இத்தாலியில் ஓர் அரசு மருத்துவமனையில் கடந்த 15 ஆண்டுகளாக ஓர் ஊழியர் வேலைக்கு வரவில்லை என குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. ஆனால் அவருக்கு முழு சம்பளம் கொடுக்கப்பட்டு இருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டு இருக்கின்றன.
இத்தாலியின் கடன்சாரோ நகரத்தில், சியாசியோ அரசு மருத்துவமனையில் கடந்த 2005-ல் பணிக்கு அமர்த்தப்பட்டார் அந்த அரசு ஊழியர். 2005ம் ஆண்டு முதல் அவர் பணிக்கு செல்வதை நிறுத்திவிட்டார் என காவல் துறை கூறுகிறது.
அவர் பணிக்குச் செல்லாத போதும், கடந்த 15 ஆண்டுகளில் அவருக்கு சுமார் 5.38 லட்சம் யூரோ (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 4.8 கோடி ரூபாய்) சம்பளம் கொடுக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சியாசியோ அரசு மருத்துவமனையில் பணி புரிந்து வரும் ஆறு மேலாளர்களிடம், அந்த ஊழியர் வராமல் இருந்ததைக் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அதோடு பணிக்கு வராமல் சம்பளம் பெற்றுக் கொண்டிருந்தவரும், மோசடி, ஏமாற்றுதல் மற்றும் அலுவலகத்தை தவறாகப் பயன்படுத்தியது போன்ற குற்றங்களுக்காக விசாரிக்கப்பட்டு வருகிறார் என இத்தாலிய செய்தி முகமையான அன்சா கூறுகிறது.
வேலைக்கு வராமல் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தவர், தன் மீது ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்கக் கூடாது என தன் மேலாலரை மிரட்டியதாகவும், அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு இருக்கிறது என காவல் துறை கூறியுள்ளது.
தொடக்கத்தில் இருந்த மேலாளர் பணி ஓய்வு பெற்ற பின், அவர் பதவிக்கு அடுத்தடுத்து வந்தவர்களின் கவனத்துக்கோ, மனித வளத் துறையினர் கவனத்துக்கோ ஒரு நபர் வேலைக்கு வராமல் சம்பளம் வாங்கிக் கொண்டிருப்பது செல்லவில்லை என காவல் துறை கூறியுள்ளது.