Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சீனா இந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி இலக்கை வைக்கப் போவதில்லை!

Advertiesment
சீனா இந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி இலக்கை வைக்கப் போவதில்லை!
, சனி, 23 மே 2020 (13:46 IST)
சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவி தற்போது பெருமளவு கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், அந்நாடு இதுவரை எடுத்திராத முக்கிய முடிவு ஒன்றை முதல்முறையாக எடுத்துள்ளது.
 
1990களிலிருந்து சீனா அதன் ஜிடிபி என சொல்லப்படும் உள்நாட்டு மொத்த உற்பத்தியை பதிவு செய்து வருகிறது. தற்போது கொரோனா வைரஸால் உலகளவில் பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ள நிலையில், இதில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சீனா இனி இந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி இலக்கை வைக்கப் போவதில்லை என அறிவித்துள்ளது.
 
சீனாவின் வருடாந்திர நாடாளுமன்ற கூட்டத்தில் பேசிய பிரதமர் லி கெக்கியங் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக சீனாவில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் வர்த்தகங்கள் கடுமையாக முடங்கிப் போயின. இதன் விளைவாக, உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரத்தை கொண்ட நாடு என்ற பெருமையை பெற்றிருந்த சீனா இந்த ஆண்டின் முதலாவது காலாண்டில் நாட்டின் ஜிடிபி 6.8 சதவீதம் வீழ்ந்தது.
 
கோவிட்-19 வைரஸ் பெருந்தொற்று உலக பொருளாதாரத்திலும் மற்றும் வர்த்தகங்கள் மீதும் செலுத்தியுள்ள தாக்கத்தால் சீனாவின் வளர்ச்சியை கணிப்பது என்பது கடினமாகியுள்ளது என்று பிரதமர் லி கெக்கியங் தெரிவித்துள்ளார்.
 
சீனாவில் அதிகரித்துவரும் வேலையில்லா திண்டாட்டம் சமூக ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்ற அச்சம் அதிகரித்து வருவதால் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளுக்கு சீன அதிபர் உறுதியளித்துள்ளார்.
 
கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையேயான உறவு கசந்து வரும் நிலையில், சீன பிரதமரின் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. சீனா மீது இன்னும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தெரிவித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்கா மற்றும் ஐரோப்பா மீது போலிச் செய்தி மற்றும் பிரசார ரீதியிலான தாக்குதலுக்கு சீன அதிபர் ஷி ஜின்பிங்கே காரணம் என்று தெரிவித்திருந்தார்.
 
அதேபோல், ஹாங் காங்கில் புதிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்தும் திட்டங்களை சீனா அறிவித்திருந்தது. கடந்தாண்டு, இந்த சட்டத்துக்கு எதிராக ஹாங் காங்கில் கடந்தாண்டு மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் வெடித்தது குறிப்பிடத்தக்கது.
சீனாவின் இந்த அறிவிப்புக்கு அமெரிக்க அதிபர் கடுமையாக எச்சரிகைகளை விடுத்துள்ளார். ஹாங் காங் மீது கூடுதல் கட்டுப்பாட்டைப் பெற முயற்சிக்கும் சீனாவின் எந்தவொரு முயற்சிக்கும் அமெரிக்கா கடுமையாக எதிர்வினை ஆற்றும் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 
இந்த வார தொடக்கத்தில், அமெரிக்க நிதி தரநிலைகளை பின்பற்றத் தவறினால் , அமெரிக்க பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்யும் சீன நிறுவனங்களை நீக்கும் ஒரு தீர்மானத்தை அமெரிக்க செனட் சபை ஒருமனதாக நிறைவேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எதிர்ப்பார்த்ததை விட கம்மி விலையில் சந்தைக்கு வந்த மோட்டோ!