கொரோனா காரணமாக தனக்கு வேலை இல்லாத சூழ்நிலையிலும், கிடைக்கும் சொற்ப வருமானத்தை வைத்து பொது இடங்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார் புதுச்சேரியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவர்.
புதுச்சேரி மாநிலத்தில் வசித்து வரும் ஜோசப் மாற்றுத் திறனாளி ஆவார். இவர் சொந்தமாக அச்சு, ரப்பர் ஸ்டாம்ப் மற்றும் புத்தகம் பைண்டிங் செய்யும் தொழில் செய்து வருகிறார்.
சமூக அக்கறை கொண்ட இவர், இலவச மருத்துவ முகாம், தேர்தல் நேரங்களில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்துவது வழக்கம். மேலும், டெங்குகாய்ச்சல் தீவிரமாக இருந்தபோது,தனது சொந்த பணத்தில் கொசு மருந்து அடிக்கும் இயந்திரத்தை வாடகைக்கு வாங்கி, சாலையோரங்களில் உள்ள கால்வாய்களில் மருந்து தெளித்துள்ளார்.
இந்த நிலையில், கொரோனா தொற்று தீவிரமாகப் பரவி வரும் சூழலில், பொது மக்களின் நலன் கருதி மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் கிருமிநாசினி தெளித்து வருகிறார் ஜோசப்.
குறிப்பாக, கொரோனா ஊரடங்கில் எந்த வருமானமும் இல்லாத நேரத்தில், சிறிய வேலைகள் மூலமாகக் கிடைக்கும் பணத்தில் கிருமிநாசினி மருந்து வாங்கி, கொரோனா நோய்த் தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்.
தான் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பகுதியை சமூகப் பணிக்குப் பயன்படுத்துவதே தனது நோக்கம் என்று கூறும் ஜோசப், இந்த கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்ட காரணத்தினால், வருகின்ற சின்ன வேலைகளும் நின்றுவிட்டதாக வேதனைப்படுகிறார்.
"இருந்தபோதிலும், நண்பர்கள் சிலர் கொடுக்கும் பிரிண்டிங் வேலையினால் கிடைக்கும் சொற்ப வருமானத்தில், கிருமிநாசினி மருந்து வாங்கி சாலையோரம், காய்கறி அங்காடி, மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களாகக் கிருமி நாசினி தெளித்து வருகிறேன்.'' என்கிறார் ஜோசப்.
மேலும் அவர், ''இந்த கொரோனா நோய்த் தொற்று பரவி வருவதைப் பார்த்தபோது மிகவும் வேதனையாக இருந்தது. குறிப்பாக, டெங்குகாய்ச்சல் வந்த நேரங்களில் கொசுமருந்து அடிக்கும் இயந்திரத்தைத் தனியாக வாடகைக்கு எடுத்து மருந்து அடித்து வந்தேன். அப்போது மருந்து அடிக்கும் இயந்திரத்தை வாடகைக்கு எடுப்பதற்காகவே அதிகமாக வேலைகள் செய்வேன். ஆனால், தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாகச் சுத்தமாக வேலை இல்லாமல் கிருமிநாசினி அடிக்கும் இயந்திரத்தை வாடகை எடுப்பது சிரமமாக இருந்தது. ஆகவே, நான் சேமித்து வைத்திருந்த பணத்துடன், நண்பர்கள் சிலர் செய்த உதவியால் மருந்து அடிக்கும் இயந்திரத்தை வாங்கினேன்," என்கிறார்.
"எனக்கு உடன் பிறந்தவர்கள் மொத்தம் ஆறு பேர். ஆனால், நான் மட்டுமே எனது குடும்பத்தில் மாற்றுத்திறனாளி. மேலும், எனது உடன் பிறந்தவர்கள் அனைவருக்கும் திருமணம் நடைபெற்று அவரவர் குடும்பத்துடன் இருக்கின்றனர். எனக்கும் திருமண ஆசை இருந்தது. நான்கு முறை திருமணம் தொடர்பாக முயன்று கைகூடவில்லை. பின்னர் வயதும் ஆகிவிட்டது. ஆகவே திருமண செய்யும் எண்ணத்தைக் கைவிட்டு, தற்போது 75 வயதுடைய தாயாரைக் கவனித்துக்கொண்டு வாழ்கிறேன்'' என்கிறார் ஜோசப்
''நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு நாள் வேலை முடிந்து வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது, சாலையில் பார்வையற்ற மாற்றுத் திறனாளி என் கண்ணெதிரே கீழே விழுந்துவிட்டார். அதைப்பார்த்து மிகவும் வேதனைப்பட்டேன், அன்று அவருக்கு உணவு, உடை உள்ளிட்டவை வாங்கி கொடுத்து அவருடன் இருந்தேன். அந்த தருணம்தான் என்னை முழுவதுமாக மாற்றியது. அதிலிருந்து சமூகப்பணியில் ஈடுபடத் தொடங்கினேன்,"என கூறுகிறார் அவர்.
''மிகுந்த சிரமங்களுக்கு இடையே ஒவ்வொரு பணியும் செய்து வருகிறேன். என்னைப் போன்று மற்றவர்களும் மாற்றத்தை ஏற்படுத்த சமூக அக்கறையுடன் செயல்பட வேண்டும் என்பதே என்னுடைய ஆசை. நான் எதிர்பார்ப்பதும் அது ஒன்றுதான்'' என்று கூறுகிறார் ஜோசப்.