Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரூ.4,847.78 கோடி மதிப்புள்ள சொத்து வைத்துள்ள பாஜக: மற்ற கட்சிகள் நிலை என்ன?

Advertiesment
ரூ.4,847.78 கோடி மதிப்புள்ள சொத்து வைத்துள்ள பாஜக: மற்ற கட்சிகள் நிலை என்ன?
, சனி, 29 ஜனவரி 2022 (10:40 IST)
(இன்று 29.01.2022 சனிக்கிழமை இந்திய நாளிதழ்களில் வெளியான சில செய்திகளை தொகுத்தளிக்கிறோம்)
 
ஜனநாயக சீர்திருத்தங்கள் அமைப்பின் தேர்தல் கண்காணிப்பு கழகம், அரசியல் கட்சிகளின் சொத்துக்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டது, அதில் நாட்டிலேயே பாஜகவின் சொத்து மதிப்பு தான் அதிகம் எனத் தெரியவந்துள்ளதாக இந்து தமிழ் திசையில் செய்தி வெளியாகியுள்ளது.
 
பாரதிய ஜனதா, காங்கிரஸ், பகுஜன் சமாஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் தாமாகவே அளித்த தகவல்களை கொண்டு ஆய்வு செய்து தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளது அவ்வமைப்பு.
 
இதில் 2019-20 நிதியாண்டில், பாஜகவின் சொத்து மதிப்பு ரூ.4,847.78 கோடியாக முதலிடத்தில் உள்ளது. அடுத்தபடியாக பகுஜன் சமாஜ் கட்சி ரூ.698.33 கோடி சொத்து மதிப்புடன் 2வது இடத்திலும், நாட்டின் பழமையான கட்சியான இந்திய தேசிய காங்கிரஸ், ரூ.588.16 கோடி சொத்துடன் 3வது இடத்திலும் இருக்கின்றன.
 
7 தேசிய கட்சிகள் மட்டுமல்லாமல் 44 மாநிலக் கட்சிகளின் சொத்து மதிப்பும் கணக்கிடப்பட்டுள்ளது. அதன்படி ஒட்டுமொத்தமாக 7 தேசிய கட்சிகளில் 2019-20 ஆம் ஆண்டுக்கான சொத்து மதிப்பு ரூ.6,988.57 கோடி என்ற அளவிலும், மாநிலக் கட்சிகளின் சொத்து மதிப்பு கூட்டாக ரூ.2,129.38 என்ற அளவிலும் உள்ளது.
 
பாஜக ஃபிக்சட் டெபாசிட்டாக ரூ.3,253.00 கோடி வைத்துள்ளதாகவும், பகுஜன் சமாஜ் கட்சி தான் அந்த வகையில் ரூ.618.86 கோடி வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
 
மாநிலக் கட்சிகளில், 2019-20 ஆம் நிதியாண்டில் உத்தரப்பிரதேசத்தின் சமாஜ்வாதி கட்சிதான் ரூ.563.47 கோடி சொத்து மதிப்புடன் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி (டிஆர்எஸ்) கட்சி உள்ளது. அதன் சொத்து மதிப்பு ரூ.301.47 கோடி. மூன்றாவது இடத்தில் ரூ.267.61 கோடி சொத்து மதிப்புடன் அதிமுக உள்ளதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது
 
எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு பதவி உயா்வில் இடஒதுக்கீடு: மாநில அரசுகளே முடிவு செய்யலாம் - உச்சநீதிமன்றம்
 
அரசுப் பணிகளில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான பதவி உயா்வில் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த எந்தவொரு அளவுகோளையும் நிா்ணயம் செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை மறுப்பு தெரிவித்ததாக தினமணியில் செய்தி வெளியாகியுள்ளது.
 
அரசுப் பணி பதவி உயா்வுகளில் எஸ்சி, எஸ்டி பிரிவினரின் பிரதிநிதித்துவம் போதிய அளவில் இல்லாதது குறித்து கணக்கிடுவதை அந்தந்த மாநிலங்கள் வசமே விட்டுவிடுவதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனா்.
 
அரசுப் பணி பதவி உயா்வில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு இடஒதுக்கீடு அளிப்பதில் உள்ள தடைகளை நீக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் பல மாநில அரசுகள் வழக்கு தொடா்ந்தன. இந்த வழக்குகளை நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையில், நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, பி.ஆா்.கவாய் ஆகியோா் கொண்ட அமா்வு விசாரித்து வந்தது.
 
முன்னதாக, இந்த வழக்குகள் தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு ஒரு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. அதில், '75 ஆண்டுகள் ஆகியும் முன்னேறிய பிரிவினருக்கு இணையாக எஸ்சி, எஸ்டி பிரிவினரை முன்னேற்ற முடியவில்லை. அரசுப் பணி குரூப் 'ஏ' பிரிவில் எஸ்சி, எஸ்டி பிரிவினா் உயா் பதவியைப் பெறுவது மிகவும் கடினமாக உள்ளது. காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு எஸ்சி, எஸ்டி மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்காக சில உறுதியான அடிப்படையை உச்சநீதிமன்றம் வழங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது' எனத் தெரிவித்தது.
 
இந்த வழக்கு அண்மையில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசு சாா்பில் ஆஜரான அட்டா்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், 'எஸ்சி, எஸ்டி பிரிவினா் தேசிய நீரோட்டத்திலிருந்து பல ஆண்டுகளாக ஒதுக்கப்பட்டுள்ளனா். நாட்டு நலன் கருதி அவா்களுக்கு சம வாய்ப்பு வழங்க ஒரு சமநிலையை (இட ஒதுக்கீடு வடிவத்தில்) கொண்டுவர வேண்டும். எனவே, அரசுப் பணி பதவி உயா்வில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு இடஒதுக்கீட்டை மத்திய, மாநில அரசுகள் அமல்படுத்தும் வகையில் திட்டவட்டமான, தீா்க்கமான வழிமுறைகளை உச்சநீதிமன்றம் வகுக்க வேண்டும்' என்றாா்.
 
தொடா்ந்து அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், பின்னா் வழக்கின் தீா்ப்பை ஒத்திவைத்தனா்.
 
உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமா்வு முன்பு வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தீா்ப்பளித்த நீதிபதிகள் கூறியதாவது:
 
அனைத்துத் தரப்பு வாதங்களின் அடிப்படையில், தீா்ப்பை 6 புள்ளிகளாக பிரித்துள்ளோம்.
 
முதலாவதாக அளவுகோல்- 2018-ஆம் ஆண்டு ஜா்னைல் சிங் வழக்கு தீா்ப்பு, மண்டல் கமிஷன் வழக்கு ஆகியவற்றின் அடிப்படையில், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான பதவி உயா்வில் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த எந்தவொரு அளவுகோளையும் நிா்ணயம் செய்ய முடியாது.
 
பதவி உயா்வுக்கான அளவிடக்கூடிய தரவை சேகரிப்பதற்கான அளகை நிா்ணயம் செய்வதைப் பொருத்தவரை, அந்தத் தரவுகளைச் சேகரிப்பது மாநில அரசுகளின் கடமை என்பதை உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தெளிவுபடுத்தியுள்ளது.
 
அடுத்து, எஸ்சி, எஸ்டி பிரிவினரின் போதிய பிரதிநிதித்துவம் இல்லாதது குறித்த தகவலை சேகரிப்பது என்பது, ஒட்டுமொத்த பணிக் காலம் அல்லது பிரிவைக் குறிப்பதாக இருக்க முடியாது. மாறாக பதவி உயா்வு கோரப்படும் பதவியின் தரம் அல்லது வகையுடன் தொடா்புடையதாக இருக்க வேண்டும். அதாவது, பணியிடம் என்பது, பதவி உயா்வு பணிகளுக்கு அளவிடக்கூடிய தரவுகளைச் சேகரிப்பதற்கான ஓா் அலகாக இருக்க வேண்டும். மாறாக, எஸ்சி, எஸ்டி பிரிவினரின் ஒட்டுமொத்த பணிக் காலத்தையும் பிரதிபலிப்பதாக இருந்தால் அா்த்தமற்றதாகிவிடும்.
 
அந்த வகையில், விகிதாசார பிரதிநிதித்துவம் மற்றும் போதுமான பிரதிநிதித்துவம் உள்ளிட்ட அம்சங்களுக்குள் உச்சநீதிமன்றம் செல்ல விரும்பவில்லை. பொருத்தமான காரணிகளைக் கணக்கில்கொண்டு, பதவி உயா்வுகளில் எஸ்சி, எஸ்டி பிரிவினரின் பிரதிநிதித்துவம் போதிய அளவில் இல்லாதது குறித்து கணக்கிடுவதை அந்தந்த மாநிலங்கள் வசமே விட்டுவிடுகிறோம் என்று தீா்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளதாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெகாசஸ் உளவு மென்பொருளை பிரதமர் மோடி வாங்கினாரா? – பத்திரிக்கை செய்தியால் அதிர்ச்சி!