மார்ச் 26ஆம் தேதிவரை தெற்காசிய பிராந்தியத்தில் 2,081 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நோய்த்தொற்று ஏற்பட்டவர்களில் 92 சதவீதத்தினர் இந்தியா மற்றும் பாகிஸ்தானை சேர்ந்தவர்களாவர்.
தெற்காசிய பிராந்தியத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் உள்ள நாடாக பாகிஸ்தான் உள்ளது. ஆனால், கொரோனா வைரஸ் பரவல் தொடங்கியதில் இருந்து இதே நிலைமை இல்லை. அதாவது, இந்தியாவில் முதல் கொரோனா வைரஸ் தொற்று கடந்த ஜனவரி 30ஆம் தேதி உறுதி செய்யப்பட்ட நிலையில், அதற்கு 26 நாட்களுக்கு பிறகுதான் பாகிஸ்தானில் முதல் தொற்று கண்டறியப்பட்டது.
பிப்ரவரி 26ஆம் தேதி நிலவரப்படி, தெற்காசிய நாடுகளான இந்தியாவில் மூன்று பேருக்கும், பாகிஸ்தானில் இருவருக்கும், இலங்கையில் ஒருவருக்கும், நேபாளத்தில் ஒருவருக்கும் கோவிட்-19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தது. எனினும், அப்போது வங்கதேசத்தில் ஒருவருக்கு கூட நோய்த்தொற்று உறுதிசெய்யப்படவில்லை.
தரவு: ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம்
இருப்பினும், பிப்ரவரி 26ஆம் தேதிக்கு பிறகு இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேகமாக உயர ஆரம்பித்தது. அடுத்த ஒரே வாரத்தில் இந்தியாவில் 28 பேருக்கும், பாகிஸ்தானில் 5, நேபாளம் மற்றும் இலங்கையில் தலா ஒருவருக்கும் கோவிட்-19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தது.
மார்ச் 11ஆம் தேதி வரையிலான அடுத்த ஒரு வாரத்தில், இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை முந்தைய எண்ணிக்கையை விட 100 சதவீதத்துக்கும் மேலாக அதிகரித்து 62ஆக உயர்ந்தது. அதே காலகட்டத்தில் பாகிஸ்தானில் நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை ஐந்திலிருந்து 19ஆக அதிகரித்தது. இது 400 சதவீத உயர்வு.
அதற்கடுத்த மூன்று நாட்களிலேயே (மார்ச் 14) இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 100ஐ தாண்டியது. அப்போது, இந்தியாவில் 102, பாகிஸ்தானில் 31, இலங்கையில் 10, வங்கதேசத்தில் 3, நேபாளத்தில் ஒரு கோவிட்-19 தொற்று பதிவாகி இருந்தது.
பாகிஸ்தானில் அதிவேகத்தில் உயரும் கோவிட்-19 தொற்று
மார்ச் 16ஆம் தேதி ஒரே நாளில் மற்ற அனைத்து தெற்காசிய நாடுகளை விட அதிக கோவிட்-19 நோய்த்தொற்றுகளை பதிவு செய்தது பாகிஸ்தான். அதாவது மார்ச் 15ஆம் தேதிவரை 53ஆக இருந்த நோய்த்தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை அடுத்த நாளே 136ஆக பாகிஸ்தானில் அதிகரித்தது. மார்ச் 15 முதல் 26 வரையிலான காலகட்டத்தில் இலங்கையிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100ஐ தாண்டியது.
இதன் மூலம், தெற்காசிய பிராந்தியத்தில் கோவிட்-19 தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களை கொண்ட நாடாக பாகிஸ்தான் இன்று வரை அதே நிலையிலேயே தொடர்கிறது.
எந்த தெற்காசிய நாடு அதிக பரிசோதனைகளை மேற்கொள்கிறது?
மார்ச் 20ஆம் தேதி நிலவரப்படி, பாகிஸ்தானில் 1,900க்கும் அதிகமானோருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 478 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. சுருக்கமாக சொல்லப்போனால், பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா என்று பரிசோதிக்கப்பட்ட 10இல் இருவருக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டது.
அதே காலகட்டத்தில், இந்தியாவில் 14,000 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறிய பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறையின் தரவு கூறுகிறது. பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் விகிதமானது பாகிஸ்தானை விட இந்தியாவில் குறைவாகவே இருந்தது.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தினந்தோறும் உலக சுகாதார அமைப்பு நடத்தி வரும் செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசி வரும் அதன் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதனோம், உலக நாடுகளிடம், "பரிசோதனை செய்யுங்கள், பரிசோதனை செய்யுங்கள், பரிசோதனை செய்யுங்கள்" என்று வலியுறுத்தி இருந்தார். இருப்பினும், உலகின் மற்ற பிராந்தியங்களுடன் ஒப்பிடுகையில், தெற்காசிய நாடுகள் மிகவும் குறைந்த அளவிலேயே கோவிட்-19 பெருந்தொற்று குறித்த பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றன.
மார்ச் 20ஆம் தேதி நிலவரப்படி, உலகிலேயே அதிகபட்சமாக தென் கொரியாவில் மூன்று லட்சம் பேருக்கும், அடுத்ததாக இத்தாலியில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா என்பதை கண்டறிய பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா முதலிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஒட்டுமொத்த தெற்காசிய பிராந்தியத்திலும் மிகவும் குறைந்த அளவிலேயே கோவிட்-19 நோய்த்தொற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தெற்காசிய நாடுகளை பொறுத்தவரை, பரிசோதனை மேற்கொள்வதற்கு தேவையான கருவிகளின் தட்டுப்பாடு, போதிய மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் இடங்கள் இல்லாதது போன்றவை முட்டுக்கட்டைக்கு முக்கியான காரணங்களாக உள்ளன.