Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கொரோனா அலை உச்சம்: ஆக்சிஜன், படுக்கை பற்றாக்குறையால் கலகலக்கும் இந்திய மருத்துவமனைகள்

கொரோனா அலை உச்சம்: ஆக்சிஜன், படுக்கை பற்றாக்குறையால் கலகலக்கும் இந்திய மருத்துவமனைகள்
, சனி, 24 ஏப்ரல் 2021 (09:50 IST)
இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை அடித்துக் கொண்டிருக்கிறது. கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் இறப்பவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், மருத்துவமனையில் சிகிச்சைக்கான படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் விநியோகத்தின் மீது மிகக் கடுமையான அழுத்தம்  ஏற்பட்டிருக்கிறது.
 

கடந்த பல மணி நேரங்களாக உடல் நலமின்றி காத்துக் கிடக்கும் தங்களின் சொந்த பந்தங்களை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையளிக்குமாறு மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்திடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள் மக்கள்.
 
இறந்தவர்களை எரியூட்டும் தகன மையங்களோ பல்வேறு சடலங்களைச் சேர்த்து எரியூட்டிக் கொண்டிருக்கின்றன.
 
நேற்று (ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட்ட புள்ளிவிவரப்படி, முந்தைய 24 மணி நேரத்தில், இந்தியாவில் 3.32 லட்சம் பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 2,263 பேர் முந்தைய 24 மணி நேரத்தில் இறந்திருக்கிறார்கள். இதுவரை, ஒரே நாளில் உலக அளவில் எந்த ஒரு நாட்டிலும்  இத்தனை அதிகமாக கொரோனா வைரஸ் பரவியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஆக்சிஜன் நெருக்கடி
 
மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்கிறது,. தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் இடமில்லை என டெல்லியில் இருக்கும் முன்னணி மருத்துவமனைகளில் ஒன்றான சர் கங்கா ராம் மருத்துவமனை மருத்துவர் அதுல் கோகியா கூறினார்.
 
"எங்களிடம் அத்தனை அதிக ஆக்சிஜன் முனைகள் இல்லை. எத்தனை ஆக்சிஜன் முனைகள் இருக்கின்றனவோ அத்தனையிலும் நோயாளிகளுக்கு சிகிச்சை  வழங்கப்பட்டு வருகின்றன. நோயாளிகள் ஆக்சிஜன் சிலிண்டர்களை தாங்களாகவே வாங்கிக் கொண்டு வருகிறார்கள், சிலர் ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாமலும்  வருகிறார்கள். நாங்கள் அவர்களுக்கு உதவ விரும்புகிறோம். ஆனால் போதுமான படுக்கைகள் இல்லை போதுமான ஆக்சிஜன் முனைகள் இல்லை" என்கிறார்  மருத்துவர் அதுல்.
 
"எங்களின் அனைத்து தொலைபேசி எண்களும் அழைப்புகளால் திணறுகின்றன. மக்கள் தொடர்ந்து எங்கள் தொலைபேசி எண்களுக்கு அழைத்துக்  கொண்டிருக்கிறார்கள். மருத்துவமனைக்கு வெளியே அத்தனை பேர் காத்துக் கிடக்கிறார்கள். வெளியே ஆம்புலன்ஸ் வண்டிகள் நிறுத்தப்பட்டிருக்கின்றன,  நோயாளிகள்ள் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறுவதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இங்கு பிரச்சனை என்னவென்றால் அவர்களை  மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க இடமில்லை" என்கிறார் அதுல்.
 
"உடல் நலம் தேறிய நோயாளிகளை எத்தனை விரைவாக வீட்டுக்கு அனுப்ப முடியுமோ அத்தனை விரைவாக டிஸ்சார்ஜ் செய்ய முயற்சிக்கிறோம். ஆனால்  தற்போதைய நிலை வேறு விதமாக இருக்கிறது" என்கிறார் அம்மருத்துவர்.
 
இந்திய மாநிலங்களிலேயே மிக மோசமாக கொரோனாவால் பாதிக்கப் பட்டிருக்கும் மாநிலமான மகாராஷ்டிராவில் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவி வருகிறது. அம்மாநில தலைநகரான மும்பையில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் ஒரு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் ஏற்பட்ட தீ  விபத்தினால் 13 நோயாளிகள் இறந்துள்ளனர்.
 
இரண்டு நாட்களுக்கு முன்பு மகாராஷ்டிரா மாநிலத்தின் நாசிக்கில் உள்ள ஒரு மருத்துவமனையில், ஆக்சிஜன் குழாயில் ஏற்பட்ட கசிவினால், நோயாளிகளுக்கு  வென்டிலேட்டர் மூலம் வழங்கப்பட்டுக் கொண்டிருந்த ஆக்சிஜனில் தடை ஏற்பட்டு 24 கொரோனா நோயாளிகள் உயிரிழந்தனர்.
 
டெல்லி மற்றும் டெல்லியை சுற்றியுள்ள பகுதிகளில் 10 தனியார் மருத்துவமனைகளை நடத்தும் மேக்ஸ் ஹெல்த்கேர் மருத்துவமனைக் குழுமம், நேற்று (வெள்ளிக்கிழமை) காலை தங்களுக்கு உடனடியாக ஆக்சிஜன் விநியோகிக்க வேண்டுமென ட்விட்டர் மூலம் கோரிக்கை வைத்தது. தங்களின் இரண்டு  மருத்துவமனைகளில் ஒரு மணி நேரத்திற்கும் குறைவான ஆக்ஸிஜன் மட்டுமே கையிருப்பு உள்ளதாக குறிப்பிட்டிருந்தது. இந்த ட்விட்டர் பதிவுக்கு பிறகு  மருத்துவமனைக்கு தேவையான ஆக்சிஜன் வழங்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
 
குஜராத், உத்தரப் பிரதேசம், ஹரியாணா ஆகிய மூன்று மாநிலங்களும் இதே போன்ற நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றன. இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு ஆக்சிஜன் டேங்கர் லாரிகள் மற்றும் ஆக்சிஜன் விநியோகிக்க இந்திய விமானப்படை களத்தில் இறங்கியுள்ளது.
 
மருத்துவ பயன்பாட்டுக்கான ஆக்சிஜன் எப்படி தயாரிக்கப்படுகிறது?
 
காற்றை பல்வேறு வாயுக்களாகப் பிரிக்கும் செயல்முறை மூலம் ஆக்சிஜன் உட்பட பல வாயுக்கள் பிரிக்கப்படுகின்றன.
 
பிரித்து எடுக்கப்பட்ட ஆக்சிஜன் சுத்திகரிக்கப்பட்டு, குளிர்விக்கப்பட்டு திரவ நிலையில் சேமித்து வைக்கப்படுகின்றன.
 
அதன் பிறகு அந்த ஆக்சிஜனை தட்பவெட்ப நிலை பாதிக்கக் கூடாது என இன்சுலேட் செய்யப்பட்ட டேங்கர்களில் நிரப்பப்பட்டு, அது மருத்துவமனைகளுக்கு  விநியோகிக்கப்படுகிறது அல்லது சிலிண்டர்களில் நிரப்பப்பட்டு தனிநபர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.
 
திரவ நிலையில் இருக்கும் ஆக்சிஜனை மீண்டும் வாயு நிலைக்கு கொண்டுவர ஒரு வேப்பரைசர் பயன்படுத்தப்படுகிறது. மருத்துவ பயன்பாட்டுக்கான ஆக்சிஜன்  விநியோகிக்கப்படுவதற்கு முன் அது வாயு நிலைக்கு மாற்றப்படுகிறது.
 
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஏன் இத்தனை அதிகமாக இருக்கிறது?
 
பல்வேறு காரணங்களால் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இந்த இரண்டாவது அலையில் அதிகரித்திருக்கிறது. பல சுகாதார  விதிமுறைகள் கடைபிடிக்கப்படவில்லை. முகக் கவசம் அணிவது கட்டாயம் என்கிற விதியும் தொடர்ந்து உறுதிப்படுத்தப்படவில்லை.
 
பல பத்து லட்சம் மக்கள் கும்பமேளா திருவிழாவில் பங்கெடுத்தார்கள். பத்து நாட்களுக்கு முன் கும்பமேளா திருவிழா உச்சகட்டத்தை அடைந்தது. அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் கங்கை நதியில் நீராடினர். கொரோனாவின் புதிய திரிபுகள் பரவத் தொடங்கின. இரட்டைப் பிறழ்வு ஏற்பட்ட கொரோனா வைரஸ் திரிபு  பரவத் தொடங்கி இருக்கிறது.
 
1980-கள் மற்றும் 90-களில் இந்தி சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்த ஷ்ரவன் ராதோட், கும்பமேளா நடந்த ஹரித்வார் நகரத்திலிருந்து திரும்பி வந்த சில நாட்களிலேயே கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருக்கிறார். இதை அவரது குடும்பத்தினரும் உறுதிப்படுத்தி  இருக்கிறார்கள்.
 
இந்தியாவில் இரட்டை பிறழ்வு கொரோனா வைரஸ் திரிபைப் போலவே, பிரிட்டன் திரிபும் பஞ்சாப் மாநிலத்தில் அதிக அளவில் காணப்படுவதாக தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் இயக்குநர் சுஜித் குமார் சிங் உள்ளூர் பத்திரிகைகளிடம் தெரிவித்துள்ளார்.
 
பிரிட்டன் திரிபு மகாராஷ்டிரம் மற்றும் டெல்லியிலும் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
 
அவசர சிகிச்சை பிரிவு அறைகள் மற்றும் வார்டுகள் நிரம்பி வழிவதாக, கொல்கத்தாவில் தீவிர சிகிச்சை பிரிவு நிபுணராக பணியாற்றி வரும் மருத்துவர் சஷ்வதி  சின்ஹா கூறுகிறார்
 
"நோயாளிகள், தெரிந்தவர்கள், சுற்றத்தார் என பலரிடம் இருந்து நேரடியாக அழைப்புகள் வந்துகொண்டிருக்கின்றன: தங்கள் உறவினர்கள் மற்றும் தங்களுக்கு  நெருக்கமானவர்களை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்குமாறு கூறுகிறார்கள். துரதிர்ஷ்டவசமாக நாங்கள் எவ்வளவோ முயற்சித்தும் இன்னும் பல நோயாளிகளை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க முடியாமல் இருக்கிறோம்" என பிபிசியிடம் கூறினார் அவர்.
 
"தீவிர சிகிச்சை பிரிவில் 20 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன், இதுவரை இப்படி ஒரு சூழ்லை நான் கண்டதில்லை" என்கிறார் அம்மருத்துவர்.
 
நேற்று ஆக்சிஜன் உற்பத்தியாளர்கள் மற்றும் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநில முதல்வர்களை சந்தித்துப் பேசினார் இந்திய பிரதமர் நரேந்திர மோதி.
 
பதுக்கல் மற்றும் கள்ளச்சந்தை பிரச்சனைகளை தடுக்க மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என பிரதமர் மோதி கூறினார். மேலும் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் ஆக்சிஜன்களை, மருத்துவமனை பயன்பாடுகளுக்கு திருப்பிவிட அரசு ஆலோசித்து வருவதாகவும் கூறினார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விமானத்தில் கொண்டு செல்லப்படும் ஆக்ஸிஜன் டேங்கர்கள்! – கொரோனா யுத்தத்தில் விமானப்படை!