பல நாடுகள் முடக்கநிலையை தளர்த்தத் தொடங்கியுள்ள நிலையில், ஊழியர்கள் தங்கள் அலுவலகங்களுக்குப் பணிக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர். நோய்த் தாக்குதல் முடியாத நிலையில், அலுவலகங்கள் எந்த அளவுக்குப் பாதுகாப்பாக இருக்கும் என்று அவர்கள் அச்சப்படுவது புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது.
அலுவலகங்களில் பழைய நடைமுறைகளுடன் சேர்த்து, அலுவலர்களை கண்காணிக்க தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
நீங்கள் அலுவலக வளாகத்தில் நுழையும் போது உடல் வெப்பத்தைக் கண்டறியும் தெர்மல் கேமராக்கள் பொருத்துதல் முதல், அருகில் இருக்கும் சக அலுவலரை நீங்கள் நெருங்கினால் எச்சரிக்கக் கூடிய ஒரு செயலி அல்லது உடலில் வைத்துக் கொள்ளும் சாதனம் போன்ற ஏதாவது இருக்கும். மைனாரிட்டி ரிப்போர்ட் என்ற திரைப்படத்தின் காட்சிகளைப் போல அது இருக்கலாம்.
ஆம்ஸ்டர்டாமில் உள்ள எட்ஜ் வளாகம், உலகில் அதிக ஸ்மார்ட்டான, நீண்டகால தேவைகளைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட பகுதியாக சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது. இப்போது தொற்றும் தன்மையுள்ள, ஆளைக் கொல்லக் கூடிய வைரஸ் தாக்குதல் சூழ்நிலையில் உணர்பொறிகள் (சென்சார்கள்) பொருத்திய அலுவலக ஏற்பாடுகளுக்கு அது மாறிக் கொண்டிருக்கிறது.
அதை உருவாக்கிய ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் உரிமையாளரான கோயன் வான் ஊஸ்ட்ரோம், உடனடியாக நிகழ வேண்டிய ''புத்திசாலித்தனமான'' சில மாற்றங்கள் உள்ளதாக பிபிசியிடம் கூறினார்.
காற்றின் தரம்
நோய்த் தொற்று காலத்தில் அலுவலகத்தில் கதவுகளைத் திறப்பது போன்ற விஷயங்களும் கூட ஆபத்தானவையாக இருக்கலாம்.
''இப்போது கையால் தள்ளி கதவைத் திறக்கிறார்கள். ஆனால் குரல் வழிக் கட்டுப்பாடு அல்லது ஒரு செயலி மூலமாக திறக்கும் வகையில் அதை மாற்ற வேண்டும். அப்படி செய்வதன் மூலம் வைரஸ் பரவாது என்பதை நாம் உறுதி செய்தால் போதும்.''
''ஒரு தளத்தில் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்பதை அறிய கேமராக்கள் உள்ளன. மென்பொருளில் மாற்றம் செய்தால், ஒவ்வொருவரும் எவ்வளவு இடைவெளியில் இருக்கிறார்கள் என்பதை அறிந்திட முடியும். அவர்கள் யாராவது இன்னொருவருக்கு மிக அருகில் இருந்தால் அவருடைய செல்போனுக்கு எச்சரிக்கை ஒலியை அனுப்ப முடியும்.''
''எல்லோரும் இதை விரும்ப மாட்டார்கள். அவர்களுடைய அந்தரங்கத்தில் தலையிடும் செயல்பாடுகளாக இதை பார்ப்பார்கள். எனவே, எல்லோரும் அலுவலகப் பணிக்குத் திரும்பியதும் இதைப் பயன்படுத்த வேண்டுமா என்பதைப் பற்றி நாங்கள் முடிவு செய்யவில்லை.''
எட்ஜ் வளாகத்தில் இருக்கும் அலுவலர்களுக்கு ஏற்கனவே ஒரு செல்போன் செயலிஉள்ளது. அலுவலக வெப்பநிலை எவ்வளவு உள்ளது, காற்றின் தரம் எப்படி உள்ளது என்ற தகவல்களை அதன் மூலம் அறிந்திட முடியும். கேண்டீனில் இருந்து மதிய உணவுக்கும் அந்த செயலி மூலமாகவே ஆர்டர் செய்திட முடியும்.
கடந்த காலத்தில் காற்றின் தரத்தைப் பற்றி யாரும் அவ்வளவாக கவலைப்படவில்லை. இப்போது புதிய காற்றின் சுழற்சி இல்லாமல் போனால் வைரஸ் தொற்றிக் கொள்ளும் ஆபத்து அதிகமாக இருக்கும் என்பதால், காற்றின் தரத்தைப் பற்றி மக்கள் கவலைப்படத் தொடங்கியுள்ளனர் என்று வான் ஊஸ்ட்ரோம் கருதுகிறார்.