Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னையில் நீல, பச்சை வண்ணத்தில் மின்னிய கடல் - காரணம் என்ன? இது ஆபத்தானதா?

Chennai Beach in blue

Prasanth Karthick

, திங்கள், 21 அக்டோபர் 2024 (14:43 IST)

நேற்று முன்தினம் (சனிக்கிழமை) இரவு இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களை நீங்கள் கவனித்திருந்தால், பலரும் சென்னை கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டிய கடற்கரை பகுதிகளில் கடல் பச்சை, நீல வண்ணத்தில் பிரகாசமாக மின்னும் வீடியோக்களை வரிசையாகப் பகிர்ந்திருந்ததைப் பார்த்திருக்கலாம்.

 

 

வண்ணமயமான விளக்குகளுடன் ஏதோ கண்கவர் நிகழ்வு நடைபெறுவது போல இருந்தது அந்தக் காட்சி.

 

கடலில் ஏற்படும் இந்த விளைவை ஆங்கிலத்தில் ‘பயோலூமினசென்ஸ்’ (Bioluminescence) என அழைக்கின்றனர். தமிழில் ‘உயிரொளிர்வு’ என்கின்றனர்.

 

பொதுமக்கள் பலரும் இந்தக் காட்சியை பார்க்கக் கடற்கரைகளுக்குச் சென்றனர்.

 

வெள்ளி மற்றும் சனிக்கிழமை (அக்டோபர் 18, 19) நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரத்தில் இத்தகைய காட்சி தோன்றியது. இந்தக் காட்சியைக் காணவே, இரு தினங்களும் கடற்கரைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

 

மரக்காணம், மாமல்லபுரம் கடற்கரைகளிலும் இரண்டாவது நாளாக அக்டோபர் 19-ஆம் தேதி இது தென்பட்டது.

 

பாதுகாப்பு காரணமாக இரவு 11 மணிக்கு போல் மாநகர எல்லைக்குள் அமைந்திருக்கும் கடற்கரைகளுக்குச் செல்ல மக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என, இந்தக் காட்சியை நேரில் கண்ட பிபிசி தமிழ் செய்தியாளர் நித்யா பாண்டியன் கூறுகிறார்.

 

காவல்துறையினர் பாதுகாப்புப் பணிகளுக்கு நிறுத்தப்பட, கடல் நீரில் கால் வைக்க மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மக்கள், கூட்டமாகக் கடற்கரையில் நீண்ட தூரத்திற்கு நின்று கொண்டிருந்தனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, கடல் பச்சை நீல நிறத்தில் ஒளிர காத்துக் கொண்டிருந்தனர்.

 

கடலில் இருந்து வரும் அலைகள் ஒளிரத் துவங்கியதும் பொதுமக்கள் ஆர்வமாகக் கூச்சலிட்டு அந்த நிகழ்வைக் கொண்டாடினார்கள். தங்களது செல்போன்களில் அந்தக் காட்சிகளைப் புகைப்படங்களாகவும் வீடியோக்களாவும் பதிவு செய்து மகிழ்ந்தனர்.

 

சென்னை திருவான்மியூர் மற்றும் பாலவாக்கம் கடற்கரையில் பொதுமக்களின் தொடர் வருகை காரணமாக நள்ளிரவு 1.30 வரை கடற்கரையில் மக்கள் நடமாட்டம் இருந்தது. போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன.

 

கடல் ஒளிர்வது ஏன்? ‘பயோலூமினசென்ஸ்’ என்றால் என்ன?

 

அதன் தமிழ் வார்த்தையான ‘உயிரொளிர்வு’ என்ற வார்த்தையே அதன் அர்த்தத்தை விளக்கப் போதுமானதாக இருக்கிறது.

 

அதாவது, கடலில் உள்ள, ஒளியை உமிழும் தன்மை கொண்ட நுண்ணுயிரிகள், வேதியியல் விளைவுகள் காரணமாக ஒளியை உமிழ்வதே ‘உயிரொளிர்வு’ என்கின்றனர், அறிவியலாளர்கள்.

 

ஆனால், அது ஏன் எப்போதும் நடப்பதில்லை? அரிதாக மட்டுமே நடப்பது ஏன்? அந்த உயிரினங்கள் எதற்காக சில நேரங்களில் மட்டுமே ஒளியை உமிழ்கின்றன? என்ற கேள்விகளை, எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையின் ‘ஃபிஷ் ஃபார் ஆல்’ (Fish For All Centre) மையத்தை வழிநடத்திவரும் கடல் உயிரியலாளர் வேல்விழியிடம் முன்வைத்தோம்.

 

“இது ஓர் இயற்கையான நிகழ்வுதான். பிளாங்டான் எனும் பாசி வகை (Plankton), பூஞ்சைகள், வைரஸ், பாக்டீரியாக்கள் போன்ற கடல்வாழ் நுண்ணுயிரிகளின் உடலில் நடக்கும் வேதியியல் மாற்றம் காரணமாக, அவை ஒளியை உமிழும்போது, இத்தகைய விளைவு ஏற்படுகிறது. இவற்றை, ஒளியை உமிழும் உயிரினங்கள் என்கிறோம்” என கூறுகிறார் வேல்விழி.

 

கடலில் அதிகளவிலான இரையை எடுப்பதற்கோ அல்லது தன்னை கொல்ல வரும் பெரிய உயிரினத்திடமிருந்து (predators) காத்துக்கொள்ளும் பொருட்டோ அல்லது தன் இணையை கவரும் பொருட்டோ இத்தகைய வேதியியல் மாற்றம் ஏற்படுவதாக வேல்விழி கூறுகிறார்.

 

ஆனால், இது அரிதானது இல்லை என்கிறார் அவர். “பெரும்பாலும் ஆழ்கடலில்தான் இப்படி நடக்கும். அதனால், இந்த விளைவை பெரும்பாலும் நம்மால் பார்க்க முடிவதில்லை. பருவமழை மற்றும் அதற்கு முந்தைய காலத்தில் கடற்கரை பகுதியில் ஏற்படுவதற்கும் வாய்ப்பிருக்கிறது” என்கிறார் அவர்.

 

'உயிரொளிர்வு' என்றால் என்ன?
 

‘உயிரொளிர்வு’ ஏன் ஏற்படுகிறது என்பது குறித்து கடந்த இரு தினங்களாகப் பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

 

நுண்ணுயிரிகள் இரை அல்லது ஆபத்து குறித்து தங்களுக்குள் செய்துகொள்ளும் சமிக்ஞை காரணமாகத்தான் இவ்வாறு கடல் ஒளிர்வதாக பலரும் பதிவிடுவதை பார்க்க முடிந்தது.

 

ஆனால், “இதனை சமிக்ஞை என்று கூற முடியாது. அந்த நுண்ணுயிரிகளில் உள்ள லூசிஃபெரஸ் (Luciferase) எனும் நொதி மூலமாக இத்தகைய விளைவு ஏற்படுகிறது. இதன்மூலம்தான் ஒளி உமிழப்படும். அவற்றில் உள்ள லூசிஃபெரின் (luciferin) எனும் மூலக்கூறு ஆக்சிஜனுடன் சேரும்போது அது ஆசிஜனேற்றம் (Oxidised) அடைந்து ஆற்றல் வெளியாகும். அதுதான் நமக்கு ஒளியாக தெரிகிறது,” என்கிறார் வேல்விழி.

 

சென்னையில் ஏற்பட்டுள்ள சமீபத்திய உயிரொளிர்வு நிகழ்வுக்கு மழை காரணமாக இருக்கலாம் என்றும் அவர் கூறுகிறார்.

 

டைனோஃப்ளாஜெல்லேட்ஸ் (dinoflagellates) எனும் இரு கசை உயிரிகளால்தான் சென்னையில் சமீபத்திய உயிரொளிர்வு நிகழ்வு ஏற்பட்டிருப்பதாக வேல்விழி கூறுகிறார்.

 

“சமீபத்தில் பெய்த மழையால், கடலில் அடித்து வரப்பட்ட உயிர்ச்சத்துக்களால் (Nutrients) இது நிகழ்ந்திருக்கலாம். இவை பெரும்பாலும் கடலின் மேல்மட்டத்தில் வசிக்கக்கூடிய உயிரினங்களாகும்” என்றார்.

 

இத்தகைய உயிரொளிர்வு பகலிலும் நடக்கலாம் என்றாலும், இரவு நேர இருளில்தான் அவை நன்றாக தெரிவதாகவும் அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.

 

'எந்த ஆபத்தும் இல்லை'
 

இத்தகைய உயிரொளிர்வு நிகழ்வை கடல் மாசு, காலநிலை மாற்றம் ஆகியவற்றுடன் சிலர் தொடர்புபடுத்துகின்றனர். ஆனால், இவற்றுடனான தொடர்பு குறித்து ஆராய்ச்சியில் நிரூபிக்கப்படவில்லை என்றும் இது ஓர் இயற்கையான நிகழ்வுதான் என்றும் வேல்விழி கூறுகிறார்.

 

இதனால், கடல்வாழ் உயிரினங்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று அவர் தெரிவித்தார்.

 

“ஆனால், சில சமயங்களில் எந்த நுண்ணுயிரிகளால் உயிரொளிர்வு ஏற்பட்டது என தெளிவாக தெரியாது என்பதால், நஞ்சை உமிழும் சில நுண்ணுயிரிகளும் அவற்றில் இருக்கலாம். எனவே, அந்த நீரைத் தொடுவதைத் தவிர்க்கலாம்,” என்கிறார் வேல்விழி.

 

கடந்தாண்டு அக்டோபர் மாதமும் சென்னையில் இத்தகைய நிகழ்வுகள் ஏற்பட்டதாக ஊடக செய்திகள் சில தெரிவிக்கின்றன. இதேபோன்று, புதுச்சேரி, மும்பை, கோவா கடற்கரைகளிலும் கடந்த காலங்களில் ‘உயிரொளிர்வு’ ஏற்பட்டிருக்கிறது.

 

உயிரொளிர்வு குறித்து பாரம்பரிய மீனவர்
 

தனது 15 வயதிலிருந்து மீன்பிடி தொழிலை மேற்கொண்டு வருபவர் ஊரூர் ஆல்காட் குப்பத்தைச் சேர்ந்த பாரம்பரிய மீனவர் பாளையம். இவருக்கு தற்போது 60 வயது. ‘உயிரொளிர்வு’ குறித்து மீன்பிடி தொழில் மூலம் அவருக்கு கைவரப் பெற்ற தகவல்களை பகிர்ந்துகொண்டார். “உயிரொளிர்வு நிகழ்வை நாங்கள் ‘கமரு’ என்கிறோம். இருளில்தான் இது நன்றாக தெரியும். கடலில் வண்டல் நீர் வரும்போது இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படலாம்” என்றார்.

 

இதுபோன்ற நிகழ்வுகளை வைத்து மீனவர்கள் மீன்வரத்து குறித்த பாரம்பரிய தகவல்களையும் பெற்றிருப்பதை பாளையம் பேசியதிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது.

 

“கமரு நேரத்தில் மீன்கள் கடலின் மேல்பகுதியில் இருக்கும். இதை வைத்து மீனவர்கள் மீன்பிடி தொழிலை மேற்கொள்கின்றனர். இந்த நிகழ்வால் கடல்வாழ் உயிரினங்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை” என்கிறார் அவர்.

 

"இந்த நிகழ்வை கண்டு பயப்பட வேண்டியதில்லை" என்றார் அவர்.

 

[பிபிசி தமிழ் செய்தியாளர் நித்யா பாண்டியன் அளித்த கூடுதல் தகவல்களுடன்.]

 

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு


Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திமுக கூறிய எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றப்படவில்லை: பிரேமலதா விஜயகாந்த்