பொது அமைதியை குலைக்கும் விதமாக பதிவிட்டதாக பாஜக இளைஞரணி செயலாளர் வினோஜ் பி செல்வம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மத அடிப்படையில் வெறுப்புணர்வை தூண்டும் விதமாகவோ, பொது அமைதியை குலைக்கும் வகையிலோ செயல்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை ஏற்கனவே எச்சரித்துள்ளது. இந்நிலையில் தற்போது சென்னை கீழ்பாக்கத்தை சேர்ந்த இளங்கோவன் என்பவர் காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளார்.
அதில் பாஜக இளைஞரணி செயலாளரான வினோஜ் பி செல்வம் என்பவர் தொடண்ட்து தன்னுடைய ட்விட்டர் கணக்கு மூலமாக பொய்யான தகவலை, வதந்தியை மக்களிடையே பரப்பி வருவதாகவும், அந்த பதிவானது மதத்தின் அடிப்படையில் மக்களிடையே வெறுப்பையும், பகைமையையும் ஏற்படுத்தும் நோக்கிலும், பொது அமைதியை குலைக்கும் வகையிலும் உள்ளதாக புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வினோஜ் பி செல்வம் மீது போலீஸார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும் பொது அமைதியை குலைக்கும் விதமாகவும், மத வெறுப்பை தூண்டும் விதமாகவும் பதிவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார்.