Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஐநா மனித உரிமை கவுன்சிலுக்கு தரும் அதிகாரங்கள் என்ன?

இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஐநா மனித உரிமை கவுன்சிலுக்கு தரும் அதிகாரங்கள் என்ன?
இலங்கையில் நடந்ததாகக் குற்றம் சாட்டப்படும் போர்க்குற்றங்கள் குறித்த ஆதாரங்களை சேகரிக்கவும் பாதுகாத்து வைக்கவும் ஐநா மனித உரிமைகள் கவுன்சில் தலைவர் மிஷேல் பாசிலெட்டுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசு மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் இடையே 26 ஆண்டுகள் நடைபெற்ற இந்த உள்நாட்டுப் போரில் 80 ஆயிரம் பேர் முதல் ஒரு லட்சம் பேர்  வரை உயிரிழந்ததாக ஐக்கிய நாடுகள் மன்றம் கருதுகிறது.
 
ஐநா மனித உரிமை மன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இலங்கை அரசு "பொறுப்புக்கூற வைக்கப்படுவதற்குத் தடையாக" இருப்பதாகக் குற்றம்சாட்டி  உள்ளது.
 
ஆனால் இந்தத் தீர்மானம் 'எந்த வகையிலும் உதவிகரமானதாக இல்லை' என்றும் 'பிரிவினையைத் தூண்டும்' வகையிலும் இருப்பதாகவும் இலங்கை அரசு  கூறுகிறது.
 
நேற்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சிலில் நிறைவேறிய தீர்மானம் போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக சந்தேகப்படும் நபர்கள் மீது வெளிநாடுகளிலும்  விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரியது.
 
இலங்கை அரசு, தமிழீழ விடுதலைப் புலிகள் ஆகிய இரு தரப்புமே உள்நாட்டுப் போர் நடந்த காலத்தில் கொடுமைகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.
 
"இலங்கையில் மனித உரிமைகள் கண்காணிக்கப்படுவது மற்றும் கடந்த காலங்களில் நடந்த குற்றங்களுக்கான பொறுப்பேற்க வேண்டியதை வலியுறுத்துவது  ஆகியவற்றைத் தொடர ஐநா மனித உரிமைகள் கவுன்சில் எடுத்துள்ள முடிவை நான் வரவேற்கிறேன். உண்மை மற்றும் நீதிக்கான தங்கள் பயணத்தில்  துணிச்சலுடனும் உறுதியாகவும் இருந்த இலங்கையின் அனைத்து சமூகங்களையும் சேர்ந்த பாதிக்கப்பட்டவர்களுக்கு நான் தலை வணங்குகிறேன்," என்று  செவ்வாய்க்கிழமை அன்று பிபிசியிடம் பேசிய மிஷேல் பாசிலெட் தெரிவித்தார்.
 
இலங்கை அரசு தற்போதைய கொள்கைகளிலிருந்து பாதை மாறி, சிறுபான்மையினர், மனித உரிமைகள், பாதுகாவலர்கள் மற்றும் ஊடகம் ஆகியவற்றுக்கான  முழுமையான பாதுகாப்பை உறுதி செய்யும் என்று தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
இறுதிப் போர் நடந்த காலகட்டத்தில் இலங்கையின் வடகிழக்குக் கடலோரப் பகுதியில் விடுதலைப் புலிகளை இலங்கை ராணுவம் முடக்கியது. அப்பகுதியில்  ஆயிரக் கணக்கான குடி மக்களை விடுதலைப் புலிகள் மனித கேடயங்களாக பயன்படுத்தி, உயிரிழப்புகளை அதிகப்படுத்தினார்கள் என்று இலங்கை அரசு கூறுகிறது.
 
தற்போதைய இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராகக் குற்றம் சாட்டப்படும் போர் குற்ற வழக்கு தொடர்புடைய வழக்கறிஞர் யாஸ்மின் சூகா இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது "பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது" என்று கூறியுள்ளார்.
 
உள்நாட்டில் நடவடிக்கைகள் தோல்வியடைந்துள்ளது என்பதையும், பாதிக்கபட்டவர்களுக்கு நீதி கிடைக்க எந்த நம்பிக்கையும் இல்லை என்பதையும் இந்தத்  தீர்மானம் உண்மையில் அங்கீகரிக்கிறது என்று ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் யாஸ்மின் தெரிவித்துள்ளார்.
 
இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கான முன்னெடுப்புகளை பிரிட்டன் மேற்கொண்டது. 22க்கு 11 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் இந்த தீர்மானம்  நிறைவேறியது.
 
சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் இந்தத் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தன. இலங்கையின் அண்டை நாடான இந்தியா உள்ளிட்ட 14 நாடுகள் இந்த  தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் பங்கெடுக்கவில்லை.
 
இலங்கையிலுள்ள பௌத்தர்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், சிங்களர்கள் அல்லது தமிழர்கள் என அனைத்து சமூகத்தினரின் மனித உரிமைகளை மேம்படுத்தும் நோக்கிலேயே இந்தத் தீர்மானத்தை தாங்கள் கொண்டு வருவதாக வாக்கெடுப்புக்கு முன்பு பிரிட்டன் தூதர் ஜூலியன் ப்ரையத்வெய்ட் தெரிவித்தார்.
 
இலங்கையில் நடந்த போர் குற்றங்கள் தொடர்பாக விசாரிக்க மிஷேல் பாசிலெட் அலுவலகத்துக்கு கூடுதல் பணியாளர்கள், அதிகாரங்கள் மற்றும் 2.8 மில்லியன்  அமெரிக்க டாலர் மதிப்புள்ள நிதி ஆகியவற்றை வழங்க இந்தத் தீர்மானத்தின் வெற்றி வழிவகை செய்துள்ளது.
 
ஆனால் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளைவிட எதிராக வாக்களித்த நாடுகள் மற்றும் வாக்களிக்காத நாடுகள் ஆகியவற்றின் எண்ணிக்கை அதிகமாக  இருப்பதால் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் எந்த அதிகாரமும் இல்லை என்று இலங்கை தலைநகர் கொழும்புவில் செய்தியாளர்களை சந்தித்த அந்த  நாட்டின் வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
 
"உலகின் தெற்குப் பகுதியில் ஆதிக்கம் செலுத்த விரும்பும் மேற்குலக சக்திகளின் ஆதரவு பெற்றுள்ள நாடுகளால் இந்த தீர்மானம் கொண்டுவரப்பட்டது," என்றும்  அவர் தெரிவித்தார்.
 
தேர்ந்தெடுக்கப்பட்ட குடிமை அரசின் நடவடிக்கைகள் ஆழமாகவும் வேகமாகவும் ராணுவ மயமாக்கப்படுவது, நீதித் துறையின் சுதந்திரம் குறைந்து வருவது, தமிழ் மற்றும் இஸ்லாமிய சிறுபான்மையினர் ஒதுக்கப்படும் நடவடிக்கைகள் அதிகரிப்பது உள்ளிட்ட மனித உரிமைகள் தொடர்பான சூழ்நிலை குறித்தும் ஐநா மனித  உரிமைகள் கவுன்சில் கவலை வெளியிட்டுள்ளது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடைய கட்டுங்கடா... ஓபிஎஸ் பேச்சை கேட்காமல் கலைந்த கூட்டம்!