Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கன்னித் தன்மை சான்றிதழ்: முதல் உறவில் கன்னித் திரையை தேடும் கணவர்கள்

Advertiesment
abuse
, சனி, 13 ஆகஸ்ட் 2022 (21:30 IST)
இரானில் பெண்களில் பலரும் அவர்களுடைய குடும்பத்தினரும் திருமணத்திற்கு முன்பு கன்னித்தன்மையோடு இருப்பதை முக்கியமானதாகக் கருதுகிறார்கள். அதை உறுதி செய்துகொள்ள சில நேரங்களில் ஆண்கள் கன்னித்தன்மை சான்றிதழைக் கேட்கிறார்கள். இந்த நடவடிக்கை, மனித உரிமைகளுக்கு எதிரானது என்று உலக சுகாதார அமைப்பு கருதுகிறது.
 
"நீ கன்னிப்பெண்ணாக இல்லாமல், என்னை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டாய். உண்மை தெரிந்திருந்தால் யாரும் உன்னை திருமணம் செய்துகொள்ள மாட்டார்கள்."
 
முதல் முறையாக உடலுறவு கொண்ட பிறகு மரியத்தின் கணவர் அவரிடம் இப்படிக் கூறியுள்ளார்.
 
தனக்கு ரத்தம் வரவில்லை என்றாலும், இதுவரை உடலுறவு கொண்டதில்லை என்று தன் கணவரைச் சமாதானப்படுத்த அவர் முயன்றார். ஆனால், மரியத்தின் கணவர் அவரை நம்பவில்லை. அவரை கன்னித்தன்மை சான்றிதழைப் பெறச் சொன்னார்.
 
கன்னித்திரை என்பது என்ன? உண்மையும் கட்டுக்கதைகளும்
இரானில், இது அசாதாரணமான விஷயமல்ல. நிச்சயத்திற்குப் பிறகு, பல பெண்கள் மருத்துவரிடம் சென்று, தாங்கள் இதுவரை உடலுறவு கொள்ளவில்லை என்பதை நிரூபிக்கும் சோதனையைச் செய்து கொள்கிறார்கள்.
 
இருப்பினும், உலக சுகாதார நிறுவனத்தின் கூற்றுப்படி, கன்னித்தன்மை சோதனை அறிவியல்ரீதியாகத் தகுதி பெறாத ஒன்று.
 
 
மரியமின் சான்றிதழில் அவரது கன்னித்திரை "நெகிழ்வுத்தன்மை கொண்டது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியென்றால், அவருக்கு உடலுறவுக்குப் பிறகும் ரத்தம் வராமல் இருக்கலாம்.
 
"இது என் சுயமரியாதையைக் காயப்படுத்தியது. நான் எந்தத் தவறும் செய்யவில்லை. ஆனால், எனது கணவர் என்னை அவமானப்படுத்தினார். அதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதனால் நான் சில மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றேன்," என்று அவர் கூறுகிறார்.
 
சரியான நேரத்தில் அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதால் உயிர் பிழைத்தார்.
 
"அந்த இருள் சூழ்ந்த நாட்களை என்னால் மறக்கவே முடியாது. அந்த நேரத்தில் நான் 20 கிலோ இளைத்திருந்தேன்."
 
இந்தப் பழக்கத்திற்கு எதிராக வலுக்கும் குரல்கள்
மரியமின் கதை இரானில் உள்ள பல பெண்களின் எதார்த்தமாக உள்ளது. திருமணத்திற்கு முன்பு கன்னியாக இருப்பது, பெண்களில் பலருக்கும் அவர்களுடைய குடும்பங்களுக்கும் இடையே இன்னமும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இது கலாசார பழைமைவாதத்தில் மதிப்புமிக்க ஒன்றாக, ஆழமாக வேரூன்றியுள்ளது.
 
100 ஆண்டுகள் வாழ என்ன செய்ய வேண்டும்?
ஆனால் சமீபத்தில், இது மாறத் தொடங்கியுள்ளது. கன்னித்தன்மை பரிசோதனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று நாடு முழுவதும் பெண்களும் ஆண்களும் பிரசாரம் செய்து வருகின்றனர்.
 
 
கடந்த நவம்பர் மாதம், இதுகுறித்த ஒரு ஆன்லைன் மனு, ஒரே மாதத்தில் சுமார் 25,000 கையொப்ப ஆதரவுகளைப் பெற்றது. கன்னித்தன்மை பரிசோதனையை இரானில் பலர் வெளிப்படையாக எதிர்த்திருப்பது இதுவே முதல் முறை.
 
"இது தனியுரிமையை மீறுவது, இது அவமானகரமானது," என்கிறார் நெடா.
 
அவர் தெஹ்ரானில் 17 வயது மாணவியாக இருந்தபோது, தனது காதலனிடம் தனது கன்னித்தன்மையை இழந்தார்.
 
"நான் பீதியடைந்தேன். என் குடும்பத்தினருக்குத் தெரிந்தால் என்ன நடக்கும் என்று அஞ்சினேன்."
 
எனவே, நெடா தனது கன்னித்திரையைச் சரிசெய்ய முடிவெடுத்தார்.
 
இந்தச் செயல்முறை சட்டவிரோதமானது அல்ல. ஆனால், சமூக ரீதியாக இது ஆபத்தான தாக்கங்களைக் கொண்டுள்ளது. ஆகவே, எந்த மருத்துவமனையும் இதைச் செய்ய ஒப்புக்கொள்வதில்லை.
 
மனிதர்கள் இறப்பது ஏன்?
எனவே நெடா, இதை ரகசியமாக அதிக விலைக்குச் செய்யக்கூடிய ஒரு தனியார் கிளினிக்கை கண்டுபிடித்தார்.
 
"நான் என் சேமிப்பையெல்லாம் அதற்குச் செலவழித்தேன். என்னுடைய மடிக்கணினி, கைபேசி, தங்க நகைகளை விற்றேன்," என்று அவர் கூறுகிறார்.
 
மேலும், இதில் ஏதேனும் தவறு நடந்தால் முழுப் பொறுப்பையும் ஏற்கவும் அவர் ஓர் ஆவணத்தில் கையெழுத்திட வேண்டியிருந்தது.
 
.
"நான் மிகுந்த வலியில் இருந்தேன். என்னால், என் கால்களை அசைக்க முடியவில்லை," என்று அவர் நினைவு கூர்ந்தார்.
 
அவர் பெற்றோரிடம் இந்த முழு விஷயத்தையும் மறைத்தார்.
 
"நான் மிகவும் தனிமையாக இருப்பதைப் போல் உணர்ந்தேன். ஆனால், அவர்கள் கண்டுபிடித்துவிடுவார்கள் என்ற பயம் எனக்கு வலியைப் பொறுத்துக்கொள்ள உதவியது என்று நினைக்கிறேன்."
 
கடைசியில் நேடா பொறுத்துக்கொண்ட சோதனையெல்லாம் அர்த்தமில்லாமல் போனது.
 
ஓராண்டு கழித்து, அவரை திருமணம் செய்ய விரும்பிய ஒருவரை அவர் சந்தித்தார். ஆனால், அவர்கள் உடலுறவு கொண்டபோது, அவருக்கு ரத்தம் வரவில்லை. கன்னித்திரையைச் சரிசெய்யும் செயல்முறை தோல்வியடைந்தது.
 
"அவரை ஏமாற்றி திருமணம் செய்துகொள்ள முயன்றதாக என்மீது குற்றம் சாட்டினார். நான் பொய் கூறுவதாகச் சொல்லி, என்னைத் திருமணம் செய்துகொள்ள இருந்தவர், என்னை விட்டுப் பிரிந்து சென்றார்."
 
கன்னித்தன்மை பரிசோதனை நெறியற்றது, அறிவியல் தகுதி பெறாதது என்று உலக சுகாதார நிறுவனம் கண்டித்த போதிலும், இந்தோனேசியா, இராக், துருக்கி உள்ளிட்ட பல நாடுகளில் இந்த நடைமுறை இன்னமும் மேற்கொள்ளப்படுகிறது.
 
நீதிமன்ற வழக்குகள், பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் போன்ற குறிப்பிட்ட சூழ்நிலைகளில் மட்டுமே கன்னித்தன்மை பரிசோதனையை மேற்கொள்வதாக இரானிய மருத்துவ அமைப்பு கூறுகிறது.
 
இருப்பினும், கன்னித்தன்மை சான்றிதழுக்கான பெரும்பாலான கோரிக்கைகள் இன்னமும் திருமணம் செய்யத் திட்டமிடும் ஜோடிகளிடமிருந்து வருகின்றன. எனவே அவர்கள் பெரும்பாலும் தங்கள் அம்மாக்களுடன் தனியார் கிளினிக்குகளுக்கு செல்கிறார்கள்.
 
ஒரு மகப்பேறு மருத்துவரோ மருத்துவச்சியோ ஒரு பரிசோதனையை மேற்கொண்டு சான்றிதழை வழங்குவார். இதில் பெண்ணின் முழுப் பெயர், அவரது தந்தையின் பெயர், அவரது தேசிய அடையாளம் மற்றும் சில நேரங்களில் அவரது ஒளிப்படம் இருக்கும். இது அவரது கன்னித்திரையின் நிலையை விவரிக்கும். மேலும், "இந்தப் பெண் கன்னிப்பெண்ணாக இருக்கிறார்" என்ற வாசகத்தையும் அந்தச் சான்றிதழ் உள்ளடக்கியிருக்கும்.
 
மருத்துவர் ஃபரிபா பல ஆண்டுகளாக இத்தகைய சான்றிதழை வழங்கி வருகிறார். இதுவொரு அவமானகரமான நடைமுறை என்பதை அவர் ஒப்புக்கொள்கிறார். ஆனால், அவர் உண்மையில் பல பெண்களுக்கு உதவுவதாக நம்புகிறார்.
 
"அவர்கள் தங்கள் குடும்பத்தினரிடமிருந்து வரும் அத்தகைய அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். சில நேரங்களில், ஏதேனும் ஜோடி திருமணத்திற்கு முன்பாக உடலுறவு வைத்திருந்து, அவர்கள் திருமணம் செய்துகொள்ள முயலும்போது, அவர்களுடைய குடும்பத்தினரின் முன், வாய்மொழியாக திருமணம் செய்யவுள்ள பெண் கன்னித்தன்மையை இழக்கவில்லை என்று பொய் கூறுவேன்," என்று அவர் கூறுகிறார்.
 
ஆனால், இன்னமும் பல ஆண்களுக்கு கன்னிப்பெண்ணை திருமணம் செய்வது அடிப்படையான விஷயமாக உள்ளது.
 
"திருமணத்திற்கு முன்பாக ஒரு பெண் தனது கன்னித்தன்மையை இழந்தால், அவர் நம்பகமானவராக இருக்க முடியாது. வேறோர் ஆணுக்காகத் தன் கணவரை அவர் விட்டுச் செல்லக்கூடும்," என்று ஷிராஸை சேர்ந்த 34 வயதான எலக்ட்ரீஷியன் அலி கூறுகிறார்.
 
 
தான் 10 பெண்களுடன் உடலுறவு கொண்டுள்ளதாகக் கூறும் அவர், "என்னால் அதைத் தடுக்க முடியவில்லை," என்கிறார்.
 
இரானிய சமுதாயத்தில் இரட்டை நிலை உள்ளது என்பதை அலி ஏற்றுக் கொள்கிறார். ஆனால், பாரம்பர்யத்தை உடைப்பதற்குரிய காரணம் எதுவும் இருப்பதாக அவர் நினைக்கவில்லை.
 
"பெண்களை விட ஆண்களுக்கு அதிக சுதந்திரம் இருப்பதை சமூக விதிமுறைகள் ஏற்றுக் கொள்கின்றன" என்ற அலியின் பார்வை பலரிடமும், குறிப்பாக இரானின் கிராமப்புற, பழைமைவாத பகுதிகளில் இருக்கிறது. கன்னித்தன்மை சோதனைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் ஒருபுறம் பெருகி வந்தாலும், இந்தக் கருத்து இரானிய கலாசாரத்தில் மிக ஆழமாக வேரூன்றியிருப்பதால், அரசு இந்த நடைமுறைக்கு முழுமையாகத் தடை விதிப்பது சாத்தியமில்லை என்று பலர் நம்புகிறார்கள்.
 
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தனது உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற, தவறான கணவருடன் வாழ்ந்த மரியம் இறுதியாக நீதிமன்றத்தின் மூலம் விவாகரத்து பெற முடிந்தது.
 
சில வாரங்களுக்கு முன்பு தான் அவர் முழுமையாகப் பிரிந்தார்.
 
 
"ஆண் ஒருவரை மீண்டும் நம்புவது மிகவும் கடினமாக இருக்கும். எதிர்காலத்தில் நான் திருமணம் செய்து கொள்வதை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை," என்று அவர் கூறுகிறார்.
 
பல்லாயிரக்கணக்கான பெண்களோடு, அவரும் கன்னித்தன்மை சான்றிதழ் வழங்குவதை நிறுத்துவதற்காக வளர்ந்து வரும் ஆன்லைன் மனுக்களில் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளார்.
 
 
அவருடைய வாழ்நாளிலேயே, உடனடியாக எதுவும் மாற வேண்டுமென்று அவர் எதிர்பார்க்கவில்லை என்றாலும், தன் நாட்டில் பெண்கள் அதிக சமத்துவத்தை எதிர்காலத்தில் ஒருநாள் பெறுவார்கள் என்று நம்புகிறார்.
 
"இது ஒரு நாள் சாத்தியமாகும் என்று நம்புகிறேன். எதிர்காலத்தில் நான் எதிர்கொண்டதை எந்தப் பெண்ணும் எதிர்கொள்ள வேண்டியிருக்காது என்று நம்புகிறேன்,"
 
நேர்காணல் அளித்தவர்கள் அனைவரின் பெயர்களும் அவர்களின் அடையாளங்களைப் பாதுகாப்பதற்காக மாற்றப்பட்டுள்ளன.
 

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திரு.சிந்தை AMD.இஸ்மாயில் அவர்கள் காலமான செய்தியறிந்து விசாரித்த தமிழ்மகன் உசேன்