Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எகிப்தின் சூயஸ் கால்வாயில் சிக்கிய கப்பலால் கச்சா எண்ணெய் விலையில் ஏற்றம் - என்ன நடக்கிறது?

எகிப்தின் சூயஸ் கால்வாயில் சிக்கிய கப்பலால் கச்சா எண்ணெய் விலையில் ஏற்றம் - என்ன நடக்கிறது?
, வெள்ளி, 26 மார்ச் 2021 (00:25 IST)
உலகின் பரபரப்பான வர்த்தகப் பாதைகளில் ஒன்றான எகிப்தின் சூயஸ் கால்வாயை, நான்கு கால்பந்து ஆடுகளங்களின் நீளம் கொண்ட ஒரு மாபெரும் கொள்கலன் கப்பல் அடைத்துள்ளது.
 
கடும் காற்றால் பாதை மாறிய இந்த 400 மீட்டர் நீளமுள்ள (1,312 அடி) கப்பல், மீட்புப் படகுகளுக்காகக் காத்திருக்கின்றன, இந்த கப்பலால் பத்துக்கும் மேற்பட்ட கப்பல்கள் சிக்கியுள்ளன.
 
தரைதட்டிய கப்பல் மீண்டும் நகரும் வரை போக்குவரத்தைத் திசைதிருப்ப, கால்வாயின் பழைய தடத்தை எகிப்து, மீண்டும் திறந்துள்ளது.
 
இந்தத் தடையால் சர்வதேச சந்தைகளில் எண்ணெய் விலைகள் ஏற்றம் அடைகின்றன.
 
உலகளாவிய வர்த்தகத்தில் சுமார் 12% சூயஸ் கால்வாய் வழியாகவே செல்கிறது, இது மத்தியதரைக் கடலைச் செங்கடலுடன் இணைக்கிறது மற்றும் ஆசியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான குறுகிய தூரமுள்ள கடல் வழியாகவும் உள்ளது.
 
பனாமாவில் பதிவுசெய்யப்பட்ட மற்றும் எவர்கிரீன் என்ற கப்பல் நிறுவனத்தால் இயக்கப்படும் எவர் கிவன் என்ற கப்பல், சீனாவிலிருந்து நெதர்லாந்தில் உள்ள துறைமுக நகரமான ரோட்டர்டாமிற்குப் புறப்பட்டு, மத்தியதரைக் கடலுக்குச் செல்லும் வழியில் கால்வாய் வழியாக வடக்கு நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
 
200,000 டன் எடையுள்ள இந்தக் கப்பல், 2018 ஆம் ஆண்டில் கட்டப்பட்டு, தைவானிய போக்குவரத்து நிறுவனமான எவர்க்ரீன் மரைனால் இயக்கப்படுகிறது. செவ்வாய்க்கிழமை உள்ளூர் நேரப்படி (05:40 GMT) சுமார் 07:40 மணிக்கு நீர்வழியின் குறுக்கே மாட்டிக்கொண்டது.
 
400 மீ நீளம் மற்றும் 59 மீ அகலத்திற்கு, இரு திசைகளிலிருந்தும் வந்து போகும் மற்ற கப்பல்களின் பாதையை இது தடுத்துள்ளது.
 
இந்தக் கொள்கலன் கப்பலை நிர்வகிக்கும் நிறுவனம், பெர்ன்ஹார்ட் ஷுல்ட் ஷிப் மேனேஜ்மென்ட் (பிஎஸ்எம்), கப்பல் ஏற்கனவே பகுதியாக மிதக்கவிடப்பட்டதாக வந்த செய்திகளை மறுத்துள்ளது.
 
ஒரு அறிக்கையில், "கப்பலைப் பாதுகாப்பாக மீண்டும் மிதக்க வைப்பதும், சூயஸ் கால்வாயில் கடல் போக்குவரத்தைப் பாதுகாப்பாக மீண்டும் தொடங்கச் செய்வதும் தான் தனது முன்னுரிமை" என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.
 
இதற்குப் பல நாட்களாகலாம் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
 
இந்த எவர் கிவன் கப்பலுக்கு வடக்கே 30 கப்பல்களும் தெற்கே 3 கப்பல்களும் முடங்கியுள்ளதாக உள்ளூர் ஆதாரங்களை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் கூறுகிறது.
 
"திடீரென வீசிய பலத்த காற்றால் பாதை மாறிப்போன இந்தக் கப்பல் துரதிர்ஷ்டவசமாகத் தரை தட்டியது என்று சந்தேகிக்கப்படுவதாக" எவர்க்ரீன் மரைன் நிறுவனம் கூறுகிறது.
 
தனது அனைத்து ஊழியர்களும் காயம் ஏதுமின்றிப் பாதுகாப்பாக இருப்பதாக, புதனன்று பிஎஸ்எம் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
 
எட்டு இழுபறிப் படகுகள் கப்பலை மிதக்க வைக்கப் பணியமர்த்தப்பட்டுள்ளன. தரை தட்டிய கரையோரத்தில் உள்ள மணலை அள்ளும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 
"இது போன்ற சம்பவங்கள் அரிதானவை, ஆனால் உலகளாவிய வர்த்தகத்தில் பெரும் மாற்றங்கள் ஏற்படக்கூடும்" என்று அமெரிக்காவின் வட கரோலினா மாநிலத்தைச் சேர்ந்த கடல் வரலாற்றாசிரியர் டாக்டர் சால் மெர்கோக்லியானோ பிபிசியிடம் தெரிவித்தார்.
 
கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சம் காரணமாக, சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை 4% உயர்ந்துள்ளது என்று ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
 
கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பொருட்களை ஏற்றிச் செல்லும் 20 க்கும் மேற்பட்ட எண்ணெய் டேங்கர்கள் இந்த நெரிசலில் பாதிக்கப்பட்டுள்ளதாக கெப்லர் எரிசக்தி புலனாய்வுச் சேவை அமைப்பு தெரிவித்துள்ளது.
 
பெர்முடா முக்கோணத்தில் மாயமான கப்பல்கள், விமானங்களுக்கு என்ன ஆனது? #MYTHBUSTER
72 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்ட அமெரிக்க போர் கப்பல்
சூயஸ் கால்வாயில் இதுவரை தரைதட்டிய மிகப்பெரிய கப்பல் இதுவாகும் என்றும் கரையோரமாகத் தரை தட்டியதால், மீண்டும் மிதக்கும் திறனை அது இழந்து விட்டிருக்கலாம் என்றும் அவர் கூறுகிறார். கப்பலை இயக்க முடியாத பட்சத்தில், அந்த அதிக அலைச் சூழலில் சரக்குகளை அகற்றும் பணியைத் தொடங்க வேண்டியிருக்கும் என்றும் அவர் தெரிவிக்கிறார்.
 
எவர் கிவனுக்கு நேர் பின்னால் சென்று கொண்டிருந்த மற்றொரு கப்பலில் தான் இருப்பதாகக் கூறும் ஜூலியானா கோனா, இன்ஸ்டாகிராமில், "எங்களுக்கு முன் சென்ற கப்பல் கால்வாய் வழியாகச் செல்லும்போது தரை தட்டியது. இப்போது குறுக்கில் மாட்டிகொண்டுள்ளது. நாங்கள் இன்னும் சிறிது காலம் இங்கேயே இருக்க நேரிடலாம் என்றே தெரிகிறது" என்று தெரிவித்துள்ளாஅர்.
 
20,000 இருபதடி கொள்கலன்களைக் கொண்டு செல்லும் திறன் இந்த கப்பலுக்கு உள்ளது என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
2020 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 19,000 கப்பல்கள் இக்கால்வாய் வழியாக சென்றன -சராசரியாக ஒரு நாளைக்கு 51.5 கப்பல்கள் என்று சூயஸ் கால்வாய் ஆணையம் குறிப்பிடுகிறது.
 
2017 ஆம் ஆண்டில், ஜப்பானிய கொள்கலன் கப்பல் இயந்திரக் கோளாறு காரணமாக இக்கால்வாயில் சிக்கியது. எகிப்திய அதிகாரிகள் இழுபறிப் படகுகளின் உதவியோடு சில மணி நேரங்களுக்குள் மீண்டும் அதை மிதக்க வைத்தனர்.
 
சூயஸ் கால்வாய்
சூயஸ் கால்வாய் மத்திய தரைக்கடல் மற்றும் செங்கடலுக்கு இடையிலான ஒரு பகுதியான சூயஸ் இஸ்த்மஸை எகிப்தில் கடக்கிறது. இந்தக் கால்வாய் 193 கி.மீ (120 மைல்) நீளம் கொண்டது மற்றும் மூன்று இயற்கை ஏரிகளை உள்ளடக்கியது.
 
2015 ஆம் ஆண்டில், எகிப்து அரசாங்கம் கால்வாயை விரிவாக்கம் செய்தது. இது பிரதான நீர்வழிப்பாதையை ஆழப்படுத்தியதுடன், அதற்கு இணையாக 35 கி.மீ (22 மைல்) தடத்தையும் கப்பல்களுக்கு வழங்கியது.
 
வணிகச் செய்தியாளர் தியோ லெக்கட் அவர்களின் ஆய்வு
 
சூயஸ் கால்வாய் என்பது உலக வர்த்தகத்தின் ரத்தக்குழாய் என்று கூறலாம். இது மத்தியதரைக் கடலைச் செங்கடலுடன் இணைக்கிறது, மேலும் ஆசியாவிற்கும் மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவிற்கும் இடையில் கப்பல்கள் செல்ல ஒரு வழியை வழங்குகிறது. முக்கிய மாற்றுப் பாதையான, ஆப்பிரிக்காவின் நன்னமிக்கை முனையைச் சுற்றியுள்ள பாதை நீண்ட பாதையாகும்.
 
சராசரியாக, ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 50 கப்பல்கள் இக்கால்வாயைக் கடந்து செல்கின்றன. சில நேரங்களில் இந்த எண்ணிக்கை மிக அதிகமாகவும் இருக்கலாம். இது உலக வர்த்தகத்தில் சுமார் 12% ஆகும். எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவிற்கான ஒரு மிக முக்கியமான வழியாக இது திகழ்கிறது. இதனால், மத்திய கிழக்கிலிருந்து ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி பெருமளவில் நடைபெறுகிறது.
 
இந்தப் பாதை முடங்கிப் போவதென்பது மிகவும் மோசமான நிலை. அது தான் இப்போது தரை தட்டிய எவர் கிவன் கப்பலால் நிகழ்ந்துள்ளது. இப்பாதை எவ்வளவு காலத்தில் சீர் செய்யப்படும் என்பது தான் இப்போது எழுந்துள்ள கேள்வி. காரணம், இப்பாதை அடைபட்டிருந்தால், கப்பல் வர்த்த்கர்களுக்குக் கடும் இழப்பை ஏற்படுத்தும். சரக்குகள் மற்றும் எரிபொருள் தேக்க நிலை ஏற்படும்.
 
இந்த சந்தர்ப்பத்தில், போக்குவரத்து மீண்டும் விரைவாகச் சீர் செய்யப்படும் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன, இந்நிலையில் எண்ணெய் விலை உயர்வு ஏற்பட்டாலும் பாதிப்பு மட்டுப்படுத்தப்படும்.
 
ஆனால் எவர் கிவன் போன்ற அதி-பெரிய, புதிய தலைமுறைக் கப்பல்கள் கால்வாயின் குறுகிய பாதைகளைக் கடந்து செல்லும்போது என்ன தவறு ஏற்படக்கூடும் என்பதை இந்தச் சம்பவம் காட்டுகிறது. கடந்த தசாப்தத்தின் நடுப்பகுதியில் ஒரு பெரிய நவீனமயமாக்கல் திட்டத்தின் ஒரு பகுதியாக அதன் பகுதிகள் சற்றே விரிவாக்கப்பட்டிருந்தாலும், இன்னும் இது போக்குவரத்துக்கு ஒரு சவாலாகவே உள்ளது. விபத்துகளும் ஏற்பட வாய்ப்புள்ளது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓட்டலில் தோசையைக் கிழித்த பாஜக வேட்பாளர் ...பிரபல நடிகை பாராட்டு