Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குழந்தைகளை தாக்கும் கொரோனா திரிபு: சிங்கப்பூரில் பள்ளிகள் மூடல் - மக்கள் கருத்து

குழந்தைகளை தாக்கும் கொரோனா திரிபு: சிங்கப்பூரில் பள்ளிகள் மூடல் - மக்கள் கருத்து
, வெள்ளி, 21 மே 2021 (23:27 IST)
இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட பி1617 கொரோனா வைரஸ் திரிபால் சிங்கப்பூரில் சிலர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அத்தகைய கொரோனா திரிபுகள் குழந்தைகளை அதிகளவில் தாக்கும் வாய்ப்புள்ளதாகவும் அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது.
 
அண்மைய சில தினங்களாக சிங்கப்பூரில் சமூக அளவில் கோவிட்-19 தொற்று பரவுவது சற்று கூடியுள்ளதையடுத்து, அதைத் தடுக்கும் விதமாகக் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டன.
 
இந்நிலையில், சிங்கப்பூரில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இளைஞர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை விரைவுபடுத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
அனைத்து ஆரம்ப, உயர்நிலை, ஜூனியர் கல்லூரிகள் மே 19 முதல் மே 28ஆம் தேதி வரை மூடப்படும் என அந்நாட்டுக் கல்வி அமைச்சு அறிவித்தள்ளது.
 
வைரஸ் திரிபால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளிடம் லேசான அறிகுறிகள் மட்டுமே தென்படுவதாகவும், யாருக்கும் கவலைப்படத்தக்க பாதிப்புகள் இல்லை என்றும் சிங்கப்பூர் கல்வி அமைச்சர் சான் சுன் சிங் (Chan Chun Sing), தெரிவித்துள்ளார்.
 
கடந்த ஞாயிற்றுக்கிழமை சிங்கப்பூரில் உள்ளூர் தொற்றின் மூலமாக 38 பேர் பாதிக்கப்பட்டனர். கடந்த ஓராண்டில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் அல்லாமல், ஒரே நாளில் பதிவான அதிகமான சமூகத் தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை இதுவாகும்.
 
இவற்றுள் 18 நோய்த்தொற்றுச் சம்பவங்களுக்கான காரணம் தெரியவில்லை. மேலும் கடந்த வாரம் 10 குழந்தைகளுக்கு கிருமித்தொற்று கண்டறியப்பட்டதாகவும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
ஞாயிற்றுக்கிழமை பாதிக்கப்பட்ட 38 பேரில் நான்கு குழந்தைகளும் அடங்குவர். இந்தத் தொற்றுத் திரள் (கிளஸ்டர்) டியூஷன் மையம் ஒன்றில் இருந்து உருவாகி உள்ளது.
 
இதே வேளையில், சிங்கப்பூரில் உருமாறிய கோவிட்-19 கிருமி வகை உருவாகியிருப்பதாக இணையத்தில் வலம் வரும் செய்தியை அந்நாட்டு அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
 
B1617 வகை கொரோனா திரிபுதான் குழந்தைகளை அதிக அளவில் தாக்குவதாக கருதப்படுகிறது என்று சிங்கப்பூர் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
 
இதையடுத்து மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
மே 19ஆம் தேதி முதல் மே 28ஆம் தேதி வரை சிங்கப்பூரில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் வீட்டில் இருந்தபடியே கற்றல், கற்பித்தல் நடைமுறையைப் பின்பற்ற உள்ளன.
 
"மாணவர்கள் வீடுகளுக்கு வெளியே முடிந்த அளவு தங்களது நடவடிக்கைகளை குறைத்துக்கொள்ள வேண்டும் என்பதே இந்தக் கற்றல் நடவடிக்கையின் நோக்கம்," என்று சிங்கப்பூர் கல்வி அமைச்சர் தெளிவுபடுத்தி உள்ளார்.
 
கருப்பு பூஞ்சை தொற்றால் தூத்துக்குடி மருத்துவமனையில் ஒருவர் பலி? மருத்துவர்கள் சொல்வது என்ன?
 
செங்கல்பட்டு தடுப்பூசி வளாக சர்ச்சை: தடங்கலை தகர்க்குமா தமிழக அரசு?
வீட்டில் இருந்தபடி கற்றல் நடவடிக்கையில் மாணவர்களை ஈடுபடுத்தும் நடைமுறை தொடங்குவதற்கு முன்பே சில மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சிங்கப்பூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதையடுத்து அங்குள்ள 7 தொடக்கப் பள்ளிகள் அறிவிக்கப்பட்ட தேதிக்கு முன்பாகவே புதிய கற்றல் நடைமுறையை பின்பற்றத் தொடங்கிவிட்டன.
 
இதற்கிடையே சிங்கப்பூரில் 12 முதல் 15 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த அந்நாட்டின் சுகாதார அமைச்சு ஒப்புதல் அளித்துள்ளது.
 
இது தொடர்பாக சிங்கப்பூர்வாழ் தமிழ் மக்கள் வெளிப்படுத்தியுள்ள கருத்துகள்:
 
முளையிலேயே கிள்ளி எறிவது நல்லது
 
சிங்கப்பூர் அரசாங்கம் தொற்றுப்பரவலைத் தடுப்பதற்கு அனைத்துவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது என்றும் முளையிலேயே கிள்ளி எறிவது போன்று இங்குள்ள அரசாங்கம் செயல்படுவது வரவேற்கத் தகுந்தது என்றும் சொல்கிறார் என்கிறார் சிங்கப்பூரில் வசிக்கும் பனசை நடராஜன்.
 
"கிருமி என்றாலும் தொற்று என்றாலும் இயல்பாகவே ஒரு பயம் இருக்கவே செய்யும். ஆனால் சிங்கப்பூரைப் பொறுத்தவரை அரசாங்கம் சொல்வதைக் கேட்டு நடந்தால், அனைத்து கட்டுப்பாடுகளையும் பின்பற்றினால் அச்சம் கொள்ளத் தேவையில்லை," என்கிறார் பனசை நடராஜன்.
 
விழிப்புடன் இருப்பதைக் காட்டுகிறது
 
கொரோனா இரண்டாவது அலை எல்லோரிடத்திலும் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தி இருப்பதை அறிய முடிகிறது என்கிறார் கவிஞர் இன்பா.
 
சிங்கப்பூரில் உள்ள அனைவருக்கும் விரைவில் முதல் கட்ட தடுப்பூசி போட்டுவிட வேண்டும் என்ற இலக்குடன் அரசாங்கம் செயல்படுகிறது.
 
மக்களின் பாதுகாப்புக்காக அரசு தீவிரமாகச் செயல்படுகிறது. இது அரசாங்கம் விழிப்புடன் இருப்பதைக் காட்டுகிறது.
 
பாராட்ட வேண்டும்
"வந்த பின் வருந்துவதை விட 'வரும் முன் காப்போம்' என்று சிங்கப்பூர் அரசு விழிப்புடன் செயல்படுவதை பாராட்ட வேண்டும் என்கிறார் ஆசிரியை சண்முகப் பிரியா.
 
கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகளை இணையம் வழி செயல்படுத்துவது சிறந்தது என தாம் நினைப்பதாகவும், அதே சமயம் தொழில்நுட்ப வசதிகள் கை கொடுத்தாலும் குழந்தைகள் இணையத்தில் படிப்பதை சலிப்பாகவே கருதுகின்றனர் என்றும் இவர் சுட்டிக்காட்டுகிறார்.
 
"பள்ளிகளை மூடியது குழந்தைகளின் அன்றாட பள்ளி நடவடிக்கைகளை மிகவும் பாதித்துள்ளது. ஆனால் இப்போதுள்ள சூழ்நிலைக்கு இத்தகைய நடவடிக்கைதான் தேவை என நினைக்கிறன்.
 
"குழந்தைகளின் பாதுகாப்பு அவசியம். உருமாறிய கொரோனா வயது வித்தியாசம் இன்றி சிறு குழந்தைகள் முதல் வளர்ந்த பிள்ளைகள் வரை அனைவரையும் தாக்குகிறது. அவர்கள் மூலம் தொற்று பரவுகிறது. இதை தடுக்கவே பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
 
"எனினும், நண்பர்களுடன் பேசுவது, குழுக்களாக படிப்பதையே அவர்கள் விரும்புகிறார்கள். முடிந்தவரை பெற்றோர்களும் ஆசிரியர்களும் குழந்தைகளுக்கு மகிழ்ச்சியான சூழலை ஏற்படுத்தவே விரும்புகிறோம். மேலும், இணையம் வழி கற்பதன் மூலம் உருமாறிய கொரோன குழந்தைகளிடையே அதிகமாக பரவுவதை தடுக்கலாம்," என்கிறார் ஆசிரியை சண்முகப் பிரியா.
 
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது
ஜெகன்
உலகம் முழுவதும் கொரோனா திரிபுகளால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவரும் நிலையில், சிங்கப்பூரில் தாம் பாதுகாப்பாக இருப்பதாகச் சொல்கிறார் ஜெகன்.
 
"மற்ற நாடுகளைப் போல் சிங்கப்பூர் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக இங்குள்ள அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
 
கொரோனா வைரஸ் மற்றும் அதன் திரிபுகள் குறித்தெல்லாம் உரிய விவரங்களை சேகரித்து சிங்கப்பூர் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதனால்தான் நாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக மனதார உணர முடிகிறது.
 
பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், மீண்டும் எப்போது இயங்கும் என்று அரசாங்கம் அறிவிக்கும் பட்சத்தில் என் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவேன்," என்கிறார் ஜெகன்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நோயாளிகளுக்கு இலவச உணவு பொட்டலங்கள்....