கோவையில் அமைந்துள்ள தொழிற்சாலைகளில், வடமாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் வேலை செய்து வருகின்றனர். கொரோனா நோய்த்தொற்று பரவலை அடுத்து அமல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கு உத்தரவால் தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால், இங்கு பணிபுரிந்து வந்த வடமாநிலத் தொழிலாளர்களின் எதிர்காலம் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.
“முதல் ஊரடங்கு காலத்தை சமாளித்துவிட்டோம். ஆனால், மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள இரண்டாம் கட்ட ஊரடங்கும், அதற்கு பிறகான வாழ்க்கையும் எப்படி இருக்கப்போகிறது எனத் தெரியவில்லை” என்கிறார் அபிஜித். பிகார் மாநிலத்தைச் சேர்ந்த இவர் கோவையில் உள்ள காட்டூர் பகுதியில் உதிரி பாகங்கள் விற்பனைச் சந்தையில் கூலித்தொழிலாளியாக பணிபுரிந்து வருபவர்.
“எனது குடும்பத்தினர் அனைவரும் பிகாரில் உள்ளனர். வேலையின்மை மற்றும் வறுமை காரணமாக தமிழகத்திற்கு வந்து பல வேலைகள் செய்துள்ளேன். இரண்டு வருடங்களுக்கு முன் கோவைக்கு வந்து, உதிரி பாகங்கள் விற்பனைச் சந்தையில் வேலை செய்யத் துவங்கினேன். சனிக்கிழமைகளில் அந்த வாரத்திற்கான சம்பளம் கிடைக்கும். அதை வைத்துத்தான் எனது செலவுகளையும் சமாளித்து, குடும்பத்துக்கும் பணம் அனுப்புவேன். என்னைப் போலவே நூற்றுக்கும் மேற்பட்டோர் இங்கு வேலை செய்து வருகின்றனர். ஊரடங்கின் காரணமாக நாங்கள் அனைவரும் குடோன்களுக்குள் முடங்கிக்கிடக்கிறோம். கையில் இருந்த பணத்தை வைத்தும், தன்னார்வலர்கள் உதவியாக வழங்கிய பொருட்களை வைத்தும் அத்தியாவசிய உணவுத் தேவைகளை இதுவரை சமாளித்தோம். ஆனால். இப்போது எங்களிடம் அவசர தேவைக்குக் கூட பணமில்லை. அரசின் உதவியை மட்டுமே எதிர்பார்த்து காத்திருக்கிறோம்,” என்கிறார் இவர்.
“மே மாதத்தில் நிலைமை சரியானாலும், வேலை இல்லாமல் கழித்த பல வாரங்களுக்கான வருவாய் இழப்பு, எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் கடுமையான பொருளாதார நெருக்கடியை உருவாக்கியுள்ளது. இனிமேல், சந்தையில் என்னைப் போன்ற கூலித் தொழிலாளர்களுக்கு வேலை இருக்காது என்கின்றனர் கடைகளின் உரிமையாளர்கள். ஊரடங்கிற்கு பிறகான எனது எதிர்கால வாழ்க்கை எப்படி இருக்கப் போகிறது எனத் தெரியவில்லை. வாழ்வாதாரத்தை பெறுவதே கடும் சவாலாக இருக்கப்போகிறது என்பது உறுதி.” என்கிறார் அபிஜித்.
கட்டடத் தொழிலாளியான ரமேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர், அரசு வழங்கும் பொதுவிநியோக திட்டப்பொருட்களை மட்டுமே நம்பி வாழ்ந்து வருவதாக தெரிவிக்கின்றனர்.
“நான் தினக்கூலியாக கட்டட வேலைக்கு சென்று வருபவன். எனது மனைவி மற்றும் மகள்கள் என குடும்பத்தினர் அனைவரும், நான் வேலை முடித்து வாங்கி வரும் தினக்கூலியை வைத்துத்தான் வாழ்ந்து வந்தோம். ஊரடங்கு உத்தரவால் கட்டட வேலை நிறுத்தபட்டது. இதனால், பல நாட்களாக சம்பளமில்லை.
அரசு வழங்கும் ரேசன் அரிசியை வைத்து உயிர் வாழ்ந்து வருகிறோம். ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்ற செய்தியை கேட்டதும், மனதில் இருந்த நம்பிக்கையே போய்விட்டது.
ஏற்கனேவே, மருத்துவ செலவுகளுக்காக வாங்கிய கடன்களுக்கான வட்டி நெருக்கி வருகிறது. தற்போது, எந்த வருமானமும் இல்லை. இன்னும் சில வாரங்களுக்கு இதே நிலைமைதான் என்பது எதிர்காலம் குறித்த பயத்தை உருவாக்கியுள்ளது. அரசு வழங்கும் பணம், உணவுப் பொருட்கள் ஆகியவை தடைபட்டால் நிலைமை இன்னும் மோசமாகிவிடும்,” என வருத்தத்தோடு தெரிவிக்கிறார் ரமேஷ்.
கோவை சுந்தராபுரத்தை அடுத்துள்ள கோண்டி நகர் பகுதியில் சுமார் 300 குடும்பங்கள் உள்ளன. இவர்கள் அனைவரும் இரண்டு தலைமுறைகளுக்கு முன்னர் நாடோடிகளாக கோவைக்கு வந்து தங்கியவர்கள். கொரோனா நோய்த்தொற்று அச்சமும், ஊரடங்கும், நலிவடைந்த இவர்களின் வாழ்க்கையை மேலும் பாதித்துள்ளதாக கூறுகின்றனர்.
“பல ஆண்டுகளுக்கு முன்பு பிகார், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த எங்களது முன்னோர்கள் நாடோடியாக பயணம் செய்து கோவை வந்தவர்கள். அவர்களுக்கு அடுத்த தலைமுறையினர் வாழ்வாதாரத்திற்காக இந்த பகுதியிலேயே குடிசை அமைத்து தங்கி, மண்பாண்டங்கள் தயாரிப்பது, சாலைகளில் பொம்மை விற்பனை செய்வது, மூலிகை வேர்களை வைத்து மருந்து தயாரிப்பது போன்ற பணிகளை செய்து வந்தனர்.
அவர்களைத் தொடர்ந்து நாங்களும் அந்த பணிகளை செய்து வருகிறோம். போதிய வருமானம் கிடைக்காததால் பலர் கட்டட வேலை, துணிகளுக்கு சாயம் பூசுவது, மதுபானக்கடைகளில் சுத்தம் செய்யும் வேலை போன்ற தினக்கூலி வேலைக்கு சென்றுவிட்டனர். தற்போது, ஊரடங்கு காரணமாக யாரும் வேலைக்குச் செல்லவில்லை.
இதனால், தினமும் கிடைக்கும் சொற்ப வருமானமும் இல்லாமல் போனது. தினமும், மாநகராட்சி நிர்வாகத்தினர் மற்றும் தன்னார்வலர்கள் எங்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர். பொதுவிநியோக திட்டத்தில் அரசு வழங்கும் உணவு பொருட்கள் கிடைத்தால் கூட அடுத்து வரும் நாட்களை சமாளிக்க முடியும். ஆனால், எங்களில் பெரும்பாலானோருக்கு ரேசன் அட்டையே இல்லை.” என்கிறார் கோண்டி நகரில் வசிக்கும் கூலித்தொழிலாளி ரஞ்சித்.
"மேலும், ஏற்கனேவே, இந்த பகுதியில் சுகாதார வசதிகளில் குறைபாடுகள் உள்ளது. 100க்கும் மேற்பட்ட பெண்கள் வசிக்கும் எங்கள் பகுதியில் பொதுக்கழிப்பறை வசதியில்லை.
தனி மனித இடைவெளிக்கு இங்கு வாய்ப்பேயில்லை. நெருங்கிப் படுத்தால்தான் குடும்பத்தினர் அனைவரும் குடிசைகளுக்குள் தூங்கமுடியும். இங்கு ஒருவருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டாலும், பாதிப்புகள் மிக அதிகமாக இருக்கும்." என கூறுகிறார் இவர்.
இரண்டு வயது குழந்தை மற்றும் குடும்பத்தினரோடு கோவையில் வசித்து வரும் பஞ்சாலை தொழிலாளியான கீதாசிங், மீண்டும் பிகார் மாநிலத்தில் உள்ள தனது சொந்த கிராமத்திற்கே செல்ல முடிவு செய்திருப்பதாக தெரிவிக்கிறார்.
"நானும், எனது கணவரும் பஞ்சாலையில் பணி புரிந்து வருகிறோம். ஊரடங்கு அமலில் உள்ளதால் பஞ்சாலை மூடபட்டுள்ளது. கடந்த சில மாதங்களாகவே, ஆட்குறைப்பு, சம்பளக்குறைப்பு ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்த நிலையில் ஊரடங்கிற்கு பின்னர், பஞ்சாலை இயங்கத் துவங்கியதும் பலரை வேலையில் இருந்து நீக்கிவிடுவார்கள் என்ற நிலை உள்ளது.
வேறு எந்த வேலைக்கு செல்வது என தெரியவில்லை. ஒருவேளை, வேலை கிடைத்தாலும் சம்பளம் கண்டிப்பாக குறைவாகத்தான் வழங்கப்படும். கடினமாக உழைத்து பணம் சேமித்து, தொழிற்கடன் பெற்று சொந்தமாக எதாவது தொழில் தொடங்கலாம் என திட்டமிட்டிருந்தோம். கொரோனா தாக்கம் மற்றும் ஊரடங்கால் மீண்டும் நாங்கள் வேலை தேடி அலையவேண்டிய நிலை உருவாக அதிக வாய்ப்புள்ளது.
மேலும், ஊரடங்கு காலத்தில் தனித்து வாழ்வது கடினமாக உள்ளது. அருகில் சொந்த ஊரைச் சேர்ந்தவர்கள் அல்லது உறவினர்கள் இருந்தால்கூட ஆறுதலாக இருக்கும். இங்கு எங்களுக்கு எது நடந்தாலும் வெகுதூரத்தில் இருக்கும் சொந்தங்களுக்கு தெரியப்போவதில்லை. எனவே, தகுந்த வேலையும், பாதுகாப்பும் கிடைக்காவிட்டால் மீண்டும் பிகார் மாநிலத்திற்கே சென்றுவிடலாம் என முடிவு செய்துள்ளோம்" என கவலையுடன் தெரிவிக்கிறார் கீதாசிங்.