திமுக கூறிய எந்த வாக்குறுதியும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
ஆம்பூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், திமுக கூறிய எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை என்றும், ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று உதயநிதி கூறினார்; ஆனால், நீட் தேர்வு இன்னும் ரத்து செய்யப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
ஒருநாள் மழைக்கே சென்னையின் நிலை இவ்வாறு இருக்கும்போது, டிசம்பர் மாதத்தில் பெருமழை வரும்போது என்ன ஏற்படும் என்று தெரியவில்லை. ஒருநாள் மழை வெள்ளத்தை வடிய செய்து விட்டு அதையே பெரும் சாதனை என்று பேசிக் கொண்டிருக்கின்றனர். வரவிருக்கும் பெரும் மழைக்கு இப்போதே திட்டமிட வேண்டும்; சரியான தீர்வு காண வேண்டும் என்று தெரிவித்தார்.
தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சைக்கும் ஆளுநருக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்றும், தூர்தர்ஷன் மன்னிப்பு கேட்டு விட்டதால் இந்த பிரச்சனை முடிந்து விட்டது என்றும் அவர் தெரிவித்தார்.
தேர்தலுக்காக செயல்படும் அரசாக திமுக உள்ளது என்றும், மக்களுக்காக அவர்கள் செயல்படவில்லை என்றும், குடும்பத்துடன் சுற்றுலா சென்று வருவது தான் அவர்களது முக்கிய வேலையாக இருக்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.