Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவை சரக டி.ஐ.ஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை - என்ன நடந்தது?

Webdunia
வெள்ளி, 7 ஜூலை 2023 (11:18 IST)
கோவை சரக காவல்துறை டி.ஐ.ஜியாக பணியாற்றி வந்த விஜயகுமார் இன்று அதிகாலை தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கோவை மாநகர் பந்தய சாலையில் காவல்துறை மேற்கு மண்டல முகாம் அலுவலகம் உள்ளது. இன்று அதிகாலை அங்கு பணியிலிருந்த விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
 
அவரின் உடல் தற்போது பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. காவல்துறை உயர் அதிகாரிகள் தற்கொலைக்கான காரணம் குறித்து முதல்கட்ட விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
 
டி.ஐ.ஜி விஜயகுமார் கடந்த 2009ம் ஆண்டு ஐ.பி.எஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று காவல்துறை பணியில் இணைந்தார். இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றியுள்ளார்.
 
அதன் பின்னர் சென்னையில் அண்ணா நகர் துணை காவல் ஆணையராக பணியாற்றி வந்தார். அதன் பின்னை டி.ஐ.ஜியாக பதவி உயர்வு பெற்று கடந்த ஜனவரி மாதம் 6 ஆம் தேதி கோவை சரக டி.ஐ.ஜி-யாக பொறுப்பேற்றுக் கொண்டார். கடந்த ஆறு மாதங்களாக கோவை சரக டி.ஐ.ஜியாக பணியாற்றி வந்துள்ளார்.
 
கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது சொந்த ஊரான தேனியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
என்ன நடந்தது?
நேற்றைய தினம் இரவு காவல்துறை அதிகாரி ஒருவரின் மகன் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு திரும்பியுள்ளார்.
 
கடந்த 2 நாட்களாக விஜயகுமார் மன உளைச்சலில் இருந்ததாக சக அதிகாரிகளிடம் பகிர்ந்துள்ளார். கடந்த 2 வருடங்களாக தூக்கமின்மைக்காக மாத்திரை பயன்படுத்தியதாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
 
டி.ஐ.ஜி விஜயகுமாரின் உடல் வைக்கப்பட்டுள்ள பிரேத பரிசோதனை கூடத்திற்கு கோவை மேற்கு மண்டல காவக் துறை தலைவர் சுதாகர், மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், மற்றும் நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்ட காவல் துறை அதிகாரிகள் வந்துள்ளனர். மேலும் சம்பவ இடத்தில் காவல் துறை ஆணையர் பாலகிருஷ்ணன் விசாரணை மேற்கொண்டார்.
விஜயகுமாரின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பிறகு அவரது சொந்த ஊரான தேனியில் அவரது இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டு இன்று மாலை நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
 
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
 
விஜயகுமார் மரணத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
 
"கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. விஜயகுமார் இ.கா.ப., அவர்கள் இன்று அகால மரணம் அடைந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். திரு. விஜயகுமார் அவர்கள் தனது பணிக்காலத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பணிப் பொறுப்புகளில் சிறப்பாகப் பணியாற்றி தமிழ்நாடு காவல்துறைக்குப் பெருமை சேர்த்தவர். அவருடைய இந்த மரணம் தமிழ்நாடு காவல் துறைக்குப் பேரிழப்பாகும்." என்று அவர் தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
 
முதலமைச்சருக்கு அண்ணாமலை கேள்வி
விஜயகுமார் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, "காவல்துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்களுக்காக ஓய்வு பெற்ற நீதியரசர் திரு சி.டி. செல்வம் அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையத்தின் அறிக்கை என்ன ஆனது? காவல்துறையினரின் பணிச்சுமையை குறைக்க, தமிழக காவல்துறையில் உள்ள 10,000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்ப முதலமைச்சர் எடுத்த நடவடிக்கைகள் என்ன?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
 
விஜயகுமார் தற்கொலை பற்றி டிவிட்டரில் பதிவிட்டுள்ள பாஜக தமிழ்நாடு துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, "உயர் காவல் துறை அதிகாரி, ஐ பி எஸ் பயின்றவர், மன உறுதி படைத்தவர் திடீரென விபரீத முடிவுக்கு சென்றுள்ளது வியப்பளிக்கிறது." என்று குறிப்பிட்டுள்ளார்.
 
"தற்கொலை எந்த பிரச்சினைக்கும் தீர்வல்ல என்றாலும், அலுவல் ரீதியாக அவர் மன அழுத்தத்திற்கு ஆளானாரா என்பது அறிந்து கொள்ளப்பட வேண்டும். தமிழக காவல் துறை அல்லாத சி பி ஐ போன்ற வேறு ஒரு அமைப்பின் மூலம் விசாரணை நடத்த தமிழக அரசு முன் வரவேண்டும். அப்படி செய்வதனால் மட்டுமே தவறுகள் நடந்திருந்தால் களையப்பட வாய்ப்புள்ளது என்பதோடு அலுவல் ரிதியாக அழுத்தங்கள் இல்லையென்பது தெளிவாகும் பட்சத்தில் காவல்துறை மீதான சிறு களங்கம் கூட துடைத்தெறியப்படும். இந்த கோரிக்கையை அரசியலாக பார்க்காமல் அரசின் நிர்வாகத்திற்கான ஆலோசனையாக கருதி செயல்படுத்துவது முதல்வருக்கு சிறப்பை தரும்." என்று அவர் பதிவிட்டுள்ளார்.
 
பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல்
விஜயகுமார் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், "பல்வேறு சிறப்புகளைக் கொண்ட விஜயகுமார் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டதை நம்ப முடியவில்லை." என்று கூறியுள்ளார்.
"அவரது மன அழுத்தத்திற்கான காரணம் குறித்து தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும். பொதுவாகவே காவல் பணி என்பது மன அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடியது தான். காவல் அதிகாரிகள் மன அழுத்தத்தை வென்றெடுக்க வேண்டுமே தவிர, அதற்கு இரையாகி விடக்கூடாது" என்று குறிப்பிட்டுள்ளார்.
 
தற்கொலை தீர்வல்ல
மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
 
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
 
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று காலை 10 மணிக்குள் 13 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

இரவில் பெய்த திடீர் கனமழை: எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளிகள் விடுமுறை?

தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்: முககவசம் அணிய அறிவுறுத்தல்..!

ஆட்சியில் இருக்கிறோம் என்ற ஆணவம் வேண்டாம்..! - முதல்வருக்கு தமிழிசை கண்டனம்

6 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments