Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பருவநிலை மாற்றம்: வெள்ளத்தையும், வெப்பத்தின் தீவிரத்தையும் முன் கணிக்கத் தவறிய அறிவியல்

பருவநிலை மாற்றம்: வெள்ளத்தையும், வெப்பத்தின் தீவிரத்தையும் முன் கணிக்கத் தவறிய அறிவியல்
, சனி, 17 ஜூலை 2021 (23:58 IST)
ஜெர்மனி வெள்ளப்பெருக்கையும், வட அமெரிக்காவில் வீசிய வெப்ப அலையையும் கணிக்கத் தவறிவிட்டதாக முன்னணி சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் ஒப்புக்கொண்டனர்.
 
ஆனால், புவி வெப்பநிலை வேகமாக அதிகரிப்பது நாசம் விளைவிக்கும் வெப்ப அலைகளையும், பெரு வெள்ளத்தையும் கொண்டுவரும் என்று பல பத்தாண்டுகளாக சரியாகவே எச்சரித்து வந்தனர்.
 
ஆனால், அது போன்ற வானிலை சீற்றங்களின் தீவிரத்தை துல்லியமாக முன் கணிக்கும் அளவுக்கு தங்கள் கணினிகள் வலிமையானவை அல்ல என்று அவர்கள் கூறுகின்றனர்.
 
உலக நாடுகள் தங்களுக்குள் பொதுவாக பருவநிலைக்கான சூப்பர் கம்ப்யூட்டரை நிறுவ கூட்டாக செலவிடவேண்டும் என்கிறார்கள் அவர்கள்.
 
பருவநிலை மாற்றம், வானிலை ஆகியவற்றை முன் கணிக்க கணினிகள் மிக முக்கியமானவை.
 
பருவநிலை மாற்றத்துக்கான நாடுகளிடையிலான குழு (IPCC), பருவநிலை மாற்றம் தொடர்பாக கூறும் கருத்துகளுக்கு கணினிகள் உருவாக்கும் கணக்கீடுகளே வலுவான அடிப்படையை வழங்கும்.
 
ஐபிசிசி குழு உருவாக்கும் பருவநிலை தொடர்பான கணினி மாதிரிகள் சிறப்பானவை அல்ல என்று எச்சரிக்கிறார் பிரிட்டனின் முன்னாள் வானிலை மைய முதன்மை அறிவியலாளர் பேராசிரியர் டேம் ஜூலியா ஸ்லிங்கோ.
 
பிபிசி நியூசிடம் பேசிய அவர் தீவிர வானிலைகளை உருவாக்கும் இயற்பியல் விதிகளை புரிந்துகொண்டு பருவநிலை மாதிரிகளை உருவாக்குவதில் தீவிர பாய்ச்சலை ஏற்படுத்துவதற்கு ஒரு சர்வதேச மையம் தேவை என்று அவர் கூறினார். "அதை செய்யாவிட்டால், முன்னெப்போதும் இல்லாத வகையில் தொடர்ந்து வேகம் காட்டும் தீவிர வானிலைகளை நாம் குறைவாக மதிப்பிடுவது தொடரும்" என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
 
தயார் நிலையில் இல்லாதபோது சமூகம் சந்திக்க நேர்கிற தீவிர வானிலைகளால் ஏற்படும் இழப்புகளை ஒப்பிடும்போது அந்த கணினிகளை உருவாக்க செலவிட வேண்டிய பல நூறு கோடிகள், ஒன்றுமே அல்ல என்றும் அவர் கூறுகிறார்.
 
நவம்பரில் நடக்கவுள்ள COP26 பருவநிலை உச்சிமாநாட்டில் இதற்கான ஒரு முன்னெடுப்பை டேம் ஜூலியா மேற்கொள்வார்.
 
அவரும் மற்ற பிற விஞ்ஞானிகளும், பருவநிலை மாற்றம் ஒரு அவசர நிலை என்பதை ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால், எந்த அளவுக்கான அவசரநிலையில் நாம் இருக்கிறோம் என்பதை சொல்ல முடியாது. காரணம், அதை அளவிடுவதற்கான கருவிகள் நம்மிடம் இல்லை என்கிறார் ஆக்ஸ்ஃபோர்டு பேராசிரியர் டிம் பால்மர்.
 
"கனடாவில் ஏற்பட்ட வெப்ப அலைகளைப் போன்றவற்றை நாம் துல்லியமாக முன் கணிக்க வேண்டுமானால், ஐரோப்பிய அணுக்கரு ஆராய்ச்சிக் கழகத்துக்கு (CERN) உள்ளதைப் போன்ற பெரிய லட்சியமும் அர்ப்பணிப்பும் தேவை என்கிறார் அவர்.
 
வட அமெரிக்காவோ, ஜெர்மனியோ இந்த ஆண்டு எதிர்கொண்டதைப் போன்ற வெப்ப அலைகளையும், கடும் வெள்ளத்தையும் அல்லது அது போன்ற தீவிர வானிலையையும் 20 ஆண்டுகளுக்கு ஒரு முறை சந்திக்க வேண்டியிருக்குமா, 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை அப்படி வருமா, ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறையா? இல்லை ஆண்டுதோறும் வருமா? என்பதை ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிடவேண்டும். இந்த அளவுக்கான துல்லிய மதிப்பீடு இப்போதுள்ள நிலையில் சாத்தியமில்லை.
 
பருவநிலை மாற்றம் எவ்வளவு மோசமாக இருக்கும் என்பதைப் பற்றி ஐபிசிசி கூறும் என்று காத்துக்கொண்டிருப்பது வீண் வேலை என்று சில விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
 
காரணம், பருவநிலை மாற்றம் தொடர்பான எல்லா அறிவையும் ஓரிடத்தில் குவித்து திரட்டி அது வெளியிடும் அறிக்கை, அது வெளியிடப்படும்போது காலாவதியான தகவலாக இருக்கும்.
 
"நமது ஸ்திரமான பருவநிலை சிதையும் வேகம் அதிகரிப்பது நிரூபிப்பது என்னவென்றால், பருவநிலை அவசரநிலை என்று வரும்போது நாம் மோசமான நிலையில் இருக்கிறோம்" என்று யூசிஎல் எர்த் சயின்சஸ் நிறுவனத்தை சேர்ந்த பேராசிரியர் பில் மெக் குயிர் கூறினார்.
 
ஐபிசிசி அறிக்கைகள் மிகவும் மிதமானவை, கருத்தொற்றுமையின் அடிப்படையில் உருவாக்கப்படுகிறவை. ஐபிசிசி ஆவணங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளாத சக அறிஞர்களால் மதிப்பிடப்பட்ட பல ஆய்வேடுகள் மோசமான நிலைமைகள் உருவாகும் வாய்ப்பு பற்றிப் பேசுகின்றன. நல்லது நடக்கும் என்பதற்கான நம்பிக்கையில் நாம் இன்னும் இருக்கும்போது, நாம் ஏன் மோசமான நிலைமைகளுக்கு தயாராக வேண்டும்? ஏன் கருத்தொற்றுமையால் எட்டும் நிலைப்பாடு மட்டுமே சரியாக இருக்கும் என்று நினைக்கவேண்டும்? என்கிறார் அவர்.
 
ஜூன் மாதம் பாகிஸ்தான் லார்கானாவில் ஏற்பட்ட வெப்ப அலையின்போது தங்களை குளிர்வித்துக்கொள்ள நீரில் கிடக்கும் மாடுகள்.
 
ஜூன் மாதம் பாகிஸ்தான் லார்கானாவில் ஏற்பட்ட வெப்ப அலையின்போது தங்களை குளிர்வித்துக்கொள்ள நீரில் கிடக்கும் மாடுகள்.
 
பருவநிலையைவிட மெதுவான வேகத்தில் செயல்படுகிறது ஐபிசிசி என்பது நன்கு அறிந்த விஷயம் என்கிறார் கேம்பிரிட்ஜ் பேராசிரியர் மைக் ஹுல்மே.
 
"பக்குவப்படவும், நிச்சயமற்ற தன்மையை பொருத்திப் பார்க்கவும் அறிவியல் காலம் எடுத்துக்கொள்ளும். வெளியிடப்படுவதற்கு முன்பாகவே ஐபிசிசி அறிக்கைகளை ஆட்கள் குறைத்து மதிப்பிட முயல்வது ஆபத்தானது" என்கிறார் அவர்.
 
"தீவிர வானிலை நிகழ்வுகள் ஏற்படுகின்றன என்பது உண்மை. வெப்ப அலைகள், தீவிர சூறாவளிகள் போன்ற சில நிகழ்வுகள் மிக மிக தீவிரமடைகின்றன. ஆனால், இவற்றை ஐபிசிசி மாதிரிகளைக் கொண்டு கணிக்க முடியும்" என்கிறார் ஹுல்மே.
 
இதனிடையே ஐபிசிசி மாதிரிகளில் உள்ள ஓட்டைகள் என்று தாம் கருதுகிறவற்றை அடைக்க பருவநிலை மாற்ற ஆலோசனைக் குழு ஒன்றை அமைத்தார் பிரிட்டன் அரசாங்க முதன்மை விஞ்ஞானி பேராசிரியர் சர் டேவிட் கிங்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓட்டல் விவகாரம்...நடிகர் சோனு சூட்டிற்கு நோட்டீஸ்