Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பருவநிலை மாற்றம்: ஐபிசிசி பேரழிவு எச்சரிக்கையை இந்தியா ஏன் புறக்கணிக்க முடியாது?

Advertiesment
பருவநிலை மாற்றம்: ஐபிசிசி பேரழிவு எச்சரிக்கையை இந்தியா ஏன் புறக்கணிக்க முடியாது?
, புதன், 11 ஆகஸ்ட் 2021 (00:31 IST)
இந்தியாவின் பல பகுதிகளில் அடிக்கடி வெள்ளம் ஏற்படுகிறது
 
பருவநிலை மாற்றம் தொடர்பான ஐபிசிசியின் அறிக்கை உலக நாடுகளுக்கு ஓர் எச்சரிக்கை மணியை அடித்திருக்கிறது. கார்பன் உமிழ்வைக் குறைக்க வேண்டும் என்று அந்த அறிக்கை வலியுறுத்தியிருப்பதால் இந்தியா தனது பொருளாதாரத்தை மீட்க வேறு வழிகளைத் தேட வேண்டியிருக்கும்.
 
கார்பன் உமிழ்வில் உலகின் மூன்றாவது பெரிய நாடு இந்தியா. சீனாவும் அமெரிக்காவும் இந்தியாவுக்கு முன் இருக்கின்றன. பாரிஸ் உடன்பாட்டில் ஒப்புக் கொண்டதை விட 2005 இல் இருந்து 2030 க்குள் 33-35% வரை கார்பன் உமிழ்வு குறைக்கப்படும் என்று இந்தியா உறுதியளித்திருந்தது.
 
பூமியின் சராசரி வெப்பநிலை உயர்வை 2 செல்சியஸுக்கும் குறைவாக வைத்திருப்பது மற்றும் காலநிலை மாற்றத்தைத் தடுக்க 1.5 செல்சியஸ் என்ற இலக்கை நோக்கி பாடுபடுவது ஆகியவையே பாரிஸ் உடன்பாட்டின் குறிக்கோள்கள்.
 
ஆனால் கார்பன் உமிழ்வைக் குறைக்கும் நடவடிக்கைகளை உலக நாடுகள் தீவிரமாக முன்னெடுக்கவில்லை. அதனால் இரண்டாவதாகக் கூறிய இலக்கை எட்ட முடியாமல் போகிறது என ஐபிசிசியின் அறிக்கை கூறுகிறது. உலகின் வெப்பநிலையும் இதனால் உயர்கிறது.
 
கடலுக்குள் மூழ்கும் நாடுகளுக்கு ஐபிசிசி அறிக்கை பீதியை ஏற்படுத்துவது ஏன்?
உயரும் இந்திய பெருங்கடல் மட்டத்தால் அதிகரிக்கும் ஆபத்து - ஐபிசிசி அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்கள்
கார்பன் உமிழ்வில் முன்னணியில் இருக்கும் பல நாடுகள் வரும் 2050-ஆம் ஆண்டுகள் அதை பூஜ்ய நிலைக்கு கொண்டு வரத் தீர்மானித்திருக்கின்றன. சீனா 2060 வரை அவகாசம் கேட்டிருக்கிறது. ஆனால் இந்தியா இது தொடர்பாக எதையும் தீர்மானமாகச் சொல்லவில்லை.
 
ஆனால் உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடாகவும் பருவநிலை அபாயக் குறியீட்டில் ஏழாவது இடத்திலும் உள்ள இந்தியா, இப்போது வெளியாகி இருக்கும் ஐபிசிசி அறிக்கையை அவ்வளவு எளிதாகப் புறக்கணித்துவிட முடியாது.
 
ஐபிசிசி அறிக்கையின் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், வெப்பமயமாதல் காரணமாக பூமியில் ஏற்கெனவே நடந்திருக்கும் சில சூழல் மாற்றங்களை மீண்டும் சரி செய்யவே முடியாது என்பதுதான்.
 
தீவிரமான வானிலை நிகழ்வுகளால் வேளாண்மை பாதிக்கப்படுகிறது
 
"ஒட்டுமொத்த பருவநிலை அமைப்பில் ஏற்பட்டிருக்கும் சமீபத்திய மாற்றங்களின் அளவும், பல அம்சங்களின் தற்போதைய நிலையும் இதற்கு முன் பல நூற்றாண்டுகள் முதல் பல ஆயிரம் ஆண்டுகள் வரை இல்லாதாவை" என்று ஐபிசிசியின் அறிக்கை கூறுகிறது.
 
கடல்கள் மற்றும் வளிமண்டலம் போன்ற மனிதனால் பாதிக்கப்பட்ட காலநிலை அமைப்புகளால் ஏற்படும் தீவிர பருநிலை மாற்ற நிகழ்வுகள் இன்னும் மோசமடையும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
 
"சில பருவநிலை அமைப்புகள் மனிதர்கள் ஏற்படுத்திய வெப்பமயமாதல் காரணமாக முற்றிலுமாக முடங்கிவிட்டன" என்று பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தின் பனிப்பாறை நிபுணரும் சமீபத்திய ஐபிசிசி அறிக்கை தயாரித்த குழுவில் இடம்பெற்றவருமான பேராசிரியர் ஜோனாதன் பாம்பர் பிபிசியிடம் கூறினார்.
 
"எனவே, நாம் அனைத்து கார்பன் உமிழ்வையும் நிறுத்திய பிறகும்கூட சில பாதிப்புகள் ஏற்படும்."
 
ஐபிசிசி அறிக்கையில் தெற்காசியா பற்றி இருப்பது என்ன?
21-ஆம் நூற்றாண்டில் தெற்காசியாவில் வெப்ப அலைகளும் ஈரப்பதமான வெப்ப அழுத்தமும் மிகவும் தீவிரமாகவும் அடிக்கடியும் நிகழும் என்று ஐபிசிசி அறிக்கை கணித்துள்ளது.
 
வருடாந்திர மற்றும் கோடைகால மழைப்பொழிவு அதிகரிக்கும் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.
 
"21-ஆம் நூற்றாண்டில் திபெத்திய பீடபூமி மற்றும் இமயமலை முழுவதும் பொதுவான ஈரப்பதம் மற்றும் மழைப்பொழிவு அதிகரித்துள்ளது."
 
நகரமயமாதல் காரணமாக வெள்ளம் போன்ற பாதிப்புகள் எந்த அளவுக்கு அதிகரிக்கின்றன என்பதையும் இந்த அறிக்கை எடுத்துக் காட்டுகிறது.
 
"புவி வெப்பமடைதல் அளவுகள் அதிகரிக்கும்போது மழைப்பொழிவு தீவிரமாக இருக்கும் நகர்ப்புறங்களில் வெள்ளப்பெருக்குக்கு அதிக சாத்தியம் உள்ளது" என ஐபிசிசி அறிக்கை கூறுகிறது.
 
வெள்ளம் மற்றும் நிலச்சரிவுக்கு வழிவகுக்கும் கடும் மழை, காட்டுத் தீயை ஏற்படுத்தும் வெப்ப அலைகள், அல்லது கடல் புயல்கள் மற்றும் சூறாவளிகள் போன்ற தீவிர வானிலை நிகழ்வுகள் பூமியின் பருவநிலை அமைப்புகளால் மாற்றத்துக்குள்ளாகின்றன.
,
பருவநிலை மாற்றத்தால் காட்டுத் தீ போன்ற தீவிர வானிலை நிகழ்வுகள் அதிகரிக்கின்றன
 
தணியாத வெப்பமயமாதலால் பருவநிலை அமைப்புகள் ஏற்கெனவே சீர்குலைந்திருந்தால், அவை பாதிக்கக்கூடிய தீவிரமான நிகழ்வுகள் இன்னும் உக்கிரமடைந்து அடிக்கடி நிகழக்கூடியவையாக மாறும்.
 
தீவிர வானிலையால் இடம்பெயரும் மக்கள்
கடந்த 10 தசாப்தங்களில், ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி மக்கள் வானிலை தொடர்பான பேரழிவுகளால் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர் என்று சர்வதேச தன்னார்வ அமைப்பான ஆக்ஸ்ஃபாம் தெரிவித்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் இதுபோன்ற பேரழிவுகளின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாகவும் அந்த அமைப்பு கூறுகிறது.
 
2000ஆம் ஆண்டிலிருந்து பருவநிலை மாற்றம் தொடர்பான நிகழ்வுகளால் 12.3 லட்சம் பேர் இறந்துள்ளதாகவும், 420 கோடி பேர் வறட்சி, வெள்ளம் மற்றும் காட்டுத்தீ ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஐநா மதிப்பிட்டுள்ளது.
 
கடந்த ஆண்டு அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட இந்தியாவின் முதல் பருவநிலை மாற்ற மதிப்பீட்டு அறிக்கை 1951 மற்றும் 2016 க்கு இடைப்பட்ட காலத்தில் தீவிர வானிலை நிகழ்வுகளின் எண்ணிக்கை மற்றும் தீவிரம் ஆகிய இரண்டும் கணிசமாக அதிகரித்துள்ளதாகக் கூறியது.
 
இந்த நூற்றாண்டின் இறுதியில் வெப்ப அலைகள் நான்கு மடங்கு தீவிரமடையும் என்று அந்த அறிக்கை எச்சரித்தது.
 
உலக வள அமைப்பு 2019-ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையின்படி, நீர் பற்றாக்குறை மிக அதிகமாக உள்ள 17 நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
 
நிலத்தடி நீர் மற்றும் மேற்பரப்பு நீர் ஆகியவை இந்தியாவில் இருப்பதை இது காட்டுகிறது. மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவில் பெரும்பரப்பு பாலைவனமாக இருக்கும் நாடுகளுடன் இந்தியாவும் பட்டியலிடப்பட்டுள்ளது.
 
 
கடந்த இரு தசாப்தங்களாக இந்தியாவின் பல பகுதிகள்வெள்ள அபாயம் கொண்டவையாக மாறியிருக்கின்றன
 
கடந்த ஆண்டு, ஆம்பன் புயல் என்ற ஒரேயொரு தீவிர வானிலை நிகழ்வு காரணமாக 1.3 கோடி மக்கள் பாதிக்கப்பட்டார்கள். 90 கோடி ரூபாய்க்கும் அதிகமாகச் சேதம் ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டது.
 
கொரோனாவை காரணமாகக் கூற முடியாது
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய பொருளாதாரம் மீண்டு எழ முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது.
 
கார்பன் உமிழ்வைப் பூஜ்ஜியமாகக்க அல்லது, கார்பன் உமிழ்வைக் குறைப்பதில் புதிய இலக்கை அடைவதற்கான எந்தத் தேதியையும் இந்திய அரசு அறிவிக்காமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.
 
ஆனால் தொற்றுநோய் இருப்பதால், பருவநிலை மாற்றத்தால் முடுக்கிவிடப்பட்ட தீவிர வானிலை நிகழ்வுகள் நிற்கவோ, வேகத்தைக் குறைக்கவோ செய்யப் போவதில்லை.
 
கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்பதற்கு கார்பனை உமிழும் எரிபொருள்களை அதிகமாகப் பயன்படுத்த முயன்றால், பருவநிலை மாற்றப் பேரழிவுகள் மேலும் தீவிரமடையக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இது பூமியை மேலும் சூடாக்கும்.
 
சீர்குலைந்த காலநிலை அமைப்புகளால் முடுக்கப்படும் தீவிர வானிலை நிகழ்வுகளை இந்தியா நேருக்கு நேர் நின்று சந்திக்க வேண்டும். கார்பன் குறைப்பு இலக்குகளை உயர்த்தலாமா வேண்டாமா என்ற பிரச்னையை இப்போதைக்கு நிறுத்த முடிவெடுப்பது கூட அதன் ஓர் அம்சம்தான்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மகன்கள், மகள்கள் தினம்...இணையதளத்தில் டிரெண்டிங்