப்பது தற்போதைய நிலையில் சரியாக இருக்காது என்றே தோன்றுகிறது'' என்று குறிப்பிட்டார்.
2019 நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பிறகு நடந்த மஹாராஷ்டிரா, ஜார்க்கண்ட், டெல்லி உள்ளிட்ட மாநில சட்டமன்ற தேர்தல்களில் பாஜக எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாதது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அரசியல் விமர்சகர் மற்றும் எழுத்தாளர் ஆழி செந்தில்நாதன், ''2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு நடந்த மத்தியபிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் சட்டமன்ற தேர்தல்களில் கூட பாஜக தோல்வியடைந்தது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்'' என்றார்.
''சாதுர்ய பிரசாரத்தால் 2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வென்று இருக்கலாம். கடந்த பிப்ரவரியில் நடந்த புல்வாமா தாக்குதலுக்கு பிறகு பாஜக கையிலெடுத்த பாகிஸ்தான் கோஷம் வட மாநிலங்களில் எடுபட்டது நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளில் தெரிந்தது''
''ஆனால் சட்டமன்ற தேர்தல் களம் வேறு. தேர்தல் முன்னணி நிலவரங்களை பார்க்கும்போது பாஜக போராடி தோற்கவில்லை. ஆம் ஆத்மி கட்சி மீண்டும் தன்னை நிரூபித்துள்ளது தெளிவாக புரிகிறது'' என்று ஆழி செந்தில்நாதன் கூறினார்.
''அனைத்து மாநில மக்களும் வசிக்கும் நகராகவும், நிர்வாகம், அரசியல் போன்ற பல தளங்களின் மையமாகவும் விளங்கும் தலைநகரில் மீண்டும் பாஜக வெல்ல முடியாதது நிச்சயம் அந்த கட்சிக்கு ஒரு பெரும் பின்னடைவுதான். இந்தியாவின் பிம்பமாக கருதப்படும் டெல்லியில் மீண்டும் பாஜக தோல்வியடைந்தது அக்கட்சிக்கு ஏமாற்றமாகத்தான் இருக்கும்'' என்று அவர் குறிப்பிட்டார்.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீவிரமாக நடந்த போராட்டங்கள் தேர்தல் முடிவுகளில் எதிரொலித்துள்ளதா என்று கேட்டதற்கு, ''இந்த சட்டத்தை கொண்டு வந்ததன் மூலம் இந்து மற்றும் முஸ்லிம் சமூக மக்களை பிரித்து அதன் மூலம் தேர்தல் ஆதாயம் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருக்கலாம். ஆனால் பல வட மாநிலங்களில் கூட இந்த சட்டத்துக்கு கடுமையாக எதிர்ப்பு இருந்தது'' என்று கூறினார்.
''மேலும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஒரு குறிப்பிட்ட வகையான பிரசாரம் எடுபடாது. வளர்ச்சி, பாகிஸ்தான் கோஷங்கள் எல்லா நேரமும் வெற்றியை தராது'' என்று மேலும் கூறினார்.
''அதேவேளையில் எதிர்க்கட்சிகள் தேசிய அளவில் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே பாஜகவை நாடாளுமன்ற தேர்தலில் வீழ்த்த முடியும்'' என்று அவர் மேலும் தெரிவித்தார்.
டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு தோல்வி என்பதையும், சட்டமன்ற தேர்தல்களில் பாஜக சில தொடர் தோல்விகளை பெற்று வருகிறது என்றும் தெரிவித்த அரசியல் பார்வையாளர்கள், அதே வேளையில் தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் கடக்க வேண்டிய தூரம் அதிகம் உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.