Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

லால் சிங் சத்தா விமர்சனம் - வலதுசாரிகள் எதிர்த்த அமீர்கான் திரைப்படம் எப்படியிருக்கிறது?

laal singh chadda
, வெள்ளி, 12 ஆகஸ்ட் 2022 (15:06 IST)
ஆமிர்கான் நடித்து வெளியாகியிருக்கும் லால் சிங் சத்தா, ஹாலிவுட்டில் வெளிவந்து பெரும் வெற்றிபெற்ற Forrest Gump படத்தின் ரீ - மேக். இந்தப் படம் இந்தியா முழுவதும் இந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் வெளியாகியிருக்கும் நிலையில், இந்தப் படத்தின் விமர்சனங்களை ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.

இது ரீ - மேக் திரைப்படம் என்றாலும்கூட, "தேவையான இடங்களில் நிலப்பரப்புக்கு தகுந்தாற்போல சில காட்சிகளும், திரைக்கதையும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அந்த மாற்றங்கள் படத்தை பாதிக்காமலிருந்தது சிறப்பு." என்கிறது இந்து தமிழ் திசை நாளிதழ்.
"வெறும் நான்கு பேரால் ஆக்கிரமிக்கப்பட்டதுதான் லாலின் உலகம். அன்பும், கருணையும், பாசமும், ஏக்கமும், ஏமாற்றமும், வலியும் நிரம்பிக் கிடக்கும் அந்த உலகத்திற்குள் நம்மையும் கைப்பிடித்து அழைத்துச் சென்று தன்னுடைய வாழ்வின் வெவ்வேறு காலக்கட்டங்களில் நடக்கும் சம்பவங்களை அழகான கதையாகத் தொகுத்து சொல்லும் படம் தான் 'லால் சிங் சத்தா'." என இந்தப் படத்தின் கதையை விவரிக்கிறது இந்து தமிழ் திசை.

இந்தப் படத்தில் ஆமிர் கான், கரீனா கபூரின் நடிப்பு மிகச் சிறப்பாக இருப்பதாகக் குறிப்பிடுகிறது நியூஸ் 18 தமிழ் இணைய தளம். "இந்தப் படத்தின் நடிகர்கள் தேர்வு கச்சிதமாக அமைந்துள்ளது. ஆமிர்கான் தன்னுடைய கதாபாத்திரத்தை அத்தனை கச்சிதமாக செய்துள்ளார். அனைவர் மீதும் அன்பு செலுத்தும் போது, காதலை வெளிப்படுத்தும் போது, தன் எதிரையையே நட்பு பாராட்டும் போது என அனைத்து இடங்களிலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அதேபோல் தன் கனவு பயணத்தில் சந்திக்கும் ஏமாற்றம், தோல்வி, விரக்தி, காதல் என பல பரிமாணங்களை வெளிப்படுத்தியுள்ளார் கரீனா கபூர். மேலும் ஷாருக்கானின் சிறப்பு தோற்ற காட்சி அனைவரையும் ரசிக்க வைக்கும்." என்கிறது அந்த இணைய தளம்.

படத்தின் நீளம் ரொம்பவுமே அதிகம் என்கிறது தினமலர் இணையதளம். "ஆமிர் கான் அப்பாவித்தனமான நடிப்பில் ஆங்கோங்கே அனுதாபப்பட வைக்கிறார், சில இடங்களில் அழ வைக்கிறார் அமீர். ஆனாலும், ஒரு கட்டத்தில் அவை போரடிக்கவும் வைக்கின்றன.

படம் முழுவதும் வரவில்லை என்றாலும் திடீர் திடீரென வந்து போகிறார் கரீனா கபூர். மாடலிங் செய்து, பாலிவுட் நடிகையாக வர வேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஆனால், சினிமா ஆசையில் பாலிவுட் சென்று ஏமாந்து போய் ஒருவருக்கு ஆசை நாயகியாக வலம் வருகிறார். திடீரென அமீர்கானை வந்து சந்தித்து அவருடன் ஒரு இரவைக் கழிப்பதெல்லாம் நம்ப முடியவில்லை. இப்படி பல இடங்களில் சினிமாத்தனமான காட்சிகள் இடம் பெறுகின்றன.

படத்தின் நீளம் ரொம்பவே அதிகம். இடைவேளை வரையிலான காட்சிகள் போவது தெரியவில்லை. ஆனால், அதற்குப் பிறகு படம் எப்போது முடியும் என நம் பொறுமையை சோதிக்கிறது. காதல் கதையா, சென்டிமென்ட் கதையா, தன்னம்பிக்கைக் கதையா என பிரித்து சொல்ல முடியாமல் அனைத்தையும் ஒரே படத்தில் கொட்டி ஓவர் டோஸ் ஆக்கிவிட்டார்கள். அதுவே படத்திற்கு வில்லனாக அமைந்துவிட்டது" என்ற விமர்சனங்களை முன்வைத்துள்ளது தினமலர் இணைய தளம்.

விமர்சனங்கள் இருந்தபோதும், ஃபாரஸ்ட் கம்ப் படத்தை இந்தியாவுக்கு ஏற்றபடி மாற்றியிருக்கிறார்கள் என்கிறது தினமணி.

"ஃபாரஸ்ட் கம்ப் படத்தை இந்தியாவுக்கு ஏற்றபடி வெகு சிறப்பாக மாற்றியிருக்கிறார் அதுல் குல்கர்னி. படத்தில் இந்திரா காந்தி மரணம், பாபர் மசூதி இடிப்பு, கார்கில் போர், அண்ணா ஹசாரே உண்ணாவிரதம் என ஒவ்வொரு காலகட்டத்திலும் அப்போதைய அரசியல் முக்கிய நிகழ்வுகளை கதையின் போக்கில் இணைத்தது சுவாரஸ்யமாக இருக்கிறது.

படத்தை தமிழில் மொழிமாற்றம் செய்யும்போது இன்னும் மெனக்கெட்டிருக்கலாம். நிறைய வார்த்தைகள் கூகுளில் மொழிமாற்றம் செய்ததைப் போல வழக்கத்தில் இல்லாதவையாக இருக்கின்றன. பாடல் வரிகளிலும் அதே பிரச்சனை என்பதால் ரசிக்க முடியவில்லை.

ஃபாரஸ்ட் கம்ப் போல லால் சிங் சத்தா என்ற ஒருவரின் வாழ்க்கையின் சில அத்தியாயங்களை உணர்வுபூர்மாக சொல்ல முயன்றிருக்கிறார்கள். பஞ்சாப் பின்னணியில் கதை நகர்கிறது. இந்திய கலாச்சாரத்திற்கு ஏற்றபடி மாற்ற நிறைய முயன்றிருக்கிறார்கள். ஆனால், இன்னும் அழுத்தமாகச் சொல்லியிருக்கலாம். காரணம், நம்மால் உணர்ந்து கொள்ள முடியாத அளவுக்கு சில காட்சிகள் அந்நியமாக இருக்கின்றன. அதனால் படம் மெதுவாக நகர்கிறது என்ற உணர்வு ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.

ஃபாரஸ்ட் கம்பை இந்தியாவுக்கு ஏற்றபடி மாற்றியிருப்பது ஓகே. ஆனால், லால் சிங் சத்தாவை இன்னும் கவரும்படியாக சொல்லியிருக்கலாம்." என்கிறது தினமணி.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தொடர் விடுமுறையால் ஊருக்கு செல்லும் மக்கள்! – அமைச்சர் போட்ட புதிய உத்தரவு!