Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கொரோனா வைரஸ் மருந்து ‘ரெம்டிசிவிர்’: விரைவில் இந்தியாவிலேயே உற்பத்தியாகும்

கொரோனா வைரஸ் மருந்து ‘ரெம்டிசிவிர்’: விரைவில் இந்தியாவிலேயே உற்பத்தியாகும்
, திங்கள், 15 ஜூன் 2020 (14:51 IST)
வைரஸ் கொல்லி மருந்தான 'ரெம்டிசிவிர்' விரைவில் இந்தியாவிலேயே உற்பத்தியாகும் என்று ஏ.என்.ஐ. செய்தி முகமை தெரிவிக்கிறது.

கோவிட்-19 நோயாளிகளுக்குப் பயன்படுத்தும் அளவுக்கு அதில் பாதுகாப்பு, ஆற்றல், நிலைத்தன்மை இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட, தீவிர பாதிப்புக்குள்ளான கொரோனா நோயாளிகளுக்கு அவசரநிலையில் கட்டுப்படுத்தப்பட்ட முறையில் இந்த மருந்தினை அளிக்கலாம் என்று இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அலுவலர் (டிரக் கண்ட்ரோலர் ஜெனரல் ஆஃப் இந்தியா) சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இந்த மருந்தினை இந்தியாவிலேயே தயாரிக்கவும், விற்கவும் அனுமதி கோரி நாட்டின் நான்கு பெரிய மருந்து கம்பெனிகள் அளித்த விண்ணப்பங்களையும் தலைமை மருந்து கட்டுப்பாட்டு அலுவலர் பரிசீலித்து வருகிறார்."
 
"இரவு பகலாக இந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படுகின்றன. அவற்றில் சில குறைபாடுகள் இருக்கின்றன. அது தொடர்பாக அந்த விண்ணப்பங்களை சமர்ப்பித்த நிறுவனங்கள் அறிக்கை அளிக்கின்றன. உற்பத்தியாகும் மருந்தின் மூலக்கூறு கலவை அரசு ஆய்வகத்தில் பரிசோதிக்கப்படும்.

"பாதுகாப்பு விதிமுறைகளுக்கு ஏற்ப இந்த மருந்து அமையும்போது, இந்தியாவில் உள்நாட்டிலேயே தயாரான ரெம்டிசிவிர் மருந்து கிடைக்கும். அது திறன், நிலைத்தன்மை, பாதுகாப்பு நிறைந்ததாக இருக்கும். கோவிட்-19 நோயாளிகளுக்கு அவசரகாலத் தேவைகளுக்கு கட்டுப்படுத்தப்பட்ட முறையில் இந்த மருந்து பயன்படுத்தப்படும்," என்று ஒரு மூத்த அரசு அலுவலர் கூறியதாக ஏ.என்.ஐ. செய்தி முகமை தெரிவிக்கிறது.

"ரெம்டிசிவிர் இன்னமும் பரிசோதனையில் இருக்கிற ஒரு மருந்து. நாட்டில் கோவிட்-19 நோய் தீவிரமாகப் பரவி வரும் நிலையில், இந்நோய் தாக்கியவர்களுக்கு அவசரகாலத் தேவைக்கு கட்டுப்படுத்தப்பட்ட முறையில் இந்த மருந்தினை அளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒப்புதல் படிவத்தை குறிப்பிட்ட முறையில் நோயாளி நிரப்பிய பிறகே மருத்துவர்கள் இந்த மருந்தினைப் பயன்படுத்த முடியும். இந்தியாவில் இந்த அளவுக்கு கட்டுப்பாடுகளோடு பயன்படுத்தப்படும் முதல் மருந்து இதுதான்," என்றும் அந்த அலுவலர் குறிப்பிட்டதாக ஏ.என்.ஐ. தெரிவிக்கிறது.
webdunia

இந்த மருந்து ஊசி மூலமாக ஐந்து முறை செலுத்தப்படும் என்று குறிப்பிட்ட அவர், ஆக்ஸிஜன் ஏற்பு விகிதம் 94க்கு கீழே சென்ற, சுவாச விகிதம் 24க்கு மேலே சென்ற தீவிர கோவிட்-19 நோயாளிகளுக்கு மட்டுமே இந்த மருந்தினை தரவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

வேறு சில நாடுகளில் ரெம்டிசிவிர் மருந்து 10 டோஸ் வரை தரப்படுவதாகத் தெரிவித்த அவர், இந்த மருந்து தரப்படும் ஒவ்வொரு நோயாளியிடமும் மருந்தின் பாதுகாப்பு, திறன் ஆகிய அம்சங்களை மருந்து கம்பெனி கண்காணிக்கவேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இப்படி கண்காணிப்பதுடன், இந்த மருந்தினால் ஏற்பட்ட நன்மை, நோயாளி மீண்டது ஆகியவை குறித்து அரசுக்கு அறிக்கை அளிக்கவேண்டும் என்றும் மருந்து கம்பெனிகள் அறிவுறுத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சீனாவில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய நபர்!